Sunday, March 3, 2013

ஈராக்கிலும், ஆப்கானிலும் நடந்ததை அமெரிக்க சமூகம் அறியவேண்டும் – ப்ராட்லி மானிங்!


விர்ஜீனியா:ஈராக்கிலும், ஆப்கானிலும் நடந்ததை அமெரிக்க மக்கள் அறியவேண்டும் என்பதற்காகவே தான் ராணுவ ஆவணங்களை கசியவிட்டதாக விக்கிலீக்ஸிற்கு அமெரிக்க தூதரக ரகசியங்களை ஒப்படைத்த வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் அமெரிக்க ராணுவ உளவுத்துறை அனலிஸ்ட் ப்ராட்லி மானிங் தெரிவித்துள்ளார்.


மேரிலாண்ட் ராணுவ மையத்தில் நடக்கும் விசாரணையின் போது ப்ராட்லி மானிங் தனது நிலைப்பாட்டை விளக்கினார்.

“போரின் உண்மையான விலையை அறிய பொது சமூகத்திற்கு உரிமை உண்டு. தாங்கள் அன்றாடம் பழகிய மக்களை அமெரிக்க ராணுவம் எவ்வாறு குறிவைக்கிறது என்பதை தெரியவேண்டும். ராணுவத்தின் லட்சியம் மற்றும் பணிக்கு அப்பால் மனிதர்களை வெறுமனே பிடித்து கொலைச்செய்ய நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம். அமெரிக்க பொது சமூகம் இதையெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும். அங்கு நிகழ்ந்ததை நீங்கள் தெரிந்துகொண்டால் நமது வெளிநாட்டுக் கொள்கைகளைக் குறித்தும் ராணுவ கொள்கைகளைக் குறித்தும் சூடேறிய விவாதங்களுக்கு அது காரணமாகும்.
பாக்தாதில் ஒரு அமெரிக்கன் சாப்பர் ஹெலிகாப்டர் டீமின் ரத்த தாகத்தில் மனம் நொந்துபோய் நான் ஆவணங்களை ஒப்படைக்க தீர்மானித்தேன்.
2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவிற்கு விடுமுறையில் வந்தபோது ஆவணங்களை காப்பியெடுத்து மெமரி டிஸ்கில் சேமித்து வைத்திருந்தேன். வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸை அணுகியபோது அவர்கள் மறுத்துவிடவே நான் விக்கிலீக்ஸை அணுகினேன். வேல்ட் ட்ரேட் செண்டரின் தாக்குதல் தொடர்பான 5 லட்சம் டெக்ஸ்ட் மெஸேஜ்களை கசியவிட்டு வெளியிட்டதைத் தொடர்ந்து நான் விக்கிலீக்ஸை கவனிக்க துவங்கினேன் என்று ப்ராட்லி மானிங் கூறினார்.
ராணுவ நீதிமன்றத்தில் தனது கருத்தை 35க்கும் மேற்பட்ட பக்கங்களில் எழுதி ப்ராட்லி மானிங் கொண்டு வந்தார். முழுமையான ராணுவ யூனிஃபார்மில் மானிங் வந்தார். தனது வாதத்தை வாசித்து முடித்த பிறகு ப்ராட்லி மானிங் பல மணிநேரங்கள் நீண்ட நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்சேவுக்கு ராணுவ ரகசியங்களை அளித்த காரணத்தால் ஒரு வருடத்திற்கும் மேலாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ப்ராட்லி மானிங். ராணுவ நீதிமன்றம் அவர் மீது சுமத்திய 22 குற்றங்களில் 10 ஐ தவிர மீதமுள்ளவற்றை அவர் மறுத்துள்ளார்.
பாக்தாதில் இண்டலிஜன்ஸ் அனலிஸ்டாக பணியாற்றும் வேளையில் ஆப்கான்-ஈராக் போர் ஆவணங்கள், குவாண்டனாமோ சிறைக்கொட்டடியின் சித்திரவதைகள் குறித்த ஆவணங்கள், அமெரிக்க அபாச்சே ஹெலிகாப்டர் 2007-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் தேதி பதிவுச் செய்த வீடியோ ஆகியவற்றை மானிங் கசியவிட்டார்.
இரண்டு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் உள்பட சிவிலியன்கள் பலர் கொல்லப்பட்ட அந்த வீடியோவை விக்கிலீக்ஸ் collatteral murder என்ற பெயரில் வெளியிட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza