புதுடெல்லி: சமூகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வரும் ஸ்கூல் சலோ பிரச்சாரம் இவ்வாண்டு டெல்லியில் துவங்கியது. வரலாறு துயில் கொள்ளும் டெல்லி செங்கோட்டையில், கல்வியின் முக்கியத்துவத்தையும், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி கற்பதன் உரிமையையும் எடுத்தியம்பும் முழக்கங்களையும், அட்டைகளையும் ஏந்தி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற பேரணியின் மூலம் இந்நிகழ்ச்சி துவங்கியது.
எஸ்.சி-எஸ்.டி கமிஷனின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தாஜுத்தீன் அன்ஸாரி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். டாக்டர் தாஜுத்தீன் அன்ஸாரி தனது உரையில், "ஒடுக்கப்பட்ட பிரிவினரில் பெண் குழந்தைகளுக்கு கல்வியை அளிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்" என்றார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் தலைமை வகித்தார். அவர் தனது உரையில், "நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை அளிப்பது சமூகத்தின் கடமையாகும். சாதி, மதம், பாலினம் பாராமல் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்கவேண்டும். கிராமப்பகுதிகளில் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவ பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஸ்கூல் சலோ பிரச்சாரத்தின் மூலம் இவ்வாண்டு ஒரு லட்சம் ஸ்கூல் கிட்(பள்ளிக்கூடம் செல்ல தேவையான புத்தகங்கள், இதர பொருட்கள் அடங்கிய பை) விநியோகிக்கப்படும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரபல எழுத்தாளரும், ஆல் இந்தியா எஜுகேஷனல் மூவ்மெண்டின் துணைத் தலைவருமான மன்சூர் ஆகா கூறுகையில், "ஏழை மாணவர்களை கல்வியில் ஊக்கமூட்டும் பாப்புலர் ஃப்ரண்டின் பணி பாராட்டத்தக்கது" என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் கம்யூனிட்டி டெவல்ப்மெண்ட் துறையின் பொறுப்பாளர் சி.கே.ஆஸிஃப், டெல்லி மாநில தலைவர் அன்ஸார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
கல்வி சர்வே, விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பள்ளிக்கூடங்களில் பாதியில் படிப்பை நிறுத்தும் மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது, பள்ளிக்கூட கிட் விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஸ்கூல் சலோ பிரச்சாரம் மூலம் நடத்த உள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment