Friday, April 12, 2013

உலக நாடுகளின் அடிமை தேசம்!


இந்தியாவின் நீதி துறை ஏதோ நாட்டு நலனில் அக்கறை உள்ளது போல் அடிக்கடி திடீர் அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தும்.

சில நேரங்களில் தங்களுக்கு சம்மந்தம் இல்லாத விசயத்தில் கூட மூக்கை நுழைத்து அறிவுரை வழங்கும் அல்லது விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லும். அத்தனையும் கடைந்தெடுத்த நாடகமே.

மக்களின் எதிர்ப்பை, போராட்டங்களை வலுவிழக்க செய்ய ஆட்சியாளர்களின் கைகூலிகளாக உட்ச்ச நீதிமன்றம் செயல்படுகின்றது. தங்களை நல்லவர்கள் என்று காட்டி கொள்ள சில உப்பு, சப்பில்லா விசயங்களை கையில் எடுத்து  கொள்வதும், தேவையான விஷயங்கள் வரும்பொழுது வெகுஜன விரோத  தீர்ப்புகளை வழங்குவதுமே சுப்ரீம் கோர்ட்டின் வாடிக்கை.

இத்தாலிய கடல்படை வீரர்கள் இந்திய கடல் எல்லையில் வைத்து கேரள மீனவர்கள் இருவரை சுட்டு கொன்றார்கள். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட   கொலை குற்றவாளிகளை இந்திய அரசு இத்தாலி செல்ல அனுமதித்தது. இத்தாலி சென்ற அவர்களை திரும்ப அனுப்ப முடியாது என்று இத்தாலி அரசு மறுத்து விட்டது.

இதுகுறித்து இந்தியாவில் பலத்த மக்கள் எதிர்ப்பு ஏற்ப்பட்டது. பல்வேறு அமைப்புகள், கட்சிகள் இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. SDPI கட்சி (சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா) டெல்லி இத்தாலி தூதரகத்தை நோக்கி பேரணி நடத்தி கடும் கண்டனத்தை தெரிவித்தது. SDPI நடத்திய போராட்டம் குறித்த செய்திகள் இத்தாலிய பத்திரிக்கைகளில் தலைப்பு செய்திகளாயின. இதனால் இந்திய மானம் உலக அளவில் சந்தி சிரித்தது. 

உள்நாட்டில் எழும் மக்கள் போராட்டங்களின் வாய் அடைக்கவும், வெளிநாடுகளில் ஏற்ப்பட்ட அவமானத்தை துடைக்கவும் வழக்கம் போல் தங்களது ஏவலாளியான சுப்ரீம் கோர்ட்டை ஏவியது இந்திய அரசு. சுப்ரீம்  கோர்ட் இத்தாலிய தூதரை நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று ஒரு கோமாளித்தனமான கட்டளையை பிறபித்தது. எந்த சூழ்நிலையிலும் நாம் வெளிநாட்டு தூதர்களை தடுத்து வைக்க முடியாது என்கிற உலகளாவிய விதிகள்தெரியாதவர்களா நமது சட்டம் படித்த மேதைகள். இருந்தும் உள்நாட்டு மக்கள் எதிர்ப்பை சமாளிக்க போலியான ஒரு கட்டளையை பிறபித்தார்கள் இந்த மெத்த படித்த கோமான்கள்.

இந்நிலையில் இந்திய அரசு இத்தாலி அரசின் கால்களில் விழுந்து உங்கள் கடல்படை வீரர்களை தண்டிக்க மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து திரும்ப கொண்டு வந்தார்கள். மீன் பிடித்து கொண்டிருந்த அப்பாவி மீனவர்களை அநியாயமாக சுட்டு கொன்ற கொலையாளிகளை இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது, அவர்களை நாடுதிரும்ப அனுமதித்தது. இந்த சூரபுளிகளின் இலட்சணம் இதுதான். இதே ஒரு அமெரிக்கனையோ வேறு நாட்டு காரனையோ இந்திய கடல் படை வீரன் கொன்றிருந்தால் என்ன நடக்கும்? அவர்கள் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு சட்டப்படி விசாரணை செய்யப்பட்டு தண்டனையும் கொடுத்து விடுவார்கள். 

தினம் தினம் தமிழக மீனவர்களை சுட்டு கொல்லும் இலங்கையின் கால்களை பிடித்து தொங்கும் அடிமை தேசம்தானே இது! நாம் சுதந்திரம் பெற்ற ஒருநாட்டின் குடிமைக்கள் இல்லை! அடிமை தேசத்தின் குடிமக்கள்! உலக நாடுகளின் அடிமை தேசம் என்று  இந்தியாவை  சொல்லலாமா? 

சுதந்திர தமிழனாய்! அடிமை தேசத்தில் இருந்து விடுதலை பெறுவோம்! வாருங்கள்! 

-மலர் விழி

-Sinthikavum.net

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza