Wednesday, June 12, 2013

தீவிரவாத குற்றங்களை பொய்யாக முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தும் காவல் துறைக்கு மே-17 இயக்கம் கண்டனம்

பெங்களூர் பா.ஜ.க அலுவலகம் அருகே ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக கர்நாடக, தமிழ் நாட்டு காவல் துறைகள் திட்டமிட்டு தமிழக முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை, அரசியல் ஆதாயம் பெறுவதற்காக நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட சதியாகவே பார்க்க வேண்டும். இந்துத்துவ சக்திகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்த பாசிச நோக்குடன் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஒன்றும் புதிது அல்ல. மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோத்தா ரயில் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு என்று நீண்ட பட்டியல் ஒன்றை இதற்கு ஆதாரமாக சுட்டிக் காட்டலாம்.

அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் இதற்காக குற்றம் சாட்டப்பட்டு பலிகடாவாக்கப்படுவதும் நடந்தே வருகிறது. இந்த குண்டு வெடிப்பிலும், போக்குவரத்து காவலர் நஞ்சப்பாவிடம் இருந்து புகார் பெற்று, பெறப்பட்ட புகாரில் குற்றத்தை நேரடியாக பார்த்தவர்கள் ஒருவரும் இல்லையென்பதால் இதன் பின்னணியில் தேச விரோத பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது தெளிவாகிறது என்று விசாரணை நடைபெறுவதற்கு முன்பே முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பது, குற்றவாளிகளை முன்னரே தீர்மானித்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. 14 இஸ்லாமிய இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு 11 பேர் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர்.
தேசிய மனித உரிமை கூட்டமைப்பின் உண்மை கண்டறியும் குழு பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை பல அதிர்ச்சித் தகவல்களை தருகிறது. அப்பாவி இஸ்லாமிய தமிழ் இளைஞர்கள் தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக் காட்டுவதுடன், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பிறருக்கு எதிராக பொய் சாட்சி சொல்வதற்கு வற்புறுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர் என்பதையும் பதிவு செய்கிறது. மேலும் குண்டு வெடிப்பிற்கு பயன்பட்ட சிம் கார்டுகளில் ஒன்று RSS தலைவர்களில் ஒருவருடையது அவரை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை. மேலும் சி.சி.டி.வியில் தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டை இருசக்கர வாகணத்தில் வைக்கும் காட்சிகள் பதிவாகியும் நஞ்சப்பாவைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் நிகழ்விற்கு கூட காவல் துறை முயற்சிக்கவில்லை. இவை அனைத்துமே காவல் துறையினரால் திட்டமிடப்பட்டு இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாத செயல்களுடன் சம்மந்தப்படுத்தப் படுவதையே சுட்டிக் காட்டுகிறது.

காவல் துறையின் இத்தகைய அப்பட்டமான சனநாயக மனித உரிமை மீறல்களை கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மே 17 இயக்கம் வலியுறுத்துகிறது. தொடர்ந்து அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது சுமத்தப்படும் குற்றங்களில் இருந்து அவர்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தீவிரவாத குற்றங்களை பொய்யாக முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தும் போக்கை காவல் துறை கைவிட வேண்டும் என்றும் மே 17 இயக்கம் வலியுறுத்துகிறது.
முஸ்லிம் சமுதாய மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக, அவர்களின் மீது சுமத்தப்படும் பொய் வழக்குகளில் இருந்து அப்பாவி இளைஞர்களை காக்க களத்தில் நின்று தோழமை கட்சிகள் / அமைப்புகளுடன் இணைந்து மே பதினேழு இயக்கம் போராடும்.
- மே பதினேழு இயக்கம்
-via@ keetru.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza