Friday, June 28, 2013

இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேரின் படுகொலை மோடியின் அனுமதியுடன் நடந்தது!


M_Id_394598_Ishrat_Jahan

புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியின் அனுமதியுடனே போலி என்கவுண்டரில் அநியாயமாக படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் அன்றைய உள்துறை அமைச்சரும், மோடியின் நெருங்கிய கூட்டாளியுமான அமித்ஷாவுக்கு பங்கிருப்பது சி.பி.ஐயின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இஷ்ரத் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் போலி என்கவுண்டரில் படுகொலைச்செய்யப்பட்ட வழக்கில் இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி)வின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்திய வேளையில் மோடி மற்றும் அமித்ஷாவின் பங்கு சி.பி.ஐக்கு தெரியவந்துள்ளது. சி.பி.ஐயின் விசாரணை முன்னேற்ற அறிக்கையில் இதுக்குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 4-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் குற்றப்பத்திரிகையில் இந்த விபரங்களை சி.பி.ஐ உட்படுத்தும் என கருதப்படுகிறது.
குஜராத்தில் ஐ.பியின் பொறுப்பை வகித்த தற்போதைய இண்டலிஜன்ஸ் பீரோ சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளான டி.ஜி.வன்ஸாரா, பி.பி.பாண்டே ஆகியோர் போலி என்கவுண்டரை எப்படி நடத்துவது? என்பதை தீர்மானித்துள்ளனர். 2004 ஜூன் 15-ஆம் தேதி போலி என்கவுண்டரின் மூலம் இஷ்ரத் உள்ளிட்ட நான்குபேர் கொல்லப்பட்டனர். ஜூன் 13-ஆம் தேதி ராஜேந்தர் குமார், பாண்டே, வன்ஸாரா ஆகியோர் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். இஷ்ரத் உள்ளிட்ட நான்குபேர் அப்பொழுது ஐ.பியின் கஸ்டடியில் இருந்தனர். போலி என்கவுண்டர் படுகொலை நடப்பதற்கு 3 தினங்களுக்கு முன்பாக இஷ்ரத் மற்றும் ஜாவேத் ஷேக்கையும், அம்ஜத் அலியை 14 தினங்களுக்கு முன்பாகவும், சீஷான் ஜோஹாரை 48 தினங்களுக்கு முன்பும் ஐ.பி கஸ்டடியில் எடுத்திருந்தது.
‘வெள்ளைத் தாடியும்’, ‘கறுப்புத் தாடியும்’ ஆபரேசனுக்கு(போலி என்கவுண்டருக்கு) அனுமதி அளித்துள்ளதாக ஜூன் 14-ஆம் தேதி வன்ஸாரா தன்னிடம் கூறியதாக அவரது சக ஊழியர் சி.பி.ஐக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவைக் குறித்து குஜராத் போலீஸ் பிரயோகிக்கும் ரகசிய சங்கேத வார்த்தைகள் தாம் ‘வெள்ளைத் தாடியும்’, ‘கறுப்புத் தாடியும்’. சாட்சிகளும், இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளும் அளித்துள்ள வாக்குமூலங்கள் கால் டீட்டெயில்ஸ் பரிசோதனையுடன் ஒத்துப் போகிறது. இஷ்ரத் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்வதற்கு முன்பும், பின்னரும் மோடி மற்றும் அமித் ஷாவை வன்ஸாரா அழைத்தது குறித்த ஆவணங்களை சி.பி.ஐ சேகரித்துள்ளது.
ராஜேந்தர் குமார் மோடியின் அலுவலகத்திற்கு 30 தடவை அழைத்தது தொடர்பான விபரமும் சி.பி.ஐயின் வசம் உள்ளது.

வெள்ளைத் தாடியும், கறுப்புத் தாடியும் போலி என்கவுண்டருக்கு அனுமதி அளித்துவிட்டார்கள் என்று வன்ஸாரா, தனது சக ஊழியரிடம் கூறியது ஜூன் 14-ஆம் தேதியாகும்.அதே நாளில் மதியம் 2.49க்கு வன்ஸாரா, மோடியை அழைத்திருந்தார்.ஜூன் 15-ஆம் தேதி அதிகாலை போலி என்கவுண்டர் அரங்கேறியது.கிட்டத்தட்ட 14 மணிநேரம் முன்பாக வன்ஸாரா, மோடியை தொடர்புக்கொண்டுள்ளார்.சம்பவம் நடப்பதற்கு 5 மணிநேரம் முன்பு, அதாவது ஜூன் 14-ஆம் தேதி இரவு 10.57க்கு வன்ஸாரா, அமித்ஷாவையும் தொடர்புகொண்டுள்ளார்.போலி என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்த பிறகு ஜூன் 15-ஆம் தேதி காலை 6.07 மணிக்கும், 7.09 மணிக்கும் வன்ஸாரா அமித் ஷாவையும், அமித் ஷா வன்ஸாராவையும் தொடர்பு கொண்டுள்ளனர்.

இவ்வழக்கில் கிட்டத்தட்ட 10 போலீஸ் அதிகாரிகளை இதுவரை சி.பி.ஐ கைதுச் செய்துள்ளது.வலுவான ஆதாரங்கள் கிடைத்தபோதும் ஐ.பி சிறப்பு இயக்குநர் ராஜேந்தர்குமாரை இதுவரை இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கவில்லை.இவருக்கு எதிராக விரைவில் சி.பி.ஐ வழக்கு பதிவுச் செய்யும் என கருதப்படுகிறது.தற்போது குஜராத் போலீசில் கூடுதல் டி.ஜி.பி ரேங்கில் உள்ள குற்றம் சாட்டப்பட்டுள்ள பி.பி.பாண்டேவை சி.பி.ஐ நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.போலி என்கவுண்டருக்கான திட்டம் தீட்டியபோதும், அதனை நிறைவேற்றியபோதும் சாட்சிகளான 22 பேரிடம் சி.பி.ஐ வாக்குமூலங்களை பதிவுச் செய்துள்ளது

-thoothu online.com 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza