Monday, May 20, 2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி!


அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி - கு. காந்திராஜா!மிழக அரசு அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அமுல்படுத்த முடிவு செய்திருக்கிறது; இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு விசயத்தை முதலில் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி மட்டும் அளிக்கப்படப் போவதில்லை; தமிழ்வழிக் கல்வி, ஆங்கில வழிக் கல்வி இரண்டுமே அளிக்கப்படவிருக்கின்றன. தற்போது வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பணம் கட்டி தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்து வருகின்றனர். ஏழைகளின் பிள்ளைகள் மட்டும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று வருகின்றனர். இனி அவர்களும் விரும்பினால், இலவசமாக ஆங்கில வழிக் கல்வி பயில முடியும். தமிழக அரசின் இந்த முடிவு ஒரு பாராட்டுக்குரிய விசயம்.


ஆங்கில வழியில் கல்வி கற்பதால் ஒருவரது அறிவு வளர்ச்சி கூடும் என்பதோ, தமிழ் வழியில் கற்பதால் அவர்கள் அறிவில் பின்தங்விடுவார்கள் என்பதெல்லாம் இல்லை. தற்காலத்தில் உலகம் பல்வேறு துறைகளிலும் குறிப்பாக விஞ்ஞானம், மருத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஆங்கில வழிக் கல்வி ஒருவரது வளர்ச்சிக்கும் விசயங்களை கிரகித்துக் கொள்ளும் தன்மைக்கும் கூடுதலாக உதவி செய்யும் என்பது நிச்சயமான உண்மை.

ஆங்கில வழிக் கல்வியினால் தமிழ் அழிந்து விடுமா..? நிச்சயம் இல்லை; தமிழ் அந்த அளவிற்கு பலவீனமான மொழியல்ல. இன்றைய தினம் தமிழகம் முழுக்க  பல்லாயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் உள்ளன; இலட்சக்கணக்கான தமிழ் மாணவர்கள் இங்கே பயில்கின்றனர்; இவைகளில் ஆங்கிலமே பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. இதனால் தமிழ் அழிந்து விட்டதா..? இல்லையே! அப்படியிருக்க, அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்பித்தால் மட்டும் தமிழ் அழிந்து விடுமா..? வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் ஆங்கில வழியில் கல்வி கற்றால் தமிழ் அழியாது; ஏழைப் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி கற்றால் மட்டும் தமிழ் அழிந்து விடுமா..? இது என்ன மனப்பான்மை..?

தமிழ், உலகின் தொன்மையான மொழி; இலக்கண இலக்கிய வளம் பெற்ற மொழி; அது என்றும் அழியாது. பிற மொழிகளால் அதனை அழிக்கவும் முடியாது. இப்படித்தான் 1965-66களில் தமிழர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அவர்களை ஹிந்தி கற்கவிடாமல் செய்தனர் தி.மு.க.வினர். கருணாநிதியும் அதில் முக்கிய பங்கு வகித்தவர். கேரள மாநிலத்தினரும் ஆந்திர மக்களும் கன்னடரும் ஹிந்தி கற்றனர்; அதனால் அவர்களது தாய்மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்றவை அழிந்து விடவில்லை. அம்மொழிகள் இன்றும் சீரோடும் சிறப்போடும்தான் விளங்குகின்றன.

இன்று அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அமுல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும் கருணாநிதிதான் முக்கியமானவராயிருக்கிறார். கருணாநிதிக்கு இப்போது வயது 90 ஆகிறது. அதனால், அவருக்கு இப்போது எண்ணற்ற மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள் பேத்திகள் என வாரிசுகள் அதிகமிருப்பார்கள். இந்த வாரிசுகளில் எத்தனை பேர் தமிழ் வழிக் கல்வி கற்றவர்கள், கற்றுக் கொண்டிருப்பவர்கள் என்பதை கருணாநிதி வெளிப்படையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். செய்வாரா..?
கருணாநிதியின் பேரன்கள் தொழில் தொடங்கினால்(திரைப்படம் தயாரித்தால்), RED GIANT, CLOUD NINE, SUN MOVIES என்று ஆங்கிலத்தில்தான் பெயர் வைக்கிறார்கள். தாங்கள் வாங்கியிருக்கும் ஐ.பில்.எல். கிரிக்கெட் டீமிற்கு கூட SUN RISERS என்று ஆங்கிலத்தில்தான் பெயர் சூட்டுகிறார்கள். இவரது மகன்களும் மகள்களும் தங்களது பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும்போது கூட தயாநிதி, உதய நிதி, ஆதித்யா என பிற மொழிப் பெயர்களைத்தான் வைக்கிறார்கள்.

தனது குடும்பத்தில் தமிழுக்கு இடமேயில்லை என்ற நிலையை உண்டாக்கி வைத்திருக்கும் கருணாநிதி, ஏழை பொதுமக்களுக்கு மட்டும் தமிழ்ப்பற்று பற்றி உபதேசம் செய்யக் கிளம்பி விட்டார். இப்படி இரட்டை வேடம் போட்டுத்தான் இலங்கைத் தமிழர்களை அழித்தார்; இப்போது இந்தியத் தமிழர்களிடம் தனது இரட்டை வேடத்தை காட்ட சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார்.

தமிழர்கள் யாரும் தழிழ் வழியில் கல்வி கற்கக் கூடாது; ஆங்கில வழியில் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்று யாரும் பொருள் கொண்டுவிடக் கூடாது. தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழியில் கல்வி கற்க வேண்டும் என்று விரும்பும் ஏழைப் பெற்றோர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு இலவசமாக அளிக்கப்படும் போது அதை முடக்க முயலக்கூடாது.

தமிழ் வாழ வேண்டும்;தமிழனும் வாழ வேண்டும்.
தமிழ்ச் சமுதாயம் உலகில் உயர்ந்து நிற்கும்போது,
தமிழ் உலகில் முதன்மை ஸ்தானம் பெறும்.   
தமிழனின் வளர்ச்சிதான் தமிழின் வளர்ச்சி.

நம்மால் எத்தனை மொழிகளைக் கற்க முடியுமோ
அத்தனை மொழிகளைக் கற்போம்;
அது நமதுஅறிவையும் வளர்ச்சிக்கான வாய்ப்பையும்
விரிவுபடுத்தும்.
ஆனால், என்றும் தமிழராய் வாழ்வோம்;        
தமிழை மறவாதிருப்போம்.
கு.காந்தி ராஜா, எண்ணூர்-சென்னை

-inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza