மலேசியாவில் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் குறித்த விவகாரங்களின் அமைச்சக பதவி, ஹிண்ட்ராஃப் என்ற அமைப்பின் தலைவர் வேதமூர்த்திக்கு அளிக்கப்பட்டதற்கு மலேசிய இந்திய காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மலேசியாவில் அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நஜீப் ரஸ்ஸாக் தலைமையிலான அரசு மீண்டும் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. இவ்வரசின் அமைச்சரவையில் ஹிண்ட்ராஃபின் வேதமூர்த்திக்கு இந்திய வம்சாவளி மக்களின் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதுத் தொடர்பாக பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், சுற்றுச் சூழல் அமைச்சருமான பழனிவேலு பேட்டி அளித்தார்.
அவர் தனது பேட்டியில் கூறியது: “பிரதமர் நஜீப் ரசாக்கின் நேரடிப் பார்வையில், பிரதமர் அலுவலகத்தில் இந்தத் துறைக்கான துணை அமைச்சராக வேதமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதை எந்த வகையிலும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.இதுக் குறித்து பிரதமர் நஜீப் ரஸ்ஸாக்குடன் விவாதித்திருந்தோம். ஆனால், அவர் எவ்வித பதிலையும் தெரிவிக்கவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளி மக்களின் நலன்களை நாங்களே முன்னெடுத்து வருகிறோம் எங்களது கட்சியியே அவர்களது ‘தாய் கட்சி’ ஆகும்.
ஓர் அரசியல் கட்சியான எங்களிடம் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் குறித்த துறையை அளிக்காமல், ஒரு தனி நபரான வேதமூர்த்தியிடம் அது அளிக்கப்பட்டது தவறு ஆகும். எங்களது கோரிக்கைகளை பிரதமர் நஜீப் ரசாக் நிராகரித்தால் தமது கட்சி அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்கும் என்று பழனிவேலு கூறினார்.
மேலும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து விலகுமா என்கிற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
வேதமூர்த்தி மலேசிய இந்திய காங்கிரஸை எதிர்ப்பதையே குறியாகக் கொண்டிருக்கிறார் என்றும் அவரால் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றும் பழனிவேலு மேலும் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment