புதுடெல்லி : ஆந்திரமாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மற்றும் இஃப்லு பல்கலைக் கழக வளாகங்களில் சிறுபான்மை, தலித் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சங்பரிவார மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி மற்றும் போலீஸுக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுத் தொடர்பாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் இமாமுல் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின்(ஏ.பி.வி.பி) தாக்குதலுக்கு இரையாகும் தலித் மாணவர்களை கைதுச் செய்யும் நடவடிக்கையை போலீஸ் மேற்கொண்டுள்ளது. இஃப்லு பல்கலைக் கழகத்தில் கஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த மாணவர் முதஸ்ஸிர் கம்ரானின் தற்கொலைக்கு காரணம் பல்கலைக் கழக நிர்வாகிகள், பாசிச மாணவர் அமைப்புகள், போலீஸ் ஆகியோரின் சதித்திட்டமாகும்.
தலித் சமூகத்தைச் சார்ந்த ஒப்பந்த பணியாளர் நரசிம்ஹ ராவின் மரணத்தைத் தொடர்ந்து அனாதையாக்கப்பட்ட குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்கக் கோரி மாணவர்களும், பணியாளர்களும் நடத்திய அமைதியான போராட்டத்தை பல்கலைக் கழக வளாகத்தில் அத்துமீறி நுழைந்து போலீஸ் அடக்கி ஒடுக்கியுள்ளது.இதில் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டு ஆறுபேர் கைதுச் செய்யப்பட்டனர்.
காவிமயமாக்கப்பட்ட போலீசும், ஏ.பி.வி.பியும் தலித் - சிறுபான்மை மாணவர்களின் வளர்ச்சியை அடக்கி ஒடுக்க முயற்சிக்கிறார்கள். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் டெல்லி பல்கலைக்கழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த கேம்பஸ் ஃப்ரண்ட் உள்ளிட்ட மாணவர்கள் அமைப்புகள் மீது போலீசும், ஏ.பி.வி.பியும் இணைந்து தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர். வகுப்புவாதமயமாக்கப்பட்ட போலீசின் கோர முகத்தை இச்சம்பவங்கள் நிரூபிக்கின்றன.தலித் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி அமைப்பினர், போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு இமாமுல் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment