2005 ஆம் ஆண்டு காவல்துறை கண்காணிப்பில் இருந்த சிறைக்கைதி ஒருவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட வழக்கில், காவல்துறையின் க்யூ பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளர் சந்திரபால் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணிஓய்வு பெற இருந்த 24 மணி நேரத்துக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு, கடையநல்லூரைச் சேர்ந்த மசூத் என்னும் 38 வயது நிதி நிறுவன அதிபரை காவல்துறை ஒரு திருட்டுக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்தது.விருதுநகரைச் சேர்ந்த வணிகர் கிருஷ்ணமூர்த்தி என்பவரை காரில் கடத்திச் சென்று ரூ.10 இலட்சம் கொள்ளையடித்ததாக மசூத் மற்றும் அவரது தோழர்கள் மூவரை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றிருந்தது.
பின்னர் மசூதின் தோழர்கள் மூவர் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப் பட்டாலும், மசூத் அழைத்துவரப்படவில்லை. அது பற்றி காவல்துறை "மசூத் தப்பிச் சென்றுவிட்டார்" என்று காரணம் கூறியிருந்தது.
ஆனால் தன் கணவரை காவல்துறை சித்திரவதைச் செய்து கொலை செய்துவிட்டதாக மசூதின் மனைவி ஹசனா அம்மாள் முதல்வரின் தனிப் பிரிவில் முறையிட்டிருந்தார். இதையடுத்து இவ் வழக்கு சிபி சிஐடி பிரிவுக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. கணவரைக் கொன்றதற்கு எதிராக உரிமைப் போராட்டம் நடத்திய ஹசனா அம்மாளுக்கு மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO) உதவி செய்துவந்தது.
மசூத் காவல்துறையினரின் கண்காணிப்பில் கொலையுண்டது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை சித்திரவதைச் செய்து கொன்றதாக பன்னிரண்டு காவல் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட காவல் அதிகாரிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நீதிமன்றத்தில் முன்னிலையானபோது, தற்போதைய வேலூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருக்கும் ஐ. ஈஸ்வரன் முன்னிலையாகாமல் இருந்ததால், அவரையும் முன்னிலையாகும் படி நீதிபதி நந்தகுமார் உத்தரவிட்டிருந்தார்.
அதன் படி மாவட்ட கண்காணிப்பாளர் ஐ. ஈஸ்வரன் முன்னிலையாகி விசாரணைக்கு ஒத்துழைத்தார். பின்னர் இந்த வழக்கு ஜூன் 14 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த க்யூ பிரிவு துணை கண்காணிப்பாளர் சந்தர்பால் பணி ஓய்வு பெற ஒரு நாளே இருந்த நிலையில், நேற்று அதிரடியாக பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக NCHRO-வின் சட்ட ரீதியான போராட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்ட ஹசனம்மாளுக்கு நீதிமன்ற ஆணைப் படி அரசு இழப்பீட்டு தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment