நவம்பரில் (2009)மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஒன்றைத் தொடங்குவதற்கான சட்டம், ஏற்கெனவே இருந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை திருத்தி புதிய சட்டம் (UAPA) பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை இந்திய அரசு அவசரமாக உருவாக்கியுள்ளது. உருப்படியாக எந்த விவாதமுமின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டங்களின் மூலம், நாட்டை அரசு பயங்கரவாத அரசாக காங்கிரஸ் அரசு மாற்றியமைத்துள்ளது.
இதன் சிறப்பம்சம் என கருதப்படுபவை:
அணுவிசை பாதுகாப்பு, விமானக் கடத்தல் தடுப்பு, கொடிய பேரழிவுக்கான ஆயுதங்கள் தடுப்பு, நக்சல் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு தொடர்பான 8 வகை சட்டங்களால் தண்டிக்கப்படக் கூடிய பயங்கரவாதக் குற்றங்கள் நிகழ்ந்திருந்தால், அவற்றை இனி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும். இந்த அமைப்பின் சட்டப்படி, சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு, அவை இரகசியமாக விசாரணையை நடத்தும். சி.பி.ஐ. போன்ற மையப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று ஏற்கெனவே இருந்த நடைமுறை மாற்றப்பட்டு, தற்போதைய தேசிய புலனாய்வு அமைப்பு மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளை வெறும் தகவல் தெரிவிக்கும் உறுப்புகளாக மாற்றிவிட்ட இச்சட்டம், மாநில அரசுகளின் பெயரளவிலான உரிமைகளைக் கூட முடக்கி, மைய அரசிடம் வரம்பற்ற அதிகாரத்தைக் குவிக்கிறது.
இதன் சட்ட விதிகள்:
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்தச் சட்டமானது, பயங்கரவாத ""பொடா'' சட்டத்தின் மறு அவதாரமாக புதிய கொடிய விதிகளுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. "பொடா'' சட்டத்தைப் போலவே, இச்சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரை 180 நாட்களுக்குப் பிணை வழங்காமல் கொட்டடியில் அடைத்து வதைக்க முடியும். பயங்கரவாத குற்றம் நடந்த இடத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகையோ, அல்லது வேறு ஏதாவது தடயமோ இருந்தால் நீதிமன்றம் அவரைக் குற்றவாளிதான் என்று கருதி இச்சட்டப்படி கைது செய்ய முடியும். தான் நிரபராதி என்பதைக் குற்றம் சாட்டப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும். நாட்டின் ஐக்கியம் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினாலோ, அல்லது அச்சுறுத்துவது போல "பாசாங்கு'' செய்தாலோ கூட இச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய முடியும். ஒரு புலனாய்வுக்குத் தொடர்புடையது என்று கருதி போலீசு விவரம் கேட்டால் எவரும் முழுமையான தகவல் தரவேண்டும். இல்லையேல் இச்சட்டப்படி கைது செய்ய முடியும். பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு தருபவர்களுக்குக் கடும் தண்டனை, தகவல் தொடர்பை இடைமறித்துக் கேட்டு அதை ஆதாரமாகக் காட்டி ஒருவரைக் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்க கடும் விதிமுறைகள் என போலீசு, நீதித்துறைக்கு எல்லையற்ற அதிகாரமளிக்கும் வகையில் இப்புதிய "பொடா'' சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினரா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான வரையறை இச்சட்டத்தில் தெளிவாக இல்லாததால், இவர் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார் என்று குற்றம் சாட்டி, போலீசார் யாரையும் கைது செய்ய முடியும்.
ஏற்கெனவே "தடா'', "பொடா'' பயங்கரவாதச் சட்டங்கள் தலைவிரித்தாடியபோது, அப்பாவி முஸ்லிம்கள் தான் பெருமளவில் கைது செய்யப்பட்டு வதைக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டவர்களில் வெறும் 5 சதவீதத்தினர் மீதுதான் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. "பொடா'' சட்டத்தை உயிர்ப்பிக்க மாட்டோம் என்று வாக்களித்து ஆட்சிக்கு வந்த காங்கிரசு கூட்டணி அரசு, தீவிரவாத எதிர்ப்பில் கடுமையாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு, புதிய பெயரில் "பொடா'' சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதன் மூலம் அரசு பயங்கரவாதத்தைச் சட்டபூர்வமாக்கி, நாட்டைத் திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியுள்ளது.
ஏற்கெனவே மகாராஷ்டிராவில் "பொடா'' சட்டத்துக்கு இணையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளபோதுதான், தற்போதைய மும்பைத் தாக்குதல் நடந்துள்ள நிலையில், கடுமையான சட்டங்களால் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடித்து விட முடியாது. இத்தகைய பயங்கரவாதங்கள் குறிப்பிட்ட அரசியல் காரணங்களுடன் எழும் நிலையில், அவற்றுக்கு அரசியல் தீர்வு காண முயற்சிக்காமல், அடக்குமுறைச் சட்டங்களால் இவற்றை வீழ்த்திடவும் முடியாது. இத்தகைய அரசு பயங்கரவாத கருப்புச் சட்டங்களுக்கு எதிராகப் போராடாமல், நாட்டு மக்களின் குடியுரிமை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் முடியாது.
ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்:
காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்று ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதாகும். காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமின்றி, கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்திலும் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சட்டத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு அம்மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஜூலை 15, 2004 அன்று நடத்திய நிர்வாணப் போராட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற பெண் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த பத்தாண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
- தடா, பொடா போன்ற கொடிய கருப்புச் சட்டங்களைக் கூடத் தூக்கிச் சாப்பிட்டு விடக்கூடிய இப்பயங்கரவாதச் சட்டம், இந்தியா ‘குடியரசாக’ அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே கொண்டு வரப்பட்ட பெருமையுடையது. 1950 களில் அசாமிலும், அப்பொழுது யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூரிலும் அதன் பின்னர் நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு, அதன் அதிகார வரம்புகளும் விரிவுபடுத்தப்பட்டன.
- இச்சட்டம் ஒரு மாநிலம் முழுவதிலுமோ அல்லது ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியிலோ மைய அரசால் மாநில அரசின் ஒப்புதலோடு அமுல்படுத்தப்படும். இச்சட்டம் அமலில் இருக்கும் பகுதி கலவரம் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.
- இச்சட்டம் அமுலில் இருக்கும் பகுதியில் பணிபுரியும் இராணுவம், பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக, சட்டத்தை மீறுபவர்களாகத் தான் கருதும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம். அத்துப்பாக்கிச் சூடு மரணத்தை விளைவிப்பதாகக்கூட இருக்கலாம். இப்படி சட்டத்தை மீறுபவர்களை எவ்வித முன் அனுமதியின்றிச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்தின் கீழ் அதிகாரிகளுக்கும் இச்சட்டம் வழங்கியிருக்கிறது.
- ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில் கூடுவதை இராணுவமே தடை செய்யலாம். ஒரு பொருளை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பிருப்பதாக இராணுவம் கருதினால், அதனை எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கலாம்.
- இராணுவம் குற்றமிழைத்தவர்களை மட்டுமல்ல, குற்றமிழைத்தவராகச் சந்தேகிக்கும் எவரையும் அல்லது எதிர்காலத்தில் குற்றமிழைக்கக்கூடும் என சந்தேகப்படுவோரையும் நீதிமன்ற பிடியாணையின்றிக் கைது செய்ய முடியும். அப்படிக் கைது செய்யப்பட்டவர்களை அருகிலுள்ள போலீசு நிலையத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும் என இச்சட்டம் கூறினாலும், அதற்குக் காலக்கெடு எதுவும் கிடையாது.
- இராணுவம் நீதிமன்ற உத்தரவின்றியே எந்த இடத்திலும் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தி அங்கிருப்போரைக் கைது செய்யலாம். பூட்டியிருக்கும் வீட்டையோ அல்லது அலமாரி, பெட்டகம் உள்ளிட்ட மற்றவற்றையோ உடைத்துத் திறந்து சோதனையிடலாம். எந்தவொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்திச் சோதனை செய்வதோடு, அவ்வாகனத்தைக் கைப்பற்றவும் செய்யலாம். எந்தவொரு சொத்தையும், அது திருடப்பட்ட சொத்தாக இராணுவம் கருதினால், அச்சொத்தை இராணுவமே பறிமுதல் செய்யலாம்.
‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான செயல்கள், மக்கள் மத்தியில் பயபீதியை உருவாக்கும் நடவடிக்கைகள், பல்வேறு பிரிவு மக்களிடையே பகைமையைத் தோற்றுவிக்கும்படியான செயல்பாடுகள்; சமூக அமைதியைக் குலைக்கும்படியான நடவடிக்கைகள், இந்திய இறையாண்மையையும், இந்திய ஒருமைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகள், இந்திய யூனியனில் இருந்து பிரிவினை கோரும் நடவடிக்கைகள், தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய அரசியல் சாசனம் ஆகியவற்றை அவமதிக்கும்படியான நடவடிக்கைகள்” ஆகிய அனைத்தையும் இச்சட்டம் பயங்கரவாதம், தீவிரவாதமென முத்திரை குத்துகிறது. சுருங்கச் சொன்னால், அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுவது மட்டுமல்ல, அரசுக்கு எதிரான சிறு முணுமுணுப்பைக்கூடப் பயங்கரவாதமாக முத்திரை குத்துவதற்கு ஏற்றவாறு இச்சட்டத்தின் வரம்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது மாநில அரசுகூட வழக்கோ, விசாரணையோ, ஒழுங்கு நடவடிக்கையோ உடனடியாக எடுத்துவிட முடியாது. இதற்கு மைய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டால் மாநில அரசும் அதன் அதிகாரமும் செல்லாக்காசாகிவிடும் என்பதுதான் இதன் பொருள்.
இந்திய அரசியல் சாசனத்தின் 21 – ஆவது பிரிவு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உயிர்வாழும் உரிமையை அளிப்பதாகப் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இச்சட்டமோ யாரை வேண்டுமானாலும் நாயைப் போலச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்திற்கு வழங்குகிறது. எனினும், இச்சட்டம் அரசியல் சாசனத்திற்கே எதிரானதல்ல எனத் தீர்ப்பளித்துத் தனது ஒப்புதலை இச்சட்டத்திற்கு வழங்கியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
ஏ.ஜி.நூரனி என்ற அரசியல் விமர்சகர், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்தபொழுதுகூட, இப்படி அப்பட்டமாக இந்தியர்களைச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தனது இராணுவத்துக்கு வழங்கியதில்லை” என ஒப்பிட்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடூரத்தை அம்பலப்படுத்தியுள்ளார். அவ்வளவு பின்னோக்கிக்கூடப் போக வேண்டியதில்லை. தற்பொழுது இராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கும் பாகிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில்கூட இராணுவம் குடிமக்களைக் கேள்விக்கிடமின்றி நாயைப் போலச் சுட்டுக் கொல்வதற்குச் சட்டபூர்வ அதிகாரம் அளிக்கபட்டிருப்பதாகத் தெரியவில்லை.
இராணுவம் இச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகளையும் தீவிரவாதிகளையும்தான் சுட்டுக் கொல்வதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரத்தை அரசும் இராணுவமும் நடத்தி வருகின்றன. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு வெளியே வாழும் ‘இந்தியர்களும்’ இந்தப் புளுகுணிப் பிரச்சாரத்தை நம்புகின்றனர். ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிரானதாக உள்ளது.
இச்சட்டம் அமலில் இருக்கும் ஜம்மு காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தீவிரவாதிகளைக் கண்டறிந்து சுட்டுக் கொல்வதைவிட, தான் சுட்டுக் கொல்லும் அனைவரையும் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளென முத்திரை குத்தி விடுகிறது, இராணுவம். இன்னார் என அடையாளம்கூடக் காட்ட முடியாத ஒருவரைத் தீவிரவாதியாக முத்திரை குத்துவது வேடிக்கையானது மட்டுமல்ல, கடைந்தெடுத்த அயோக்கியத்தனமானதும் ஆகும்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்களின்பொழுது மட்டும் இதுவரை ஏறத்தாழ 108 காஷ்மீரிகள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களுள் ஒருவர் கையில்கூட ஏ.கே.47 துப்பாக்கி இருக்கவில்லை. அதிகம் போனால், அவர்களின் கைகளில் ஒரு கல் இருந்திருக்கலாம். “அவர்களை ஏன் காலுக்குக் கீழே சுடவில்லை?” என்ற கேள்விக்கு, அவர்கள் லஷ்கர் இ தொபாவின் கூலியாட்கள் எனத் திமிராக விடையளிக்கிறது, இராணுவம்.
சட்டபூர்வமான வழிகளில் போராடுபவர்களை மட்டுமல்ல, தெருவில் நடந்துபோவோரைக்கூடச் சுட்டுக் கொல்லும் அதிகாரத் திமிரை இச்சட்டம் இராணுவத்திற்கு வழங்கியிருக்கிறது.
ஸ்ரீநகரைச் சேர்ந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக் என்ற சிறுவன் கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தபொழுது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நடுத்தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டான். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களை எதிர்த்துக் கேள்வி கேட்டான் என்பதுதான் இச்சிறுவனைப் பயங்கரவாதி ஆக்கிவிட்டது. இச்சிறுவன் மட்டுமல்ல, 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்கள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். சிறுவர்களைக் கொன்றதற்காகக்கூட எந்தவொரு அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் செயல்படும் இராணுவச் சிப்பாய்களை விசாரிக்க மைய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதியும், அத்துமீறல்களில் ஈடுபடும் சிப்பாய்களை இராணுவமே விசாரிக்கும் என்ற நடைமுறையும் இராணுவத்தின் இத்தகைய அத்துமீறல்கள் அனைத்தையும் நியாயப்படுத்துவதற்கும் அரசு பயங்கரவாத குற்றவாளிகளைத் தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்குமே பயன்படுகின்றன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
பத்தாண்டுகளுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பத்ரிபால் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து அப்பாவிகள் இந்திய இராணுவத்தால் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த அப்பாவிகளை எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகளாகச் சித்திரித்து இப்படுகொலையை மூடி மறைத்துவிட எத்தனித்தது, இந்திய இராணுவம். உலகெங்கும் அம்பலப்பட்டுப் போன இவ்வழக்கில், இப்படுகொலையை நடத்திய இராணுவத்தினரை விசாரிக்கும் அனுமதியை இன்றுவரை வழங்க மறுத்து வருகிறது, மைய அரசு.
2004 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தங்ஜம் மனோரமா என்ற இளம் பெண்ணை அவரது வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு போன அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள், அப்பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்திய பின் சுட்டுக் கொன்றனர். தங்ஜம் மனோரமாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்ற அப்பட்டமான பொய்யைக் கூறியே, இப்படுகொலை பற்றி விசாரிப்பதற்கு ஒத்துழைக்க மறுத்துவருகிறது, இராணுவம். மைய அரசோ, இச்சம்பவம் பற்றி விசாரிக்க மாநில அரசு நியமித்த விசாரணைக் கமிசனை ஒத்துக்கொள்ள மறுத்து வருவதோடு, அக்கொலை வழக்கில் தொடர்புடைய சிப்பாய்களை விசாரிப்பதற்கான அனுமதியையும் தர மறுத்து வருகிறது.
அரசாங்கம் அறிவிக்கும் பரிசுப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்ளவும், பதவி உயர்வு பெறுவதற்கும் அம்மாநிலத்தில் ஏராளமான போலி மோதல் கொலைகளை நடத்தியிருக்கிறது, இராணுவம். நாடெங்கும் அம்பலமான போலி மோதல் கொலை வழக்குகளும்கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தாண்டி நகர்ந்ததில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த இருபதாண்டுகளில் ஏறத்தாழ 60,000 பேர் பல்வேறு சட்டவிரோத வழிகளில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இராணுவச் சிப்பாய்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையோ வெறும் 1,514 தான். இவற்றுள் 1,473 வழக்குகள் பொய்யானவை என்று கூறி இராணுவமே தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த அநீதியை எதிர்த்துதான், அரசு பயங்கரவாதக் கொலைகளைச் சட்டபூர்வமாக்கும் இச்சட்டத்தை விலக்கக் கோரித்தான் கடந்த நான்கைந்து மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இராணுவமோ, தீவிரவாதத்தை ஒழிக்கும் வேலையை போலீசிடமிருந்து மாற்றித் தன்னிடம் ஒப்படைக்கும்பொழுது, சிவில் நிர்வாகப் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்படும்பொழுது இச்சட்டம் தனக்குத் தேவை என வாதாடுகிறது. இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரினாலோ, அல்லது இச்சட்டத்தில் சில சில்லறை சீர்திருத்தங்கள் செய்யக் கோரினாலோ, அதனைத் தேச விரோத செயலாகக் குற்றஞ்சுமத்துகிறது.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பொருத்தவரை பா.ஜ.க.வின் கருத்தும் இராணுவத்தின் கருத்தும் ஒன்றுதான் என்பது வியப்புக்குரிய விசயமல்ல. காங்கிரசோ இப்பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக ஒரு ஆலோசனை நாடகத்தை நடத்தி முடித்திருந்தாலும், அதன் உண்மையான நோக்கம் இச்சட்டத்தைத் திரும்பப் பெறவும் கூடாது, திருத்தங்களையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக மைய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஜீவன்ரெட்டி கமிசன், ” ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு இணையாக வேறு சட்டங்கள் இருப்பதால் இச்சட்டத்தை நீக்கிவிடலாம்” என ஐந்தாண்டுகளுக்கு முன்பே அறிக்கை அளித்து விட்டது. எனினும், இந்த அறிக்கையைக்கூட வெளியிடாமல் புதைத்து வைத்திருக்கிறது காங்கிரசு அரசு. அதனின் நயவஞ்சகத்தை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.
இப்பொழுது பாதுகாப்பிற்கான அமைச்சர்கள் குழுவைக் கூட்டி, இச்சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக காங்கிரசுக்குள்ளேயே இரு வேறு கருத்துகள் நிலவுவதாகக் காட்டிக் கொண்ட அக்கட்சி, பின்னர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களில் இருந்து இச்சட்டத்தை விலக்கிக் கொள்ள ஆலோசிப்பதாக பாவ்லா காட்டியது. அதன் பின்னர், நகரங்களில் இருக்கும் தேவையற்ற பதுங்கு குழிகளைக் கைவிடுவது என இந்த நாடகம் சுருங்கிப் போனது. காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எட்டு அம்ச சலுகைத் திட்டத்தை அறிவித்த கையோடு காஷ்மீர் மக்களின் இக்கோரிக்கையை ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளிவிட்டது, காங்கரசு. சிவில் நிர்வாகம் இராணுவத்திற்கு அடிபணிந்துவிட்டது என்றே இதனைக் கூறலாம்.
இச்சட்டத்தைத் திரும்பப் பெறுவதைவிட, சில சில்லறை பொருளாதார சலுகைகள் வழங்குவதன் மூலம் இந்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைப் பிசுபிசுக்கச் செய்துவிடலாம் என காங்கிரசு கணக்குப் போடுகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீரிலும் மணிப்பூரிலும் நடந்து வரும் போராட்டங்கள் வேறொரு உண்மையைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.
தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் அம்மாநிலங்களில் ஒரு மறைமுகமான இராணுவ ஆட்சிக்கு வழி கோலியிருக்கிறது என்பதும்; இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் துப்பாக்கி ஏந்திய நான்கைந்து தீவிரவாதிகள் நடத்தும் திடீர்த் தாக்குதலாக மட்டும் இல்லாமல், இலட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் அரசியல் ஆர்ப்பாட்டங்களாகவும் வளர்ந்துவிட்டன என்பதும்; இச்சட்டத்தையும் இராணுவத்தையும் திரும்பப் பெறுவதன் மூலம்தான் அம்மாநிலங்களில் குறைந்தபட்ச அமைதியைக்கூட ஏற்படுத்த முடியும் என்பதும்தான் அவ்வுண்மை.
காவி பயங்கரவாத தீவிரவாதிகளுக்கு கருப்பு சட்டமில்லை:
"மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெ டிப்பை மலேகானில் நடத்தினோம். இதற்காக 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டமிட்டேன். அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால், அதனைத் தடுக்கவும் இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்.'' ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.
கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரின் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தன. 2007 நவம்பர் 11ஆம் தேதியன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன. 2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில், அரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஆந்திராவின் தலைநகர் ஐதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. மலேகான் நகரில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதியன்று மீண்டும் குண்டுகள் வெடித்தன. இக்குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயமடைந்தார்கள்.
இப்படி ஒவ்வொரு முறையும் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம், பார்ப்பன முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்று எவ்வித விசாரணையுமின்றி குற்றம் சாட்டின. 2007ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் கசூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த போது, சம்ஜவ்தா விரைவு வண்டியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தியா பாகிஸ்தானிடையே நல்லுறவு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இக்குண்டு வெடிப்பை நடத்தியதாக பார்ப்பன முதலாளித்துவ ஊடகங்கள் சகட்டு மேனிக்குக் குற்றம் சாட்டின. இது ஹூஜி மற்றும் லஸ்கர்-இ-தொய்பா ஆகிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களின் சதி என்று அமெரிக்காவும் கூறியது.
இக்குண்டு வெடிப்புகள் குறித்து ஆரம்ப விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே போலீசையும் துணை ராணுவப் படைகளையும் ஏவி முஸ்லிம் குடியிருப்புகளை அரசு சுற்றி வளைத்தது. சட்டப்படியும் சட்டவிரோதமாகவும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொடிய சித்திரவதைக்கு ஆளாயினர். அவர்களது இளமையும் எதிர்காலமும் நொறுங்கிப் போயின. பயங்கரவாதி என்ற அவமானத்தோடு, அவர்களது குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டு கையறு நிலையில் தவித்தன. குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களைப் போலவே, குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் குடும்பங்களும் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
கடந்த 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் நந்தித் நகரில் வெடிகுண்டுகள் தயாரித்தபோது விபத்து நடந்து ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இருவர் மாண்டனர். ஐந்துபேர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பார்ப்பன பயங்கரவாதிகள் 21 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு அதிரடி போலீசு அடுத்தடுத்து கைது செய்து ஒளரங்காபாத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இருப்பினும், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களுள் 11 பேரை விடுவிக்க எத்தணித்தது. இதை எதிர்த்து உள்ளூர் முஸ்லிம்கள் போராடியதோடு, சி.பி.ஐ. விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகே, சி.பி.ஐ.யின் விசாரணை தொடங்கியது.
சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபெருளை முன்னாள் இராணுவ அதிகாரியான ஸ்ரீகாந்த் புரோகித் கள்ளத்தனமாக ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான அறிகுறிகள் கிடைத்தன. மலேகான் குண்டு வெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இக்குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அகில பாரத வித்யார்த்தி பரிசத் எனும் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து, பின்னர் அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பதை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு சிறப்புப் போலீசுப்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே கண்டறிந்தார். கடந்த 2008ஆம் ஆண்டில் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டாள்.
அவளைத் தொடர்ந்து முன்னாள் இராணுவ அதிகாரியான ஸ்ரீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரம் நடத்தி வந்த தயானந்த் பாண்டே மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் ஈடு பட்ட 11 பேரை ஹேமந்த் கார்கரே கைது செய்தார். பிரக்யா சிங்கை விசாரணை செய்த போது, ம.பி.யைச் சேர்ந்த சுனில்ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அசீமானந்தா, பாரத் ரித்தேஷ்வர் முதலானோர் முக்கிய சதிகாரர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் கார்கரே பலியானார். இதற்கிடையே சுனில்ஜோஷி இந்துவெறி பயங்கரவாதிகளாலேயே கொல்லப்பட்டான். மற்றவர்கள் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.
மலேகான் மற்றும் சம்ஜவ்தா எக்ஸ்பிரசில் வெடித்த குண்டுகள் ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்தவையாக இருந்ததால், இக்குண்டு வெடிப்புகளில் இந்துவெறி பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரணையை மேற்கொண்டது. தயானந்த் பாண்டேயின் கணினியிலிருந்து கிடைத்த 37 உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இவையனைத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இவர்கள் திட்டமிட்டதை நிரூபித்துக் காட்டின. இதனடிப்படையில், கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டான். ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18ஆம் தேதியன்று டெல்லி வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட அசீமானந்தா, இக்குண்டுவைப்புகளில் ஈடுபட்டது நாங்கள்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். போலீசாரின் முன்னிலையில் பெறப்படும் வாக்குமூலங்களை விட, நீதிபதி முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் சட்டப்படி உறுதியான ஆதாரங்களாகியுள்ளதால், குண்டுவைப்பு பயங்கரவாதச் செயல்களில் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டிருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.
மே.வங்கத்தைச் சேர்ந்த நாப குமார் எனப்படும் அசீமானந்தா, 1977இல் ஆர்.எஸ்.எஸ்இன் முழுநேர ஊழியனாகி மே.வங்கத்திலும் பின்னர் அந்தமானிலும் ஆர்.எஸ்.எஸ்.இன் பரிவாரங்களில் ஒன்றான வனவாசி கல்யாண் ஆசிரமத் தலைவராகப் பணியாற்றியுள்ளான். பின்னர் 1997இல், இவன் குஜராத்தின் டாங் மாவட்டத்தில் ஷப்ரிதாம் என்னும் ஆசிரமத்தை நிறுவிக் கொண்டு சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எதிராக ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தான். இவன் குஜராத் முதல்வர் மோடி, ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சுதர்சன், மோகன் பாகவத் ஆகியோருக்கு நெருக்கமானவன். பயங்கரவாதிகளின் சித்தாந்த குருவான இவன்தான் அஜ்மீர், ஐதராபாத், மலேகான் முதலான இடங்களில் குண்டுவைக்க இலக்குகளைத் தீர்மானித்து வழிகாட்டியுள்ளான். 2008இல் பெண் சாமியாரான பிரக்யா சிங் கைது செய்யப்பட்ட பிறகு, அசீமானந்தா தப்பியோடி தலைமறைவாகிவிட்டான். கடந்த 2010 நவம்பர் 19 ஆம் தேதியன்று அரித்துவாரில் பதுங்கியிருந்தபோது சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டான்.
தன்னோடு இக்குண்டுவைப்பு சதியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்தியப் பிரதேச ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான (பிரச்சாரக்) சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான சந்தீப் டாங்கே, மூத்த ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான ராம்ஜி, தேவேந்திர குப்தா, மேல்மட்ட உறுப்பினரான சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரியான ஸ்ரீகாந்த் புரோஹித், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான யோகி ஆதித்யானந்த், குஜராத்தின் விவேகானந்தா சேவா கேந்திரத்தின் பாரத் பாய், அந்த அமைப்பின் மாநில அமைப்பாளரான டாக்டர் அசோக், முக்கிய பிரமுகர்களான லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, ஜம்முவைச் சேர்ந்த சாரதா பீட சாமியார் தயானந்த் பாண்டே ஆகியோரின் பெயர்களையும் அவன் வாக்குமூலமாக அறிவித்துள்ளான். "யாருடைய தூண்டுதலோ, நிர்ப்பந்தமோ இல்லாமல், எவ்வித அச்சமுமின்றி சுய நினைவோடு'' தான் இந்த வாக்குமூலத்தை அளிப்பதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.
ஐதராபாத்தின் சன்சல்குடா சிறையில் அசீமானந்தா அடைக்கப்பட்டபோது, அந்தச் சிறைக் கொட்டடியில் அவனுடன் இருந்த கைதியான கலீம் என்ற இளைஞர், வயதில் மூத்தவரான அவனுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, உணவு எடுத்து வந்து கொடுப்பது முதலான பல உதவிகளைச் செய்துள்ளார். ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பையொட்டி கைது செய்து சிறையிடப்பட்ட அப்பாவி இளைஞர்தான் கலீம். குண்டு வைத்த அசீமானந்தா, தன்னால் ஒரு அப்பாவி முஸ்லிம் இளைஞன் சிறையில் வதைபடுவதைக் கண்டு வருந்தியதாகவும், மனசாட்சி உலுக்கியதாகவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில் உண்மைகளை வாக்குமூலமாக அளிப்பதாகவும் தெரிவித்துள்ளான்.
இப்பயங்கரவாதச் சதித் திட்டத்தில் முக்கியமானவனாகிய சுனில் ஜோஷி, கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பரில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களாலேயே கொல்லப்பட்டான். இக்குண்டுவெடிப்பு வழக்கில் மேலிருந்து கீழ்மட்டம் வரை சங்கிலித் தொடர்போல பலர் கைதாகி வருவதால், ஆர்.எஸ்.எஸ். தலைமை தனது விசுவாச ஊழியனையே கொன்றொழிக்க உத்தரவு பிறப்பித்திருக்க வாய்ப்புள்ளது. இதேபோன்ற நிலைமை தனக்கும் ஏற்படும் என்பதாலும், முஸ்லிம் இளைஞரால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியும் சேர்ந்துதான் அசீமானந்தாவை ஒப்புதல் வாக்குமூலத்துக்குத் தள்ளியிருக்க வேண்டும்.
கடந்த டிசம்பர் 20ஆம் தேதியிட்டு அசீமானந்தா, இந்திய அரசுத் தலைவிக்கும் பாகிஸ்தான் அதிபருக்கும் பாவமன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளான். அதில், அஜ்மீர், மலேகான், ஐதராபாத், சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர்களில் நானும் ஒருவன் எனக் குறிப்பிட்டுள்ளான். ஐதராபாத்தின் சஞ்சலகுடா சிறையிலிருந்து அவன் எழுதிய இக்கடிதங்கள் இப்போது ஊடகங்களில் பகிரங்கமாகியுள்ளது.
பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் அசீமானந்தாவைச் சித்திரவதை செய்து கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், இந்துத்துவப் பயங்கரவாதம் என்ற அவதூறு கிளப்பப்படுவதாகவும் வழக்கம் போலவே கூச்சலிடுகின்றன. ஆனால் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமின்றி, வலுவான தடயவியல் ஆதாரங்களும் சி.பி.ஐ. விசாரணையில் கிடைத்துள்ளன. புதுப்புது அமைப்புகளை திட்டமிட்டு உருவாக்கி, இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை அத்தகைய அமைப்புகளின் பெயரால் நடத்தி வருவதை ஆர்.எஸ்.எஸ். ஒரு உத்தியாகக் கொண்டு இயங்கி வருவதும் இப்போது நிரூபணமாகியுள்ளது.
ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நோக்கியா செல்போனும் அதிலுள்ள வோடபோன் சிம் கார்டும் குண்டு வைக்கப்பட்ட இடத்தில் கிடைத்துள்ளன. இது, குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடிக்குமாறு செய்து அதன் மூலம் மின் இணைப்பு பெற்று குண்டுகளை வெடிக்கச் செய்யும் அதிநவீன தொழில்நுட்ப முறையாகும். இதேபோன்ற செல்போன் மூலமாக குண்டுகளை வெடிக்கச் செய்யும் முறையில்தான் சம்ஜவ்தா விரைவு வண்டியிலும் குண்டு வெடித்துள்ளது. மெக்கா மசூதியில் 6.53 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டது. அதே வகையான பேட்டரிகள்தான் சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டுக்கான வார்ப்பு இரும்பு உலோகமும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. இத்தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் இக்குண்டுவெடிப்புகள் அனைத்திலும் ஒரு இந்துவெறி பயங்கரவாத கும்பல் ஈடுபட்டுள்ளதென புலனாய்வுத் துறையினர் அறுதியிட்டனர்.
செல்போன்கள் வாங்கப்பட்ட இடமும், வாங்கிய நபரின் பெயர் பாபுலால் யாதவ் என்பதும், போலியான ஆவணங்களைக் கொடுத்து இதேபெயரில் 11 சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தன. பாபுலால் யாதவ் வாங்கிய செல்போன்களின் குறியீட்டு எண்ணை வைத்து அவற்றில் நான்கு செல்போன்களை ராஜஸ்தானிலுள்ள ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்கள் பயன்படுத்தி வருவதை வைத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலமாக பாரத் ரித்தேஷ்வர் உள்ளிட்ட இதர சதிகாரர்கள் சிக்கினர்.
இவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் முதலான பிற மாநிலங்களிலிருந்தும் இப்பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்களைத் திரட்டியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். மட்டுமின்றி அதன் பரிவாரத்தைச் சேர்ந்த பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத், அபிநவ் பாரத், ஜெய் வந்தேமாதரம், வனவாசி கல்யாண் ஆசிரமம் முதலானவற்றிலிருந்தும் ஆட்களைப் பொறுக்கியெடுத்து மூன்று குழுக்களை உருவாக்கினர். இதன்படி, ஒரு குழு நிதி ஏற்பாடுகளையும் வாகன ஏற்பாடுகளையும் செய்யும். அடுத்த குழு, வெடிகுண்டுகளையும் தேவையான சாதனங்களையும் ஏற்பாடு செய்யும். கடைசியாக உள்ள குழு, குண்டு வைப்புகளில் ஈடுபடும். ஒரு குழுவினருக்கு மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இதனால் ஒருவர் கைது செய்யப்பட்டாலும் மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இந்தச் சதித் திட்டத்துடன்தான் இப்பயங்கரவாதக் கும்பல் இயங்கியது என்பதும் இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி, 2002இல் குஜராத் பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடங்கிவைத்த கோத்ரா எம்.எல்.ஏ.வான ஹரேஷ் பட்டுக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையில், டீசல் வெடிகுண்டுகளும் பைப் வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டு குஜராத் பயங்கரவாதப் படுகொலையின்போது இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன என்பதும், சபர்கந்தா மாவட்ட விசுவ இந்து பரிசத்தின் தலைவரான தவால் ஜெயந்தி பட்டேலின் கல் குவாரியில் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிகுண்டுகள் ஏராளமாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதும் ஏற்கெனவே ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது. மேலும், கடந்த 2007ஆம் ஆண்டில் "தெகல்கா'' வார இதழ் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பார்ப்பன பாசிச பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறியாட்டத்தையும், இந்துவெறி பயங்கரவாதிகளிடையே ஊடுருவி அந்தக் கொடூரங்களை அரங்கேற்றியவர்களின் வாயிலிருந்தே மறுக்க முடியாத ஒப்புதல் வாக்குமூலங்களையும் ஆதாரங்களுடன் வெளியிட்டது. கடந்த 2007ஆம் ஆண்டு தென்காசியில் நடந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் இந்து முன்னணி கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் என்பதும் நிரூபணமாகியுள்ளது.
உண்மைகள் அம்பலமானபோதிலும், ம.பி.யில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்ததால் இந்துவெறி பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. நெருக்கடிகள் அதிகரித்த பின்னரே ம.பி. போலீசு வேறு வழியின்றி இந்துவெறி பயங்கரவாதிகளில் சிலரைக் கைது செய்தது. அஜ்மீர், மெக்கா மசூதி விசாரணைகளில் உண்மைகள் வெளிவந்துள்ள போதிலும், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் போலீசார் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆந்திராவிலும் ராஜஸ்தானிலும் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வதைக்கப்பட்ட பின்னர், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பாகிய போதிலும், வேறொரு பொய்வழக்கு சோடித்து அவர்களை மீண்டும் சிறையிலடைத்து வதைத்தது, இம்மாநிலங்களின் போலீசு.
இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.இன் பயங்கரவாதம் அடுத்தடுத்து வெளியான போதிலும், ஒருசில ஆங்கில ஊடகங்கள் மட்டுமே இவற்றை வெளியிட்டுள்ளனவே தவிர, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் அவை திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்களும் நக்சல்பாரிகளும்தான் என்ற கருத்து ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே போலீசும் அதிகார வர்க்கமும் ஒரு தலைபட்சமாக அணுகுகின்றன. மதச்சார்பற்றவர்களாகக் கூறிக்கொள்ளும் "இந்து''க்களே கூட ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இரகசிய குண்டுவைப்புகள் மூலம் அப்பாவி பொதுமக்களைக் கொல்லும் பயங்கரவாதச் செயல்களில் இறங்க மாட்டார்கள் என்றே இன்னமும் கருதுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும், பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படவில்லை. தண்டிக்கப்படவும் இல்லை. உண்மைகள் அடுத்தடுத்து வெளிவந்துள்ள போதிலும், எந்த கட்சியும் இதுகுறித்து வாய்திறப்பதுமில்லை. இவர்களுக்கு கருப்பு சட்டங்களும் இல்லை.
அம்பேத்கரும் பகத்சிங்கும் தேசிய வீரர்களல்ல, அவர்கள் எழுத்தைப் படித்தால் கைது செய்யப்படுவீர்கள்.
ஆகஸ்டு 28ஆம் தேதியிடப்பட்ட தெஹல்கா இதழில் இந்த தலைப்பில் ஒரு கட்டுரை வந்திருந்தது, படித்த போது எரிச்சலாகவே வந்தது. 2007ஆம் ஆண்டிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மகராஷ்டிரத்தில் UAPA(Unlawful Activities Protection Act) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதே சட்டத்தின் கீழ்தான் அம்பேத்கர், பகத் சிங்கின் புத்தகங்களை வைத்திருப்பவர்களையும், கைது செய்திருக்கிறார்கள்.
தெஹல்காவின் கட்டுரையிலிருந்து சிலபகுதிகள்:
அருந்ததி ராயின் பேட்டியையோ, மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலையோ, கயர்லாஞ்சி கொடூரம் பற்றிய தகவல்களையோ, பகத்சிங்கின் புத்தகங்களையோ வைத்திருந்தால், போலீசாரால் நீங்கள் கைது செய்யப்படலாம். "நீங்கள் இஸ்லாமியனாக இருந்தால் தீவிரவாதி, தலித்தாக இருந்தால் நக்சலைட்” என்று தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு வழக்கறிஞர் பேட்டியளித்திருக்கிறார்.
மக்களிடையே சுற்றுச்சூழல் மற்றும் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வீதிநாடகங்களை நடத்தும் ஒரு என்.ஜி.ஓ ஊழியரான பாபு பாட்டீல் சொல்கிறார். “நான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தோடே வாழ்கிறேன், மக்களிடையே சுகாதர விழிப்புணர்வை ஏற்படுத்துவதால், நான் நக்சல்களுக்கு உதவுவதாக மீண்டும் கைது செய்யப் படலாம்.” அவரின் அறையில் அம்பேத்கர் படம் தொங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு தலித், லெனினையோ கார்க்கியையோ படிக்கமாட்டான், அப்படிப் படித்தால் அவன் ஒரு குற்றவாளி.
ஒரு போலீஸ் அதிகாரி சொல்கிறார், “அம்பேத்கரியவாதிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து இன்னுமொரு 1857யை உருவாக்கப் பார்க்கிறீர்களா?”
இச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, “இன்னொரு அம்பேத்காராக உருவாகப் பார்க்கிறாயா?” என்று அடித்திருக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி.
பத்து கல்லூரி மாணவர்கள் பகத்சிங் மற்றும் ஜோதிபா பூலேவின் கருத்துகளை மக்களிடம் பரப்பும் விதமாக பிரச்சாரம் செய்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றச்சாட்டு, சந்திரபூரில் நக்சலைட் தாக்குதல்களில் ஈடுபட்டது.
இந்த சம்பவங்கள் என்ன சொல்கின்றன? நாம் கொண்டாடி கிழித்து விட்ட 64வது சுதந்திர தினம் இந்த சமூகத்தில் எதைச் சாதித்துக் கிழித்திருக்கிறது? அடுத்த ஆண்டும் சுதந்திர தினம் வரட்டும் சுதந்திரமாய் கொண்டாடி, மிட்டாய் தின்று, செரித்து, மலம் கழிப்போம்.
அம்பேத்கரின் மீது எத்தனை மதிப்பை மகராஷ்டிராவின் காவல்துறையினர் வைத்திருக்கின்றனர் என்று இந்தச் சம்பவங்கள் நமக்குச் சொல்கின்றன. ஒவ்வொரு காவல்நிலையத்திலும் அம்பேத்கரின் படமிருக்குமே, இந்த காவல்நிலையங்களிலும் இருக்குமோ? கேளாத செவிகளும் கேட்கட்டுமென்றானே பகத்சிங், அவன் சொற்களைக் கேட்கச் செய்ய முயற்சி செய்தவர்களுக்கு செவில்களிலேயே விழுகிறது அறை. ஒட்டுமொத்தமாய் அம்பேத்கரின் புத்தகங்களையும் பகத்சிங்கின் புத்தகங்களையும் தடை செய்துவிடுங்கள், அவர்கள் எழுத்துகள், நக்சலிசத்தை ஊக்குவிக்கிறது என்றால், ஏன் அவர்களின் புத்தகங்களை படிப்பவர்களை ஒவ்வொருவராய் தேடி தேடிக் கைது செய்ய வேண்டும்?
Info: popularfronttn.org
கருத்துச் சுதந்திரங்களும், பேச்சு சுதந்திரங்களும் ஏட்டில் மட்டுமிருந்தால், அந்த ஏடுகளை கிழித்து தூக்கிக் கடாசிவிட்டு எல்லாரும் சிறைக்குச் செல்வதே மேல். எதற்கு வெட்டியாய் ஏட்டில் அவை அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இன்று மகராஷ்டிரா, நாளை தமிழகம், அதிக தூரமில்லை, காலமுமில்லை. அந்த மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலை தமிழில் மொழிபெயர்த்தவர் தான் இங்கு முதல்வர் ஆக இருந்தவர். ஒருவேளை அவரே கூட கைது செய்யப்படலாம், அந்நூலை வைத்திருப்பவர்களும் கைது செய்யப்படலாம்.
Info: popularfronttn.org
0 கருத்துரைகள்:
Post a Comment