கொழும்பு: இலங்கையின் வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இலங்கை தமிழரசு கட்சியின் நிறுவனரான தந்தை செல்வாவின் 36-வது நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார் சுமந்திரன்.
அப்பொழுது அவர் கூறியது: "இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேணடும் என்ற கோரிக்கை தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்னவெனில் மனித உரிமை விடயத்திலே இருதரப்பினர்களும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கெதிராக குற்றம் புரிந்துள்ளார்கள். இது விசாரிக்கப்பட வேண்டும் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நாங்கள் ஆதரிக்கின்றோம்.
இருதரப்பினரையும் உட்படுத்தி இந்த விசாரணை இடம்பெற வேண்டும். சர்வதேச சட்டத்திலே மிக பெரிய குற்றமான இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்பதையும், இறுதிகட்ட போரின் போது வன்னிப் பகுதியிலே வாழ்ந்த மூன்று இலட்சம் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கம் கொடுமை இழைத்தது என்பதையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக எங்களுடைய பூர்வீக நிலம் தற்போது அபகரிக்கப்படுகின்றன என்பதையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதேவேளையில், எங்களுடைய தரப்பிலிருந்தும் தவறுகள் இடம்பெற்றுள்ளதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களுடைய மண்ணிலிருந்து இன சுத்திகரிப்பை நாம் செய்திருக்கிறோம். தமிழர் தரப்பிலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து முஸ்லிம் சகோதரர்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டதை எவரும் நியாயப்படுத்த முடியாது இந்த கவப்பான உண்மை. நாமும் இன சுத்திகரிபிற்கு குற்றவாளிகள் என்பதை ஏற்றுக்கொள்ளும் வரையில் நமக்கெதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாது" என்று அவர் தெரிவித்தார்
0 கருத்துரைகள்:
Post a Comment