மிகவும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் உலகம் முழுவதும் ஏற்படுத்திய ஃபலஸ்தீன சிறுவன் அல் துர்ராவின் கொலைச் சம்பவத்தில், தமது ராணுவத்திற்கு பங்கில்லை என்று இஸ்ரேல் கூறுகிறது.
பிரெஞ்சு தொலைக்காட்சி அலைவரிசையான பிரான்சு-2 வெளியிட்ட தகவல் அடிப்படையற்றது என்று இஸ்ரேல் நியமித்த விசாரணை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2000-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபலஸ்தீனின் 12 வயது சிறுவனான முஹம்மது அல் துர்ராவை அவரது தந்தை ஜமால், தனது பின்னால் மறைத்து வைத்த பிறகும் இஸ்ரேலின் கொடிய ராணுவம் துர்ராவை சுட்டுக் கொல்லும் கோரமான காட்சியின் வீடியோவை பிரான்சு நாட்டு சானல் ஒளிபரப்பியது.
தனது அருமை மகனை காப்பாற்றுவதற்கான தந்தை ஜமாலின் நீண்ட போராட்டம் வீணானது. பின்னர் அல் துர்ராவின் உடலை கொண்டுவருவதும் வீடியோவில் இடம்பெற்றிருந்தது. ஜமாலுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.
இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகளை உலக அளவில் இச்சம்பவம் ஏற்படுத்தியது. மேலும் ஃபலஸ்தீனில் போராட்டம் வலுப்பெறவும் இச்சம்பவம் காரணமானது. பல்வேறு நிர்பந்தங்களின் காரணமாக இச்சம்பவத்திற்காக இஸ்ரேல் மன்னிப்புக் கோரியது. அல் துர்ராவின் மரணத்திற்கு ஃபலஸ்தீன் போராளிக் குழுக்கள் தாம் காரணம் என்று பொய்யைக் கூறியது இஸ்ரேல். எதிர்ப்பு வலுப்பெறுவதை கவனத்தில் கொண்டு விசாரணைக்கு இஸ்ரேல் உத்தரவிட்டது.
ஃபலஸ்தீன் போராளிகளின் செயல்பாடுகளை நியாயப்படுத்தவும், இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்புணர்வை அதிகரிக்கவுமே பிரான்சு நாட்டு தொலைக்காட்சி சானலின் செய்தி அறிக்கை உதவியது என்று இஸ்ரேல் விசாரணைக் குழு குற்றம்
சாட்டுகிறது. ஆனால், விசாரணை அறிக்கை இஸ்ரேலின் உருவாக்கம் என்று முஹம்மது அல் துர்ராவின் தந்தை ஜமால் அல் துரா கூறியுள்ளார்.
தனக்கும், மகனுக்கும் என்ன நேர்ந்தது? என்பதை அறிய அரபு பிரதிநிதிகளை உள்ளடக்கிய சர்வதேச விசாரணைதான் தேவை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஜமால் கூறியுள்ளார்.
தங்களின் செய்தி அறிக்கையில் ஒரு தவறும் இல்லை என்றும், எந்த சுதந்திர ஏஜன்சிகள் விசாரணை நடத்தினாலும் தாங்கள் ஆதரவு தெரிவிப்போம் என்றும் பிரான்சு தொலைக்காட்சி சானல் தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment