எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று(26-02-2012) காலை திருச்சி பீம நகர் கே.எம்.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநிலசெயலாளர் நாஞ்சில் செய்யது அலி வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக், மாநில செயலாளர்கள் கே. செய்யது இபுராகிம், அபுதாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இறுதியாக மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது நன்றி கூறினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு பச்சேரி குழு அறிக்கையை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் பாரதீய ஜனதாவின் அர்த்தமற்ற எதிர்ப்பை புறந்தள்ளிவிட்டு திட்டமிட்ட அதே பாதையில் நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக செயல்பட வேண்டும். தமிழர்களின் கனவுத்திட்டமான இதனை, தமிழகத்தின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு அனைத்து ஜனநாயக சக்திகளும், வலியுறுத்த வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 2
தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியது. காரைக்காலில் வினோதினியும், சென்னையில் வித்யாவும் திராவக வீச்சு காரணங்களால் உயிரிழந்திருப்பது கவலைக்குரியது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு தனியான காவல்துறை பிரிவையும், விரைவு நீதிமன்றங்களையும் ஏற்படுத்துமாறும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்குமாறும் அரசுகளை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் என்ற பாலகனை கொடூரமாக இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்ற புகைப்படங்களை சேனல் 4 என்ற தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இது மனித உரிமைகளையும், மனித உணர்வுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதன் மூலம் இலங்கை மீதும் ராஜபக்சே மீதும் சுமத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டுகளும், மனித உரிமை மீறல்களும் மீண்டும் அம்பலமாகியுள்ளது. இதற்கு பிறகும் மத்திய அரசு நட்பு நாடு என சொல்லி இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
நடைபெறவிருக்கும் ஐநா மனித உரிமை கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் இலங்கையை பாதுகாக்கவே உதவும். எனவே கடமைப்பட்ட இந்திய அரசு இலங்கைக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கோரும் புதிய தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என இச்செயற்குழு கோருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் மார்ச் 1 ல் கோவையில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தீர்மானம் 4
சமீபத்தில் கொல்லைப்புறம் வழியாக ரயில் பயண கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. ஆனால் அவ்வப்போது சரக்குக் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு பயணிகள் கட்டணமும் உயரும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் தொடர்ந்து புறக்கணிக்கும் ரயில்வேயை கண்டித்தும், தமிழக திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கக்கோரியும் எஸ்.டி.பி.ஐ கட்சி ரயில் மறியல் போராட்டங்களை நடத்தியது. என்றாலும் இந்த பட்ஜெட்டிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. போதுமான புதிய ரயில் அறிவிப்புகள் இல்லை. இரட்டை வழிப்பாதைக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. மின் மயமாக்கலுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. மொத்தத்தில் மத்திய அரசு தமிழகத்தை மீண்டும் புறக்கணித்துள்ளது.
முன்பதிவு கட்டணம், ரத்து கட்டணம், தட்கல் கட்டணம் போன்றவையின் உயர்வு, சாதாரண மக்களை பெருமளவு பாதிக்கும். எனவே இவற்றை திரும்பப் பெறுமாறு இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 11 ரயில்களில் 4 ரயில்கள் இன்னும் இயக்கப்படாத நிலையில் 14 புதிய ரயில் அறிவிப்புகள் என்னவாகும் என தெரியவில்லை. எனவே இவை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம் 5
கட்சியின் கிளை முதல் மாவட்டம் வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து வரும் மார்ச் 9, 10 ல் திருச்சியில் மாநில பொதுக்குழுவை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. வரும் மார்ச் 30, 31ல் கோவையில் நடைபெறும் தேசிய பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 6
தமிழக ஹஜ் கமிட்டிக்கு ஹஜ் பயணம் செல்வோரின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் விதத்தில் தமிழக அரசு போதிய நிதியை மானியமாக அளிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment