Monday, July 1, 2013

தலைவலி மற்றும் நீரிழிவு நோய்க்கான பிரபல மருந்துகளுக்கு அரசு தடை!

தலைவலிக்கு பயன்படுத்தும் அனால்ஜின் மாத்திரையால், உடலில் வெள்ளை அணுக்கள் குறைவது கண்டறியப்பட்டது. இதேபோல், நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் பியோகி லிடாஜோன் மாத்திரையால் வயிற்றில் புற்றுநோய் கிருமி ஏற்படுவது தெரிய வந்தது. இந்த மருந்தும் அதன் கூட்டு மருந்துகளும், நம் நாட்டில் ஆண்டிற்கு ரூ.600 கோடி மதிப்பிற்கு விற்பனையாகி வரும் சூழ்நிலையில் இந்த மருந்துகளுக்கு தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.


இத்தனைக்கும் அனால்ஜின் மருந்துக்கு 1977–ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும், 1997–ஆம் ஆண்டில் ஸ்வீடனிலும் தடை விதிக்கப்பட்டது. பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலும் தடை உள்ளது.மேலும் பியாக்லிடாசோன் மருந்துக்கு 2011ஆம் ஆண்டில் பிரான்சில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்னும் பல நாடுகளில் விற்பனையாகி வருகிறது.
தற்போது நாடாளுமன்ற நிலைக்குழு, வெளிநாடுகளில் இம்மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இது நோயாளிகள், டாக்டர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மருந்து நிறுவனங்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்திய மருந்து நிறுவனங்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் டீ.ஜி.ஷா இது குறித்து கூறுகையில், ‘‘பியாக்லிடாசோன் மருந்தை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருந்து இந்தியாவில் 2011–ஆம் ஆண்டிலிருந்து விற்பனையாகி வருகிறது. இதனால் எதிர்விளைவுகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்த மருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், கனடா உள்ளிட்ட பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்துக்கு தடை விதிப்பதால் நோயாளிகள் இதைக் காட்டிலும் 3 முதல் 4 மடங்கு வரை விலையுள்ள மருந்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்’’ என்று தெரிவித்தார்..
ஆனாலும் இந்த மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் வினியோகம் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Info: aanthai reporter

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza