Saturday, April 6, 2013

மணிப்பூர்:என்கவுண்டர்கள் போலியானது – உச்சநீதிமன்ற விசாரணைக்குழு அறிக்கை தாக்கல்!

Manipur encounters fake, says SC probe panel
மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட 6 என்கவுன்ட்டர்களும் போலி என உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. எந்த குற்றப் பின்னணியும் இல்லாத 12 வயது சிறுவன் உள்பட 6 பேர் என்கவுன்ட்டர் முறையில் கொல்லப்பட்டனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
மணிப்பூரில் 2000-க்குm மேற்பட்டோர் போலி என்கவுன்ட்டர் முறையில் கொல்லப்பட்டனர். ஆனால் இவை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஜே.எம். லிங்டோ மற்றும் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் நியமித்தது. கொல்லப்பட்ட 6 பேருக்கும் எந்த குற்றப் பின்னணியும் இல்லை. அவை அனைத்தும்  உண்மையான என்கவுன்ட்டர்கள் இல்லை என குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
என்கவுன்ட்டர்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த விதிமுறைகள் எதுவும் இதில் பின்பற்றப்படவில்லை. இக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் அப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், மணிப்பூரில் நடைபெற்ற 6 என்கவுன்ட்டர்களும் போலி என தெரியவந்துள்ளது. குற்றவியல் நீதிபதி மேற்கொண்ட விசாரணை திருப்தி தருவதாக இல்லை. பாதிக்கப்பட்டோர் மத்தியில் நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. இச்சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உத்தரவிட முடியாது. மேலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் நிலை குறித்து விசாரிக்க முடியாது. எனினும் குழுவின் அறிக்கை தொடர்பாக வரும் 9-ம் தேதி உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கு வங்க எல்லையில் பி.எஸ்.எப் படையினரால் 200-க்கும் மேற்பட்டோர் விசாரணையில்லாமல் கொல்லப்பட்டதாகக் கூறி கொல்கத்தாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
-thoothu

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza