தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி SDPI கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் 17 வரை தமிழக முழுவதும் மனித சங்கிலி, ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, தலைமைச் செயலகம் முற்றுகை போன்ற போராட்டங்களை வீரியமாக நடத்தியது. தொடர்ந்து கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் மட்டும் பங்கேற்ற மாபெரும் பேரணியை நடத்தியது.
மேலும் அடுத்த மாதம் மதுரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் SDPI கட்சி நடத்தி வருகின்ற மாவட்ட மாநாடுகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்து என்பதை முன்னிறுத்தியே நடந்து வருகிறது.
இதுபோன்றே பல்வேறு கட்சிகளிலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
பா.ம.க, ம.ம.க போன்ற கட்சிகளின் வரிசையில் தற்போது ம.தி.மு.க வீரியமான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் தற்போது இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளது.
வைகோ நான்கு கட்ட நடைபயணத்தை அறிவித்து முதல்கட்ட நடைபயணத்தை கடந்த மாதம் நெல்லை மாவட்டம் உவரி முதல் மதுரை வரை 400 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.
தொடர்ந்து கடந்த பிப்ரவரி 18ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கோவளத்திலிருந்து 2ம் கட்ட நடைபயணத்தை துவக்கிய வைகோ, 11 நாட்கள் 250 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு 28 ம் தேதி மறைமலை நகரில் நிறைவு செய்தார்.
இதையொட்டி மறைமலை நகரில் நடைப்பயண நிறைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் SDPI கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் மற்றும் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக வைகோ உரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
0 கருத்துரைகள்:
Post a Comment