Saturday, September 21, 2013

‘மோடி பிரதமரானால் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும்!’ - பாஜகவின் விமர்சனத்திற்கு எழுத்தாளர் அனந்தமூர்த்தி பதிலடி!



குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும் என்று, ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த்மூர்த்தி தெரிவித்தார்.
பெங்களூரில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற கன்னட எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப்பாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி பிரமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது கருத்தால் கோபம் அடைந்த பா.ஜ.க தலைவர்கள் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டனர். யூ.ஆர்.அனந்தமூர்த்தி இப்போதே நாட்டைவிட்டு வெளியேறட்டும் என்று பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே அநாகரிகமான கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், அனந்த் மூர்த்தியின் கருத்துக்கு முற்போக்கு எழுத்தாளர்கள் பரகூர் ராமசந்திரப்பா, கே.மருளுசித்தப்பா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையில், மோடி குறித்து தான் கூறியிருந்த விமர்சனம் தொடர்பாக பெங்களூருவில் எழுத்தாளர் அனந்த்மூர்த்தி கூறும்போது; ‘நரேந்திர மோடி பிரதமரானால், பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவார். மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும்.
முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, நரசிம்ம ராவ் ஆகியோர் ஆட்சி செய்த போது, பிரதமர் பதவிக்கு கவுரவம் கிடைத்தது. ஆனால், நரேந்திர மோடி பிரதமரானால், அந்தப் பதவியின் கவுரவம் களங்கப்பட்டுவிடும். பிரதமர் பதவிக்கான மரியாதை நரேந்திர மோடியால் சீர்கெடும்.
பாஜக தலைவர்கள் என்னைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வராதபோதே, பாஜகவினர் இப்படி விமர்சிக்கிறார்கள் என்றால், அவர் ஆட்சிக்கு வந்தால், நிலைமை என்ன கதியாகும்?
கடந்த காலத்தில் நேரு, இந்திரா காந்தியை விமர்சித்தபோது கூட இந்தளவுக்கு என்னை யாரும் தாக்கிப் பேசவில்லை.
ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இந்து மத தத்துவத்தை நான் ஏற்காததால், பாஜகவினர் எப்போதும் என்னை விமர்சிப்பார்கள்.
பாஜக ஒரு பாசிச கட்சி. இந்து மதத்தின் உண்மையான கோட்பாடுகளை அந்தக் கட்சியினர் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் விரோத ஆட்சி அல்ல. ஆனால், ஊழல் புரிந்துள்ளதால், அந்தக் கூட்டணி தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக நரேந்திர மோடியை தேர்ந்தெடுப்பது மட்டுமே தீர்வல்ல என்றார்’ அவர்.
Info : New india.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza