Friday, June 28, 2013

சொராப்தீன் என்கவுண்டர் சாட்சி கொல்லப்பட்டது எப்படி? அதிர்ச்சி வாக்குமூலம்!

 அஹ்மதாபாத் : குஜராத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் சாட்சியாக இருந்த துளசிராம் எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றி கொலை செய்த காவல்துறையினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
குஜராத்தில் சொஹ்ராபுதீன் ஷேக் என்பவரும் அவர் மனைவி கவுசர் பீவியும் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போலி என்கவுண்டரில் சொஹ்ராபுதீன் கொல்லப்பட்டார். இரண்டு நாடுகள் கழித்து அவர் மனைவி கவுசர்பீவியும் கொல்லப்பட்டார். குஜராத் மாநில உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மோடியின் வலது கையும் அமைச்சருமான அமித் ஷாவும் இக்கொலைகளுக்கு பின்னால் இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சொஹ்ராபுதீன் கொலையில் முக்கிய சாட்சியாக இருந்த அவரது நண்பர் துளசிராம் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். காவல்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் துளசிராமை கைது செய்து உதய்பூர் சிறைக்கு ரயிலில் அழைத்து சென்ற போது தங்கள் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பி சென்றதாகவும் தப்பி சென்ற அடுத்த நாள் துளசிராமை தேடி சென்ற போது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் துளசிராம் பலியானதாகவும் சொல்லப்பட்டிருந்தது.
பின்னர் சிபிஐ நடத்திய விசாரணையில் துளசிராமின் படுகொலை திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் என்று கண்டு பிடிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 20 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இச்சூழலில் துளசிராமை கொலை செய்த ஆஷிஷ் பாண்டியா, கிரன்சிஹ் ஹலாஜி, ஜீதுசின் மோகன்சிஹ், கரன்சிஹ் அர்ஜுன்சிஹ், கந்திபாய் நரன்பாய் மற்றும் வினோத்குமார் ஆகிய காவல்துறையினர் எவ்வாறு துளசிராம் கொல்லப்பட்டார் என்பதை நேற்று ஒத்திகை செய்து காட்டினர்.
அவ்வொத்திகை சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அதன் படி கொலை நடந்த இடத்திற்கு துளசிராம் கைகள் கட்டப்பட்ட நிலையில் வெள்ளை மாருதி காரில் அழைத்து வரப்பட்டார். காரிலிருந்து துளசிராம் இறங்கும் போது துணை இன்ஸ்பெக்டர் ஆஷிஷ் பாண்டியா தன்னுடைய அலுவலக துப்பாக்கியிலிருந்து இரண்டு தடவை துளசிராமை சுடுகிறார்.
துளசிராமை சுட்ட பிறகு ஆஷிஷ் பாண்டியா தன் வலது கையில் நாட்டு துப்பாகி ஒன்றை எடுத்து தன் இடது கையில் சுடுகிறார். பின் அந்நாட்டு துப்பாக்கியை கொல்லப்பட்ட துளசிராம் சுட்டது போல் காட்டுவதற்காக துளசிராம் கையில் பொருத்துகிறார். இதன் மூலம் துளசிராம் சுட்டதால் தங்களை தற்காத்து கொள்ள சுட்டதாக சொன்ன காவல்துறையின் நாடகம் சிபிஐயால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

-inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza