மியான்மர் : மீண்டும் பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிரான பவுத்தர்களின் தாக்குதலால் முஸ்லீம்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறுவதும் பலர் காணாமல் போகுவதும் அதிகரித்துள்ளது.
2000 நபர்கள் உள்ள சிட் க்வின் எனும் கிராமத்தில் முஸ்லீம்கள் வெறும் 100 நபர்கள் தான். கடந்த வெள்ளியன்று அக்கிராமத்தில் உள்ள முஸ்லீம் கடையின் மீது பவுத்தர்கள் நடத்திய தாக்குதலால் அக்கிராமத்தின் கடைசி முஸ்லீமும் அவ்விடத்தை விட்டு ஓடி விட்டார்.
மார்ச் 20 அன்று மீண்டும் தொடங்கியுள்ள இக்கலவரத்தில் இது வரை 42 முஸ்லீம்கல் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய மியான்மரில் உள்ள 10 நகரங்களில் பரவியுள்ள இக்கலவரம் வெறும் வதந்திகளை அடிப்படையாக கொண்டது என்று பெருவாரியான மக்கள் கருதுகின்றனர்.
கடந்த பத்து நாட்களாக நடைபெறும் கலவரத்தில் சுமார் 100 முதல் 200 நபர்கள் இரும்பு பைப்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு வந்து முஸ்லீம்களின் மசூதிகளை சேதப்படுத்துவது, கடைகளுக்கு தீ வைப்பது, முஸ்லீம்களை கொல்வது போன்ற செயல்களை செய்வதாகவும் புத்த பிக்குகள் இப்போராட்டத்திற்கு தலைமை வகிப்பதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லீம்களுக்கு எதிரான இத்தகைய போராட்டங்களை ஒருங்கிணைக்க 969 என்ற எண்ணை பவுத்த பிக்குகள் பயன்படுத்துகின்றனர். புத்தரின் பண்புகளை குறிக்கும் இவ்வெண் தற்போது முஸ்லீம்களுக்கு எதிரான பரப்புரைகள், கூட்டங்கள், கலவரங்களுக்கு குறியீடாக பயன்படுத்தப்படுகிறது. கலவரங்களின் போது காவல்துறை அமைதியாகவும் சில இடங்களில் நேரடியாக கலவரத்தில் பங்கு பெறுவதாகவும் முஸ்லீம்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
95 % பவுத்தர்கள் வாழும் நாட்டில் நடைபெறும் கலவரங்களில் அரசின் பங்களிப்பும் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள பர்மா அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கின்றது.
0 கருத்துரைகள்:
Post a Comment