குஜராத்தில் கோத்ரா ரெயில் விபத்தைத் தொடர்ந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இந்திய வரலாறு காணாத அளவுக்கு நடத்திய கோரமான முஸ்லிம் இனப்படுகொலை சம்பவங்களை முஸ்லிம்கள் மறந்துவிடவேண்டும் என்று ராஜ்நாத் சிங் கூறியபோது, அதே மேடையில் வீற்றிருந்த ராஜஸ்தான் மாநில சிறுபான்மை ஆணையர் பதில் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘சிறுபான்மையினருக்கு எதிரான சவால்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது:–
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கெல்லாம் சுமுகமான பாகுபாடற்ற நிர்வாகம் நடத்தப்படுகிறது. சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுவதில்லை. ராஜஸ்தானில் பைரோன்சிங் செகாவத், வசுந்தரா ராஜே ஆகியோரது ஆட்சியே இதற்கு சாட்சி. சில இடங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்திருக்கலாம். அதனை புறந்தள்ளி விடுவதே நல்லது. கோத்ரா கலவர சம்பவங்களை மறந்து விடுங்கள். நாட்டில் 2002–ம் ஆண்டுக்கு முன்பு 13 ஆயிரம் மதக்கலவரங்கள் நடந்துள்ளன.
பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான குறைபாடுகள் இருந்தால், அதுகுறித்து எனக்கு எழுதுங்கள். நான் அதை சரிபடுத்த முயற்சிக்கிறேன். நமக்குள் எந்தவித வேறுபாடும் இல்லை என்ற நம்பிக்கையை உங்களிடையே விதைக்கிறேன். நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் இந்த பாகுபாட்டை ஏற்படுத்தினார்கள். ஆனால் 66 ஆண்டு சுதந்திர இந்திய அரசில்கூட இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே இணக்கமான உறவு உருவாக்கப்படவில்லை. அனைவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் பழகுவது நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் நல்லது. இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
அதன்பிறகு பேசிய ராஜஸ்தான் மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் மஹிர் ஆசாத், ராஜ்நாத்சிங்கின் பேச்சுக்கு எதிரான சில கருத்துக்களை கூறினார். அவர் கூறுகையில், முஸ்லிம்களுக்கு எதிரான நிர்வாகம் குறித்து தெரிவிக்க கோரும் நீங்கள், குஜராத்தில் முஸ்லிம்களுக்கான சலுகைகள் தடுக்கப்படுவது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ராஜ்நாத்சிங் பதில் எதுவும் சொல்லாமல் அரங்கை விட்டு வெளியேறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment