2004-ஆம் ஆண்டு மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு அப்பாவிகள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகையை அடுத்த மாதம் 4-ஆம் தேதி தாக்கல் செய்ய குஜராத் உயர்நீதிமன்றம் சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வருகிறார்கள் என்றும், இந்த முறையை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகளான ஜய்ந்த் பட்டேல், அபிலாஷ குமாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது.
இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரியும், சி.பி.ஐக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியுமான சதீஷ் வர்மாவின் சேவை இனி தேவையில்லை என்ற சி.பி.ஐ யின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
சர்மாவின் சேவையை இம்மாதம் 23-ஆம் தேதிக்குப் பிறகு மாநில அரசுக்கு அளிக்க நீதிமன்றம் கோரிக்கை விடுத்தது. சர்மாவை போதிய அளவில் சி.பி.ஐ பயன்படுத்தியுள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
அதேவேளையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அடுத்த மாதம் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் தேவை என்ற சி.பி.ஐயின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனிடையே, எனது மகளை ஏன் கொலைச் செய்தார்கள்? இதனால் யார் லாபம் அடைந்தார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார், இஷ்ரத் ஜஹானின் தாயார் ஷமீமா கவுஸர். இது குறித்து நேற்று ஊடகங்களுக்கு அவர் அளித்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:
எனது மகள் இஷ்ரத் ஜஹானை கடந்த 2004-ஆம் ஆண்டு குஜராத் போலீஸ் கடத்திச்சென்று சுட்டுக்கொலைச் செய்தது. மிகப்பெரிய சதித்திட்டத்தின் விளைவாகவே எனது மகள் கொலைச் செய்யப்பட்டாள். அது ஒரு அரசியல் நாடகமாகும். இஷ்ரத்தும், மூன்று நபர்களும் நரேந்திர மோடியை கொலை ச்செய்ய வந்த தீவிரவாதிகள் என்று குஜராத் போலீஸ் கூறியது. மோடியின் உயிரை பாதுகாப்பதற்காக குஜராத்தில் நடந்த முதல் போலி என்கவுண்டர் படுகொலை இதுவல்ல. முஸ்லிம்கள் அல்லாதவர்களும் குஜராத்தில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் எல்லாம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கல்லூரி மாணவியான எனது மகள் அவளுடைய தந்தையின் மரணத்திற்கு பிறகு சகோதரிகளின் படிப்புக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க டியூசன் வகுப்புகளை நடத்தி வந்தார். அவள் மரணித்தது முதல் இஷ்ரத் நிரபராதி என்றும், அவள் தீவிரவாதிகள் மற்றும் குற்றவாளிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். சி.பி.ஐ விசாரணைக் கோரி நான் உயர்நீதிமன்றத்தை அணுகினேன். ஆனால்,நீண்ட ஒன்பது ஆண்டுகளாக வழக்கை சீர்குலைக்கவும், விசாரணை நடவடிக்கைகளை தாமதப்படுத்தவும் குஜராத் அரசு முயற்சிக்கிறது. ஆகையால், இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள சூத்திரதாரி இன்னமும் இருட்டில் தான் உள்ளார்.
2009-ஆம் ஆண்டு நீதிபதி தமாங்கின் விசாரணை அறிக்கையில் எனது மகள் நிரபராதி என்றும் அவள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் நியமித்த ஆர்.ஆர்.வர்மா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவும் எனது மகள் நிரபராதி என்பதை தெளிவுப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கு 2011-ஆம் ஆண்டு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது இவ்வழக்கை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது. எனக்கு நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது. நீதி கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட சிலரை சி.பி.ஐ கைதுச் செய்துள்ளது. இச்சம்பவம் போலி என்கவுண்டர் என்று சி.பி.ஐயும் கூறுகிறது. சி.பி.ஐ சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் மிகப்பெரிய சதித்திட்டம் நடந்துள்ளது தெளிவாகிறது. இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி)வின் சிறப்பு இயக்குநர் ராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் இந்த சதித்திட்டத்தில் பங்கேற்றிருப்பதாக கூறப்படுகிறது. சி.பி.ஐயின் விசாரணை ஐ.பியின் மீதான தாக்குதல் என்று சில ஊடகங்களில் வெளியான செய்திகள் வருத்தத்தை தருகிறது. இவ்வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஐ.பிக்கு சாதகமாக எனது மகளைக் குறித்த போலியான ஆடியோ கிளிப்புகள் பிரபல தேசிய ஊடகத்தில் வெளியானது தவறான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காகும். இந்த ஊடகத்திற்கு எதிராக வக்கீல் நோட்டீஸை அனுப்ப தீர்மானித்துள்ளோம்.
இவ்வழக்கில் ஏராளமான உண்மைகளை நானும், பொதுமக்களும் அறியவேண்டியுள்ளது. சி.பி.ஐ உயர்நீதிமன்றத்தை அணுகி நியமனம் உறுதிச் செய்த சதீஷ் வர்மா என்ற அதிகாரியை ஏன் இவ்வழக்கின் விசாரணையில் இருந்து விடுவித்தார்கள்?எந்த நபரை குஜராத் அரசு பாதுகாக்கிறது?யார் எனது மகளை கொலைச் செய்தார்?யார் இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி? இவ்வாறு ஏராளமான கேள்விகளுக்கு எனக்கு பதில் கிடைக்கவேண்டியுள்ளது. இவ்வாறு ஷமீமா கவுஸர் கூறியுள்ளார்.
Reference: 1. New india.tv
2. Thoothu online.com
0 கருத்துரைகள்:
Post a Comment