விக்கிலீக்ஸ் போட்டுள்ள அடுத்த குண்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அரசுக்கு எதிராக கலவரங்களை நடத்த சி.ஐ.ஏ.விடம் பணம் கோரினார், பணம் பெற்றுக் கொள்ள தயாராக இருந்தார் என்பது! இதனால், குறிப்பிடத்தக்க அளவு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது நடைபெற்றது, இந்திரா காந்தி பிரதமராக இருந்து எமர்ஜென்சி கொண்டுவந்த காலப்பகுதியில்.
தீவிர சோசியலிஸ்ட்வாதியாகவும், தொழிற்சங்கவாதியாகவும் கருதப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடனத்தை கடுமையாக எதிர்த்தார். இதனால் அவர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார்.
அன்னிய முதலீட்டிற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவராகவும் கருதப்பட்ட பெர்னாண்டஸ், இந்திரா காந்தி தலைமையிலான அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள, அதே அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமும், பிரான்ஸிடமும் பணம் பெற்றுக் கொள்ள தயாராக இருந்தார் என்பதே, விக்கிலீக்ஸ் கேபிள்கள் ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சி.
இந்நிலையில் அவசர நிலைக்கு எதிராக நாட்டில் ஆங்காங்கே கலவரத்தை ஏற்படுத்துவதற்காக அவசர நிலை அமலில் இருந்தபோது, அதாவது 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சி.ஐ.ஏ.-விடமிருந்து அவர் பணம் கோரியதாகவும், அதனைப்பெற அவர் தயாராக இருந்ததாகவும், அப்போதைய இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரி, தங்கள் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய கேபிள்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கேபிள்களையே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
பெர்னாண்டஸ் மீது கூறப்படும் இந்த குற்றச்சாட்டை அவரது ஆதரவாளர்கள் மறுத்துள்ளனர். இது பெர்னாண்டஸை களங்கப்படுத்துவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட சில சக்திகளின் முயற்சி என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் முந்தைய பா.ஜ.க ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment