Saturday, April 6, 2013

பாலியல் குற்றங்களில் நம்பர் 1 இராணுவம் எது?

மெரிக்காவின் முன்னாள் இராணுவ வீரர்கள் நான்கு பேர், பணியிடத்தில், இராணுவ அதிகாரிகளாலும், சக ஊழியர்களாலும் அவர்கள் மேல் ஏவப்பட்ட பாலியல் தாக்குதல்களைப் பற்றிய அதிர்ச்சியுட்டும் அனுபவங்களை, அண்மையில் நடந்த செனட் விசாரணையில் பகிர்ந்து கொண்டனர்.  அமெரிக்க இராணுவ நீதிமுறைகளை கேள்விக்குள்ளாக்கி, அதை மாற்றி அமைக்கவும் கோரியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பெண்கள், ஒரு ஆண். ‘இராணுவ சட்ட விதிகள், பாதிக்கப்பட்டவர்கள் மீது எதிர்த்தாக்குதல்களையும், அச்சுறுத்தல்களை தொடுத்து, குற்றவாளிகளை தண்டனை ஏதுமின்றி தப்பிக்க உத்திரவாதம் செய்தன’ என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ரெபேக்கா ஹவ்ரில்லா என்ற பெண் இராணுவ வீரர், ‘இராணுவ கிரிமினல் நீதித்துறை முற்றிலும் ஒழுங்கற்றது’ என்கிறார். இராணுவ சார்ஜண்டாக இருந்த ஹார்வில்லா, 2007 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் போர்முனையில், வெடிகுண்டு அகற்றும் நிபுணராக பணியாற்றியுள்ளார்.
அங்கு ஒரு சக இராணுவ வீரன் அவரை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளான். அவன் மீது புகார் கொடுத்த ஹார்வில்லாவை, பழிவாங்கும் நோக்கில், அவருடைய அந்தரங்க படங்களை சமூக இணைய தளங்களில் வெளியிட்டுள்ளான். தொடர்ந்து, மேல்அதிகாரிகளிடம் முறையீடு செய்தும், எந்தவித பாதிப்பும் தண்டனையுமின்றி குற்றவாளி தப்பித்துவிட்டான்.
ஆனால் குற்றப்பதிவு செய்த ஒரே காரணத்தால், மணிக்கணக்கில் விசாரணை என்ற பெயரில் தொல்லைகளும், கேட்கத்தகாத கேள்விகளும் தான் ஹார்வில்லாவிற்கு மிஞ்சின.
இறுதியில் இராணுவ மத குருவான சாப்லனை அணுகியிருக்கிறார் ஹார்வில்லா. ஆறுதலாக பேசியவ அவர், ‘இந்த பாலியல் தாக்குதல்கள் கடவுளின் விருப்பத்தின் பேரில் நடந்துள்ளன என்றும் கடவுள் மீது முழு கவனமும் திரும்பி, மீண்டும் தடையின்றி தேவாலயத்திற்கு வருவதற்காகவே இத்திருவிளையாட்டை நடத்தியுள்ளார்’ என்று கடவுள் மீது பழியை போட்டுள்ளார்.
பிரையன் லூயிஸ் என்ற பாதிக்கப்பட்ட ஆண், இராணுவத்தில் பணியாற்றும் ஆண் சேவை பிரிவினர் இவ்வாறான பாலியல் தாக்குதல்களுக்கு பெரும்பாலும் ஆளாவதாக கூறுகிறார். 1997-இல் இராணுவ கப்பல் படையில் இணைந்த இவரின் முதல் கடல் பயணத்திலேயே, மேல் அதிகாரி ஒருவரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதைப் பற்றி புகார் செய்யக்கூடாது என்று மேல் அதிகாரி அச்சுறுத்தியும், கேளாமல், செயல்பட்டதால், பிரையனுக்கு ஆளுமை சிதைவு (personality disorder) ஏற்ப்பட்டுள்ளது என்று முத்திரை குத்தி பதவி நீக்கம் செய்துள்ளனர்.
இராணுவ அதிகாரிகளை எதிர்க்கும், பலரின் எதிர்காலம் இப்படித்தான் சீரழிக்கப்படுகிறது என்றும் எதிர்காலத்தில் அவர்களுக்கு எப்போதும் வேலை கிடைக்காமல், உளவியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி பதவி நீக்கம் செய்யப்படுகின்றனர், என்கிறார் பிரையன்.
பாதிக்கப்பட்ட பிரிகெட் மெக்காய் என்ற பெண்மணி, தன்னுடைய 19 வயதில் இராணுவத்தில் சேர்ந்துள்ளார். பணியின் ஆரம்பத்திலேயே, தன் சக படைவீரனால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு, பின் தன்னுடைய இரு மேல் அதிகாரிகளால் தொடர்ச்சியான பாலியல் தொல்லைகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
மேல் அதிகாரி ஒருவர், தன்னுடைய நேரடி கண்காணிப்பில் இயக்கப்படும் பிரிவில் இவரை மாற்றுவதற்கு கோரியிருந்தானாம். அயோக்கியனான அவனுடன், ஒரு நாள் முழுவதும் ஒரே அறையில் இருப்பதைப்பற்றி நினைத்து கூட பார்க்கமுடியவில்லை என்று குமுறுகிறார்
மெக்காய்

‘இராணுவத்தை பொறுத்தவரை இவ்வாறான சீருடை அணிந்த குற்றவாளிகளுக்கு தண்டனை என்பது கிடையாது’ என்றும் ‘பாலியல் ரீதியான தாக்குதல்கள், இராணுவத்தில் ஆள் தேர்வின் போதே, ஆணுக்கும், பெண்ணுக்கும் துவங்கிவிடுகின்றன’ என்கிறார் அவர்.
பணியாற்றும் பெண்களுக்கான நடவடிக்கை கூட்டமைப்பின் இயக்குனராக இருக்கும் அனு பகவதி என்பவர், தான் கடல்துறை அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் தினமும், பிற இராணுவ வீரர்களாலும் அதிகாரிகளாலும் வேலைகளில் வித்தியாசப்படுத்துதலையும், பாலியல் தொந்தரவுகளையும் சந்தித்தாக கூறியிருக்கிறார்.
இளம் சிறார் பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்த போது பிற இராணுவ வீரர்களினால், பல பாலியல் வல்லுறவு தாக்குதல்கள் நிகழ்ந்ததை, கண்ணால் பார்த்து, நீங்கா சாட்சியமாக மனதில் அவை இன்றும் உள்ளன என்று வேதனைப்படுகிறார்.
தவறிழைத்தவர்களுக்கு பதவி உயர்வு, பணி – இடம் மற்றும் பிரிவு மாற்றம் கொடுத்து தண்டனையிலிருந்து தப்பிக்க வைப்பதும், புகார் செய்யும் பாதிப்புக்கு உள்ளானவர்களை ‘பொய் பேசுகிறார்கள், அவதூறு பரப்புகிறார்கள், ஆண்களின் நன்மதிப்பை கேலிக்கூத்து ஆக்குகிறார்கள்’ என்று கூறி வாய்மூடச் செய்யும் முறைதான் இராணுவ நீதிமுறையின் வழக்கமாக இருந்துள்ளது என்று சென்ட் குழுவினர் முன்பு எடுத்து கூறியுள்ளார்.
செனட்டர்களின் குழு, இராணுவ வழக்கறிஞர்களையும், அதிகாரிகளையும் விசாரித்தது. அதில் முக்கியமாக, விமானப்படை ஜெனரல் கிரைக் பிரான்க்ளின் என்பவர் தன் துணை தளபதியான ஜேம்ஸ் வில்கர்சன் என்பவரின், தவறான பாலியல் நடத்தைக்காக, வழங்கப்பட்ட ஒரு ஆண்டு சிறைத்தண்டனையை, தன் அதிகாரத்தின் முலம் ரத்து செய்துள்ள, வழக்கு விசாரிக்கப்பட்டது.
எல்லாவிதமான சாட்சியங்கள் மூலம் ஜேம்ஸ் வில்கர்சன் செய்த குற்றங்கள் நிரூபணம் செய்யப்பட்டும், குற்றவாளியை தப்பிக்க வைக்கும் நோக்கில் தன் அதிகாரத்தைக் கொண்டு ஜேம்ஸினை காப்பாற்றியிருக்கிறார் ஜெனரல் பிரான்க்ளின்.
இவ்வழக்கு இப்போது மறு பரிசீலனைக்கு அனுப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 19,000 ஆண், பெண் இராணுவ ஊழியர்கள் இவ்வாறான பாலியல் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் அதில் 3,200 தாக்குதல்கள் தான் பதிவு செய்யப்படுகின்றன என்றும் தெரிவிக்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலர் லியோன் பனேட்டா.
உலகெங்கும் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்வதற்காக பெரும் செலவில் இராணுவத்தை உருவாக்கி பராமரிக்கும் அமெரிக்கா, தனது இராணுவ வீரர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட பாதுகாக்காமல் ஆளும் வர்க்க ஏவல் படையாகவே வைத்திருக்கிறது என்பதை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன!
-vinavu

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza