Saturday, March 9, 2013

இலங்கை போர் குற்றவாளிகளை விசாரணையின் முன் நிறுத்த வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு தீர்மானம்!


புது டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் தேசிய தலைமையகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்று வரும் மரண தண்டனைக்கெதிரான பிரச்சாரத்திற்கு இச்செயற்குழு முழுமையான ஆதரவை வழங்கியது. தற்போதைய அரசியல் மற்றும் சமூக சூழலில் ஏழை மற்றும் சட்ட பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிராகத்தான் மரண தண்டனை வழங்கப்படுகிறது. தங்களுக்கு எதிரானவர்கள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அரசாங்கம் இதனை பயன்படுத்தி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மரண தண்டனையை ஒழித்திருப்பதை இச்செயற்குழு சுட்டிக்காட்டியது. சட்ட புத்தகங்களில் இருந்து மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு செயற்குழு கோரிக்கை வைத்தது.


தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேசிய செயற்குழு கோரிக்கை வைத்தது. பிரபாகரனின் மகனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்தது உண்மையில் ஒரு வெட்கத்திற்குரிய செயலாகும். தெற்கு ஆசியாவில் மதிப்பு மிக்க நாடான இந்தியா,சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை போர் குற்றவாளிகளை கைது செய்து விசாரணையின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மத்திய அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் மக்கள் விரோத கொள்கைகள் குறித்து செயற்குழு ஆழ்ந்த கவலை கொள்கிறது. வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இவை பாதிக்கும். ஆட்சிக்கு வரத் துடிக்கும் வகுப்புவாத அரசியல் சக்திகள் மக்களின் கோபத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வர்.பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது. விலைவாசியை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வரும் கல்வியாண்டில் பள்ளி செல்வோம் பிரச்சாரத்தை இன்னும் விரிவுபடுத்த தேசிய செயற்குழு தீர்மானித்துள்ளது. இயக்கம் நடத்தி வரும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக பள்ளி செல்வோம் மாறியுள்ளது. சர்வ சிக்ஷா கிராமம், படிப்பிற்கான சாதனங்கள் வழங்குதல் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்குதல் ஆகியவற்றுடன் புதுமையான நிகழ்ச்சிகளும் இவ்வருடம் நடத்தப்படும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் கே.எம்.ஷரீஃப் தலைமை தாங்கினார். பி.கோயா,ஓ.எம்.ஏ.ஸலாம், முகம்மது அலி ஜின்னா, இல்யாஸ் முகம்மது, முகம்மது ஸஹாப்தீன், இ.எம்.அப்துல் ரஹ்மான், அப்துல் வாஹித் சேட் (கர்நாடகா மாநில தலைவர்), ஏ.எஸ்.இஸ்மாயில் (தமிழ் நாடு மாநில தலைவர்)ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza