Wednesday, May 29, 2013

ராஜ்நாத் சிங்கிற்கு ஜனநாயகத்தை பற்றி பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது? மாவோயிஸ்டுகள் கேள்வி!

பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு ஜனநாயகத்தை பற்றி பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது? என்று சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து கடிதம் எழுதியுள்ள மாவோயிஸ்டுகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
‘எங்களின் தாக்குதலை ஜனநாயக கோட்பாடுகள் மீதான தாக்குதல் என கூறுபவர்கள், பீஜப்பூரில் நடந்த என்கவுன்டரில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் துணை ராணுவப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு ஜனநாயக கோட்பாடுகள் பற்றிய சிந்தனை ஏன் வரவில்லை?’ என்றும் மாவோயிஸ்ட்கள் ஊடகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சத்தீஷ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நடந்த யாத்திரையில் பங்கேற்று விட்டு அடர்ந்த காட்டின் வழியே திரும்பிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மீது மாவோயிஸ்டுகள் கடந்த 25ஆம் தேதி தாக்குதல்கள் நடத்தினர்.
இந்த தாக்குதலில் சத்தீஷ்கர் மாநில முன்னாள் அமைச்சரும் சல்வார் ஜூடும் கொலைகார படையின் நிறுவனருமான மகேந்திர கர்மா, மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பட்டேல், அவரது மூத்த மகன் தினேஷ் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு மாவோயிஸ்டுகள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.
இது தொடர்பாக மக்கள் விடுதலை கொரில்லா படை என்னும் மாவோயிஸ்ட் அமைப்பின் தந்தகாரண்யா விசேஷ் மண்டல கமிட்டியின் செய்தி தொடர்பாளர் குத்சா உசண்டி, ஊடக அலுவலகங்களுக்கு 4 பக்க அளவிலான ஒரு கடிதத்தையும், ஆடியோ கேசட்டையும் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில், “பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள்தான் மக்கள் விரோத கொள்கைகளுக்கு பொறுப்பு. எனவே மூத்த அரசியல்வாதிகளை குறிவைத்தோம். எங்கள் தாக்குதலின் முக்கிய நோக்கம் மகேந்திர கர்மா, நந்தகுமார் பட்டேல் மற்றும் தலைவர்கள் ஆவார்கள். 
பஸ்தார் மாவட்டத்தில், நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டைக்காக துணை ராணுவப்படைகளை அமர்த்தியது மாநில உள்துறை அமைச்சராக இருந்த நந்தகுமார் பட்டேல் ஆவார். மத்திய அமைச்சராக இருந்த வி.சி.சுக்லாவும் சாமானிய மக்களின் எதிரிதான்.

நக்சலைட்டுகள் இயக்கத்துக்கு எதிரான சல்வா ஜூடும் இயக்கத்தை தொடங்கிய மகேந்திர கர்மா மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களை தண்டிக்கத்தான் இந்த தாக்குதலை நடத்தினோம். கர்மாவும், நந்தகுமார் பட்டேலும் ஊழலையும், மக்கள் விரோத கொள்கைகளையும் அமல்படுத்தியவர்கள் ஆவார்கள். பழங்குடி இனத்தலைவர் என அழைக்கப்பட்ட கர்மா, மாஞ்ஜ் சாதியை சேர்ந்த நிலச்சுவான்தார் குடும்பத்தை சேர்ந்தவர். அவர்களது குடும்பத்தினர் பழங்குடி இன மக்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தவர்கள்.
சல்வா ஜூடும் இயக்கம் செயல்பட்டு வந்தபோது, நூற்றுக்கணக்கான ஆதிவாசிப் பெண்கள் கும்பல் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்பாவி கிராம மக்கள் பலரும் கொல்லப்பட்டனர். இப்போது நடத்திய தாக்குதல் மூலம் நாங்கள் பழிக்குப்பழி வாங்கியுள்ளோம். எங்கள் தாக்குதலில் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள், டிரைவர்கள், உதவியாளர்களும் பலியாகிவிட்டனர். அவர்கள் எங்கள் பகைவர்கள் அல்ல. இருப்பினும் இந்த தாக்குதலில் அவர்கள் உயிரிழந்ததற்காக மிகவும் வருந்துகிறோம். அவர்களை இழந்து தவிக்கிற குடும்பங்களுக்கு எங்கள் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, சத்தீஷ்கர் முதல்வர் ரமண்சிங் ஆகியோர், இந்த தாக்குதல் சம்பவம், ஜனநாயக கோட்பாடுகள் மீதான தாக்குதல் என கூறினர்.
நக்சலைட்டுகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் எதிராக அனைவரும் கட்சி வித்தியாசமின்றி எழ வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். இவர்களுக்கு ஜனநாயகத்தை பற்றியும், ஜனநாயக கோட்பாடுகள் பற்றியும் பேசுவதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது என நாங்கள் கேட்கிறோம்.
பீஜப்பூரில் கடந்த 17ஆம் தேதி நடந்த என்கவுன்டரில் 3 குழந்தைகள் உள்பட 8 பேரை போலீசாரும், துணை ராணுவப்படையினரும் சுட்டுக்கொன்றனர். இவர்கள் கொல்லப்பட்ட போது, அந்த தலைவர்களுக்கு ஜனநாயக கோட்பாடுகள் பற்றிய சிந்தனை ஏன் வரவில்லை?
பசுமை வேட்டை நடவடிக்கை என்ற பெயரில் நடத்தப்படுகிற வேட்டையை உடனே முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அங்கு அமர்த்தப்பட்டுள்ள அத்தனை துணை ராணுவத்தினரையும் திரும்ப அழைக்க வேண்டும். பயிற்சி என்ற பெயரில் பஸ்தார் பகுதியில் ராணுவத்தினரை நிறுத்தக்கூடாது. சிறையில் அடைக் கப்பட்டுள்ள அனைத்து தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்(UAPA), சத்தீஷ்கர் சிறப்பு மக்கள் பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ள அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட வேண்டும்" என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- New India

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza