பெங்களூரு மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பு வழக்கில் மூன்று மாநிலங்கள் தொடர்பு இருப்பதாலும், பல முரண்பாடான தகவல்கள் வெளியாவதாலும் இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்
என மனித உரிமைகள் அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் (NCHRO), உண்மை கண்டறியும் குழு வலியுறுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி பா.ஜ.க. அலுவலகம் முன்பு குண்டு வெடித்தது. இதில் சிக்கிய 17 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக சென்னை, நெல்லை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 11 பேரை தமிழக காவல் துறை உதவியுடன் பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். இது தவிர பக்ரூதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய மூன்று பேரை தேடி வருவதாகவும் பெங்களூரு போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் மனித உரிமைகள் அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (NCHRO) சார்பில் இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கர்நாடக மாநிலத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடம், கைது செய்யப்பட்டவர்கள், போலீஸ் விசாரணை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 24, 25ஆம் தேதிகளில் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து உண்மை கண்டறியும் குழுவின் தலைவரான வழக்கறிஞர் பா.மோகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; பா.ஜ.க அலுவலகம் முன்பு நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் இஸ்லாமியர்கள் திட்டமிட்டே காவல் துறையினரால் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களை கொண்டு மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மாதானி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்பினரை இந்த வழக்கில் சிக்க வைக்க தமிழக, கர்நாடக காவல் துறை சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளபடுகிறது. இதற்காக கைது செய்யப்பட்ட இஸ்லாமியரை துன்புறுத்தும் செயல்களில் காவல்துறை ஈடுபட்டு வருவதாகவும் பா.மோகன் குற்றம் சாட்டினார்.
இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட 16 சிம் கார்டுகளில் ஓன்று ஆர்.எஸ்.எஸ் பிரமுகருக்கு சொந்தமானது என தெரியவந்தும், அவரை போலீசார் அழைத்து விசாரிக்காமல் இருப்பதாகவும் மோகன் குற்றம் சாட்டினார்.
தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய முன்று மாநிலங்கள் இந்த வழக்கில் தொடர்பில் இருப்பதால் இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சிலர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன்பாகவே வேறு வழக்குகளில் சிறையில் இருந்திருப்பதும் தெரியவந்துள்ளது. விசாரணையில் கிடைக்கும் தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் சி.பி.ஐ. விசாரணை அவசியம் என்றார்.
0 கருத்துரைகள்:
Post a Comment