Thursday, May 9, 2013

சென்னையில் ஐதராபாத் காவல்துறையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்!


சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளை சட்ட விரோதமாக கைது செய்து விசாரணை நடத்திய ஐதராபாத் காவல்துறை அதிகாரிகளை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றிய மாநிலத் துணைத்தலைவர் முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் கூறும்போது, "அனைத்து மக்களுக்கும் சமநீதி" என்ற உயர்ந்த லட்சியத்துடன் இந்திய தேசம் முழுவதும் பல்வேறு சமூக பணிகளை களம் கண்டு வரும் மக்கள் இயக்கமே "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா". ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், நீதி மறுக்கப்பட்டு வரும் முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் இந்திய தேசத்தின் சட்ட விழுமியங்களுக்கு உட்பட்டு ஜனநாயக முறையில் போராடிக் கொண்டிருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது சமீப காலமாக ஊடகத்துறை மூலமாகவும், பொய் பிரச்சாரங்கள் மூலமாகவும் உளவுத்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் ஐதரபாத்தில் காவல்துறை அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தமிழக தலைவரும், இந்நாள் தேசிய செயலாளருமாகிய முஹம்மது அலி ஜின்னா அவர்களை சட்ட விரோதமாக கைது விசாரணை நடத்தியுள்ளனர். இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் உளவுத்துறையின் தூண்டுதலின் அடிப்படையில் முஸ்லிம் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இத்தகைய பொய் பிரச்சாரங்களை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்லும். அத்தோடு மட்டுமல்லாமல் சமூக மாற்றத்திற்காகவும், தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கும் எல்லா அமைப்பிற்கும் இது போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டே இருகின்றன. இத்தகைய எதிர்ப்புகளை எல்லாம் கடந்து மக்களுக்கான சமூகப் பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து செயல்பட்டு வரும்" என அவர் தெரிவித்தார்.

இப்போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட தலைவர் மீரான், மாவட்ட செயலாளர் அப்துல்லாஹ், முத்து அஹமது மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza