Monday, September 9, 2013

முஸாஃபர் நகர் கலவரம்: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு! 4 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மீது எப்.ஐ.ஆர். தாக்கல்!


muz

முஸாஃபர் நகர்: உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸாஃபர் நகர் மாவட்டத்தில் ராணுவம் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளது. வகுப்புக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். “காயமடைந்துள்ள 45 பேர் வெவ்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று உ.பி. மாநில உள்துறை செயலாளர் கமல் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறினார்.

தடை உத்தரவுகளை மீறியதற்காக ஹுக்கும் சிங், சுரேஷ் ரானா, பார்த்தெண்டு, சங்கீத் சோம் ஆகிய 4 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மீதும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஹரேந்திர மாலிக் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கலவரச் சூழல் நிலவும் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து கம்பெனி பி.ஏ.சி. படையினரும், அதே அளவிலான அதிரடி படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படாத கிராமங்களில் கலவரம் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி, 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு பதற்றம் நீடித்து வந்த நிலையில், சனிக்கிழமை இரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டனர்.
இந்த மோதலில், தொலைக்காட்சி ஒன்றின் பகுதிநேர நிருபர் ராஜேஷ் வர்மா, போலீஸ் புகைப்படக்காரர் இஸ்ரார் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 34 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இறந்தனர். சிலர் காணாமல் போய்விட்டனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கௌஷல் ராஜ் சர்மா கூறுகையில், “கலவரத்தைத் தொடர்ந்து சிலர் காணாமல் போய்விட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்” என்றார்.
மாவட்டத்தில் உள்ள போபா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 உடல்களும், சாபார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஓர் உடலும் ஞாயிற்றுக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டன.
கலவரத்தை அடுத்து மாவட்டத்தின் கோத்வாலி, சிவில் லைன்ஸ், நை மண்டி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க அதிரடிப்படையின் 5 கம்பெனிகளும், ஆயிரக்கணக்கான போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாநில காவல்துறை ஏ.டி.ஜி. (சட்டம்-ஒழுங்கு) அருண் குமார் கூறியது: “முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2 நாள்களுக்கு முன் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு கிராமத்தில் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பான போலியான ஒரு விடியோ காட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த விடியோ காட்சியை நாங்கள் முடக்கினோம். எனினும், துரதிருஷ்டவசமாக அந்தக் காட்சி அடங்கிய சி.டி.க்கள் அந்தக் கிராமத்தில் புழக்கத்தில் விடப்பட்டன. இதைத் தொடர்ந்து, இரு இடங்களில் மத ரீதியிலான மோதல்கள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து மக்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். அதன் பின், அரசியல் ரீதியிலான வன்முறையும் வெடித்தது. அங்கு நிலைமை இப்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சனிக்கிழமை இரவுக்குப் பின் எந்த அசம்பாவிதச் சம்பவமும் நடைபெறவில்லை. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு கொடி அணிவகுப்புகளை நடத்தியுள்ளனர். கலவரம் தொடர்பாக இதுவரை 52 பேரைக் கைது செய்துள்ளோம். நிலைமை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று நம்புகிறோம். நிலைமையை மென்மையாகக் கையாளுமாறு மாவட்ட ஆட்சியருக்கும் காவல்துறை எஸ்.பி.க்கும் சிறப்பு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளோம்” என்றார் அருண்குமார்.
இந்தக் கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். கலவரத்தில் உயரிழந்த தொலைக்காட்சி நிருபரின் குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடும், இறந்த மற்றவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

- thoothu online.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza