Thursday, March 7, 2013

அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது!

புதுடெல்லி: அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப் பட்டார்.
கடந்த 2007ம் ஆண்டு, அக்டோபர் மாதம் அஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்தது இதில்  3 பேர் பலியானார்கள். 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சுரேஷ் நாயர், மெகுல் பவேஷ் பட்டேல், மற்றும் ஹர்ஷத் சோலங்கி மற்றும் முகேஷ் வாசானி ஆகியோர் இச்சம்பவத்தின் பின்னணியில் செயல் பட்டதாக காவல்துறையினரின் புலன் விசாரணையில் தெரிய வந்தது.

இதன் பின்னணியில் பின்பலமாக இருந்து குண்டை வெடிக்க வைக்க தயாராக இருந்த மேலும் இருவர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்களில் சுனில் ஜோஷி கோத்ராவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.


மேலும் இவ்வழக்கில் சுவாமி அசீமானந்த், சந்தீப் டாங்கே, பவேஷ் பட்டேல், மெகுல், சுரேஷ் பாய், ராமச்சந்திரா கல்சங்ரா, பாரத் பாய் ஆகியோரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தன. இவர்களில் சுவாமி அசீமானந்தா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நீண்ட காலமாக துப்பு துலங்காமல் இருந்த 2006ம் ஆண்டில் நிகழ்ந்த மலேகான் குண்டு வெடிப்பு, ஐதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பான வழக்குகளின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் காவல்துறையினரின் கையில் சிக்காமல் இருந்து வந்த குஜராத் மாநிலம் பரூச் பகுதியை சேர்ந்த பவேஷ் பட்டேல் என்பவரை டெல்லி அருகே உள்ள நொய்டாவில் தேசிய புலனாய்வு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
இவரிடம் செய்யப் படும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று தெரிகிறது.

source: www.inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza