கொல்கத்தா: சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(யு.ஏ.பி.ஏ) உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களை பயன்படுத்தி தீவிரவாத வழக்குகளில் சிக்கவைத்து சிறையிலடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம்கள், பழங்குடியினர், மனித உரிமை ஆர்வலர்களை விடுதலைச் செய்யக் கோரி தேசிய அளவில் வலுவான பிரச்சாரத்தை மேற்கொள்ள எஸ்.டி.பி.ஐ தீர்மானித்துள்ளது.
கொல்கத்தாவில் எஸ்.டி.பி.ஐயின் தேசிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. எஸ்.டி.பி.ஐயின் பணிகள் ஆராயப்பட்டன. போராட்டத்தின் புதிய கட்டமாக தீவிரவாத வழக்குகளில் சிக்கிய நிரபராதிகளை விடுதலைச் செய்தல், யு.ஏ.பி.ஏ சட்டத்தை வாபஸ்பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய அளவில் பிரச்சாரம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. புதுடெல்லி ஜாமிஆ நகரில் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி பிரம்மாண்டமான பேரணியுடன் இப்பிரச்சாரம் துவங்கும்.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விசாரணை இல்லாமல் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதை தேசிய நிர்வாக குழு சுட்டிக்காட்டியது. இதர சமுதாயங்களுடன் ஒப்பிடும்பொழுது மக்கள் தொகை சதவீதத்தை விட அதிக அளவில் முஸ்லிம்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இத்துடன் தலித்துகள், பழங்குடியினர், மனித உரிமை ஆர்வலர்களும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆதாரங்களை தாக்கல் செய்ய முடியாவிட்டாலும் கூட யு.ஏ.பி.ஏவில் உள்ள கடுமையான சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி தொடர்ந்து இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிராக நடக்கும் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக பல்வேறு மாநிலங்களில் துண்டுப் பிரசுரம் விநியோகம், கண்டனப்பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். இக்கூட்டத்தில் கொல்கத்தாவில் கடந்த மாதம் 14-ஆம் தேதி நடந்த சமூக நீதி தினத்தில் துவக்கிய தேசிய இடஒதுக்கீடு பிரச்சாரத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது. முஸ்லிம்களுக்கும் இதர மத சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைச் செய்யும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அறிக்கை கடந்த 2009-ஆம் ஆண்டு பாராளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், பல மாநிலங்களும் இப்பரிந்துரையை அமல்படுத்த மறுத்து வருகின்றன. அரசியல் கட்சிகள் இடஒதுக்கீட்டை சாதாரண விஷயமாக ஒதுக்கி தள்ளுகின்றன. அடுத்த மக்களவை தேர்தலில் இடஒதுக்கீட்டை முக்கிய விஷயமாக எழுப்பவும் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் எ.ஸயீத் தலைமை வகித்தார். சாம்குட்டி ஜேக்கப், பேராசிரியர் நாஸ்னி பேகம், ஹாஃபிஸ் மன்சூர் அலிகான், அஃப்ஸர் பாஷா, அப்துல் மஜீத் பைஸி, இ.அபூபக்கர், யாஸ்மின் ஃபாரூகி மற்றும் மாநில தலைவர்கள் கலந்துகொண்டனர்
0 கருத்துரைகள்:
Post a Comment