மாலை 5.30 மணி அளவில் மாநாட்டு பேரணியும்,அதனை தொடர்ந்து மாலை 6.30 மனி அளவில் மாநாட்டு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
மாநாட்டு பொதுக்கூட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைத்தலைவர்கள் அப்துல் வஹ்ஹாப்,அம்ஜத் ஹுசைன்,மாவட்ட செயலாளர்கள் முஹம்மது ஷரீப் சேட்,செய்யது இப்றாஹிம்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், ஜஹீருதீன், செய்யது ஹாலிது,அப்துல் காதர், முஹம்மது ரோஸ்லான், ரியாஸ் முஹம்மது, அப்துல்லாஹ் சேட், முஹம்மது சலீம், நவாஸ்கான், அப்துல் ஜமீல், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் ஹபீப் நவாஸ் கான், ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைவர் ஜெய பாண்டியன், எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்ட அமைப்பாளர் கார்மேகம், பரமக்குடி தொகுதி தலைவர் செய்யது இப்ராஹிம், திருவாடானை தொகுதி தலைவர் மவ்லவி முஹம்மது இப்ராஹிம் கனி, முதுகுளத்தூர் தொகுதி தலைவர் அஹமது ஹுசைன் சித்தீக் கான், இராமநாதபுரம் தொகுதி தலைவர் பைரோஸ்கான், துணைத்தலைவர் மவ்லவி அப்பாஸ் அலி, இராமநாதபுரம் நகர் தலைவர் முஹம்மது சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்மாநாட்டில் திமுக மாவட்ட செயலாளர் சுப.தங்கவேலன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் முருகபூபதி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் திரவியம், மதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் சுப்பிரமணியன், அகில இந்திய அகமுடையார் உறவினர் சபை நிறுவனர் ரஜனிகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருப்பாளர் முஹம்மது யாசின், தமிழ் புலிகள் இயக்கம் மாவட்ட செயலாளர் சிவக்குமார், தமிழர் தேசிய இயக்கம் மாவட்ட செயலாலர் பசுமலை , மருதம் மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, அகில இந்திய மீனவர் சங்கத்தலைவர் அண்டன் கோமஸ் ,மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரெத்தினம் அண்ணாச்சி, ஃபாத்திமா கனி, செல்வராஜ் நாடார் மஹாஜன சங்கம் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் ,பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் காலித் முஹம்மது ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
சிறப்புரையாற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் காலித் முஹம்மது தமது உரையில்,
இவ்வுலகில் இரண்டு விதமான வர்க்கங்கள் உண்டு.ஒன்று ஆளும் வர்க்கம்,மற்றொன்று அடிமை வர்க்கம்,இந்த இரண்டு வர்க்கங்களுக்கிடையே நடைபெறும் யுத்தமே உலக வரலாறு.இன்றைய இந்தியாவில் அரசியல் என்பது வியாபாரமாகிவிட்ட சூழலில் , இந்நிலையை மாற்றி அமைக்க எஸ்.டி.பி.ஐ உதயமாகியுள்ளது.கட்சி துவக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகலாம்.ஆனால் இதன் நிர்வாகிகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக பணிகளில் ,மக்கள் பிரச்சனைக்காக களம் இறங்கியவர்கள்.எனவே எஸ்.டி.பி.ஐ கட்சி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க பாப்புலர் ஃப்ரண்ட் பக்க பலமாக இருக்கும்,என்றார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரெத்தினம் அண்ணாச்சி தமது உரையில், எஸ்.டி.பி.ஐ கட்சி என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தமல்ல.அனைவருக்கும் உரிய அரசியல் கட்சி.இக்கட்சியில் மது குடிப்பவர்கள் நிர்வாகிகளாக வரமுடியாது.எனவே மதுவை புறக்கணித்து விட்டு அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் கட்சியில் இணைய வேண்டும்.அதை விடுத்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்று கூறுவதில் அர்த்தமில்லை.என்றார்
அகில இந்திய மீனவர் சங்கத்தலைவர் அண்டன் கோமஸ் தமது உரையில்,
நாங்கள் ஒரு அரசியல் கட்சி எவ்வாறு இருக்க வேண்டும் என திர்பார்த்தோமோ , அதனை இப்போது எஸ்.டி.பி.ஐ வடிவில் காண்கிறோம்.எந்த அரசியல் கட்சி கூட்டம் நடத்தினாலும் அங்கு மது வாடை இருக்கும்.ஆனால் மதுவின் வாடை இல்லாத இளைஞர் பட்டாளத்தை எஸ்.டி.பி.ஐ உருவாக்கியிள்ளது.இப்படிப்பட்ட மாநாட்டிற்கு அனுமதி தர மறுத்த காவல்துறையை எச்சரிக்கிறேன்.உங்களிடம் அனுமதி கேட்பது கூட்டம் நடத்துவதற்கு அல்ல.நாங்கள் கூட்டம் நடத்தும் போது வேறு யாரும் அந்த தினத்தில் கூட்டம் நடத்தி இடையூறு ஏற்படக்கூடாது எனதற்காக தெரிவிப்பதற்காகத்தான்.இந்த நாட்டில் மக்களுக்கு தான் அதிகாரமே தவிர,மக்களின் சேவயாளன் என்று சொல்லும் அரசு அதிகாரிகளுக்கல்ல.என்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் ஃபாத்திமா கனி,
தமது உரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி மதுவிலக்கை அமல் படுத்த தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.பெண்களின் நலனில் அக்கரையுடன் செயல்படும் ஒரே கட்சி எஸ்.டி.பி.ஐ மட்டுமே.அதற்கு இங்கு கூடியிறுக்கும் ஆயிரக்கணக்கான பெண்களின் கூட்டமே சாட்சி.
தமிழகத்தில் அரசே மதுபானக்கடைகளை இழுத்து மூடும் அளவிற்கு எங்களது போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்.அரசு இதனை செய்ய தவறினால் தமிழக மக்கள் மதுக்கடைகளை பூட்டி மதுவினை தமிழகத்தின் வீதிகளில் மதுவினை ஓட வைப்பார்கள்.இந்த போராட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியால் எழுச்சியடையும்,என்றார்.
மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தமது உரையில்,
மாநாடு நடத்த பலநாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டும்,பலமுறை தொடர்பு கொண்டும் இறுதியில் வழக்கம் போலவே இழுத்தடிப்பு தொடர்கிறது. சதி வேலை நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று கூறி அரண்மனை பகுதியில் அனுமதி தர மறுப்பதாக காவல் துறை ஆய்வாளர் கணேசன் கூறியுள்ளார்.தகவல் சொன்னது யார்? என்று ஆய்வாளர் கணேசன் விளக்க வேண்டும்.இந்நாட்டில் மீனவன் அடித்து கொல்லப்படுகிறான்,மதுவின் போதையினால் கொலைகளும்,கொள்ளைகளும்,கற்பழிப்புகளும் தொடர்கின்றன.பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை தொடர்கிறது.இதனை பற்றியெல்லாம் தகவல் கொடுக்காதவர்கள் சதிவேலை நடப்பதாக தகவல் கொடுக்கிறார்களாம்.எஸ்.டி.பி.ஐ வளர்ச்சியை தடுக்க இது போன்ற அரசியல் சதி நடப்பதாக நாங்கள் கூறுகிறோம்.ஆனால் உறுதிமிக்க எஸ்.டி.பி.ஐ தொண்டர்களிடம் இது போன்ற காவல்துறையினரின் சதி வேலைகள் எடுபடாது.எஸ்.டி.பி.ஐ கட்சி அனைத்து சதிகளையும் தகர்த்தெரியும் என்றார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தமது உரையில்,
இராமநாதபுரம் மாவட்டம் என்பது எஸ்.டி.பி.ஐ கட்சியின் வரலாற்றில் மிகவும் முக்கியமான பகுதி.கட்சியின் துவக்க காலம் முதல் வீர்யத்தோடு செயல்பட்டு வரும் மாவட்டம்.கட்சியின் வரலாற்றில் இராமநாதபுரம் மாவட்டம் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.எஸ்.டி.பி.ஐ தமிழக சட்டமன்ற தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்ட இடங்களில் இராமநாதபுரமும் ஒன்று.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டபோது இராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிக கவுன்சிலர்களை பெற்றோம்.இந்த மாநாட்டிற்கு பிறகு இந்த மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ இன்னும் அதிவேகமாக வலுப்பெறும்.இந்த மாவட்டத்தில் மிக முக்கியமான பிரச்சினையாக மீனவர்கள் பிரச்சினை உள்ளது.எதிரி நாடாக ஊடகங்களாலும்,அரசியல் வாதிகளாலும் கருதப்படுகின்ற பாகிஸ்தான் கூட இந்திய மீனவர்களுக்கு செய்யாத கொடுமைகளை , இந்தியாவின் நட்பு நாடான இலங்கை செய்து கொண்டிருக்கிறது.ஈழத்தமிழர்களையும்,இந்திய மீனவர்களையும் அழித்தொழிக்கும் இலங்கை அரசினை எதிர்க்க துணிவில்லாத அரசுகளும்,ஆட்சியாளர்களும் இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்கள்.ஐநா மன்றத்திலே அமெரிக்கா கொண்டுவரும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒரு கண்துடைப்பு நாடகம்.ராஜபக்ஷே ஒரு போர்க்குற்றவாளி என்பதற்கு சமீபத்தில் வெளியான வீடியோ சாட்சி.அதில் பிரபாகரனின் மகனான 12 வயதான பாலகனை கொடூரமாக 3 அடி தூரத்தில் நிறுத்தி சுட்டுக்கொன்றது இலங்கை ராணுவம்.இப்படிப்பட்ட கொடூரமான நிகழ்வுகளை நடத்திய ராஜபக்ஷேவை செர்பிய அதிபர் மிலோசெவிக் போன்று சர்வதேச நீதிமன்றத்தில் விசாரனை நடத்த வேண்டும்.மேலும் இலங்கையில் உள்ள தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இன்றைய அரசியல் கட்சிகள் தூய்மையானதாக இருந்திருந்தால் எஸ்.டி.பி.ஐ உருவாக்கப்பட்டிருக்காது.இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் ஏராளம்.ஒவ்வொறு பிரச்சினைகளுக்கும் பின்னால் ஒவ்வொரு அரசியல் உள்ளது.மீனவர்கள்,முஸ்லிம்கள்,தலித்துக்கள்,பழன்குடியின மக்கள் போண்றோரின் பிரச்சினைகளும் லஞ்சம்,ஊழல்,தீவிரவாதம்,பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளும் தேசிய பிரச்சினைகள்.இவற்றிற்காக தமிழகத்தில் மட்டும் போராடினால் போதாது.இந்தியா முழுவதும் இதற்கான போராட்டம் எதிரொலிக்க வேண்டும்.எனவே தான் எஸ்.டி.பி.ஐ கட்சி தேசிய அளவில் பதிவு செய்யப்பட்டு,தேசிய அளவில் வலுவோடு இயங்கி வருகிறது.நீதி மிக்க ஆட்சியை அமைப்பதே இதன் இலக்கு.
சமீபத்தில் அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டது கருத்து நாம் கருத்து தெரிவித்திருந்தோம்.நீதியின் குரல் நெறிக்கப்பட்டதற்கு அஃப்சல் குருவின் தூக்கு சாட்சி.இது நீதியின் பெயரை சொல்லி செய்யப்பட்ட கொலை.எஸ்.டி.பி.ஐ கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது.இதனை திசை திருப்ப வீரப்பன் கூட்டாளிகள் என்று சொல்லி நால்வருக்கு தூக்கு.சமீபத்தில் நடந்த ஹைதரபாத் குண்டு வெடிப்பு கண்டிக்கத்தக்க செயல்.அதேசமயம் உள்துறை அமைச்சரும்,உள்துறை அமைச்சகமும் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று அறிவிக்கும் முன் பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கிறது.பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகள் இதற்கு காரணம் என்று பாரதீய ஜனதாகட்சி அறிவிப்பதை காணும் போது பாரதீய ஜனதா கட்சிக்கும்,பாகிஸ்தானின் தீவிரவாத கும்பலுக்கும் தொடர்புள்ளதோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது.இவர்களின் அரசியல் சித்து விளையாட்டுக்காக இது போன்ற குண்டு வெடிப்புகள் நடத்தப்படுகிறது என்றே நாம் கருதுகிறோம்.முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு சம்பந்தமாக தேர்தல் சமயங்களில் வாக்குறுதி கொடுக்கும் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு மறந்து விடுகின்றனர்.ஓட்டுக்காக பொய்யான வாக்குறுதிகள் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்படுகிறது.நாட்டின் முதுகெலும்பு ஊழலால் அடித்து நொறுக்கப்படுகிறது.எனவே இதற்காக போராடுவது ஒவ்வொரு இந்தியனின் கடமை.திப்பு சுல்தான்,பேரரசர் பகதுர் ஷா,பகத்சிங் போன்றோரின் வாரிசுகள் நாம்.இது போராட்டத்திற்கான தருணம்.இந்த தேசம் நம்மிடம் அதன் பிரச்சனைகளின் தீர்வுக்காக எதிர்பார்த்து உள்ளது.எனவே நாம் அனைவரு ஒன்றிணைந்து சக்தியுடன் இந்த தேசத்தின் ,தேச மக்களின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும்,வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் எஸ்,.டி.பி.ஐ போட்டியிடும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்: 1
இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் மீனவர்களாக இருக்கிறார்கள்.ஆனால் அன்றாடம் மீனவர்கள் காரணமின்றி இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப் படுவதும், சித்ரவதைச் செய்யப்படுவதும், மீனவர்கள் குடும்ப உறவுகளை இழந்து பரிதவிக்கும் நிலையும் தொடர்கதையாக உள்ளது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகும் நிலையாக மாறிவிட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே இந்நிலை மாற இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒருபகுதியான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்த மத்திய அரசு, மீண்டும் கச்சத்தீவை மீட்டு இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும்.
தீர்மானம்: 2
கடல் அட்டை மற்றும் கடல் பாசி மீதான மத்திய அரசின் தடை நியாயமற்றது.தமது வாழ்வியல் தேவைகளுக்காக கடல் அட்டையினை பிடிக்கும் மீனவர்கள் மற்றும் கடல் பாசியினை செகரிப்பவர்கள் மீது கைது நடவடிக்கைகள் தொடர்கிறது. ஏற்கனவே மீன் பிடித்தொழில்கள் பல காரணங்களால் நலிவடையும் நிலையில் உள்ளது.இந்நிலையில் பல்லாயிரம் மீனவ மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கடல் அட்டை மற்றும் கடல் பாசி ஆகியவற்றை மத்திய அரசு தடை செய்ததனால் மீனவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.எனவே உலகில் பல நாடுகளில் தடை செய்யப்படாத கடல் அட்டை மற்றும் கடல் பாசி மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்:3
நமது நாட்டில் முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் ஏனைய சமுதாயத்தை விட மிகவும் கீழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அரசின் அதிகாரப்பூர்வ கமிஷன்களான நீதிபதி ராஜிந்தர் சச்சார் , ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்களின் அறிக்கை ஆகும். மேலும் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் உடனடி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை மிஸ்ரா கமிஷன் மத்திய அரசுக்கு அளித்தது.ஆனால் மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.எனவே ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின் அடிப்படையில் மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு உடனே வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை இம் மாநாடு வலியுறுத்துகிறது.
மேலும் தமிழகத்தில் முஸ்லிம்கள் 7 சதவீதம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. உண்மையில் முஸ்லிம்களை முன்னேற்றுவதற்கு இடஒதுக்கீடு தேவையெனில் 7 சதவீதம் பூரண இடஒதுக்கீடு வழங்குவதே நியாமானதாகும். எனவே தமிழக அரசு முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்:4
நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும் மது மூல காரணமாக உள்ளது. வயது, பாலின வேறுபாடில்லாமல் எதிர்கால இளைய தலைமுறையின் வாழ்கை மதுவினால் சீரழிந்து வருகிறது.தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர் போராட்டங்களை நடத்தியது.அதனை தொடர்ந்து ஏனைய அரசியல் கட்சிகளும்,சமூக அமைப்புகளும் போராட்டங்களை நடத்தியது.ஆனால் இதன் பிறகும் தமிழக அரசு வருமானத்துக்காக மதுபான கடைகள் நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.மத்திய அரசின் உத்தரவை ஏற்று நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள மதுக்கடைகளைஅகற்ற உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இது போன்ற படிப்படியான நடவடிக்கையை தவிர்த்து உடனடியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 5
நாட்டில் அரசியல்வாதிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை பாராளுமன்றம் முதல் பஞ்சாயத்து அலுவலகம் வரை, ஊழலும், லஞ்சமும் புரையோடியுள்ளது. இதற்கு நீதிமன்றங்களும் விதிவிலக்கல்ல. எனவே மத்திய மாநில அரசுகள் அரசு இயந்திரத்தை செல்லரித்து போகச் செய்யும் இந்த ஊழலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் ஊழலை கட்டுப்படுத்த ஊழல் அதிகாரிகளை கண்காணிக்க மத்தியில் லோக் பால் மற்றும் மாநில அளவில் லோக் ஆயுக்தா என்ற ஊழல் கண்காணிப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும்.இதனை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.மேலும் தமிழ் நாட்டிலும் ஊழலை கட்டுப்படுத்த லோக் ஆயுக்தா என்ற ஊழல் கண்காணிப்பு ஆணையத்தை அமைக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்:6
இராமநாதபுரத்தில் மாவட்டத்தில் உள்ள ஆன்மீகத்தலங்களுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலினால் சாலை விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது. எனவே வாகன நெரிசலை குறைக்கும் வகையில் மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட வேண்டும் எனவும்,திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் இராமநாதபுரம் செல்லாமல் ,கோப்பேரி மடம்,சித்தார்கோட்டை,நதிப்பாலம் வழியாக இராமேஸ்வரம் செல்ல ,அப்பகுதி சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் இம்மாநாடு மத்திய ,மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் :7
தமிழரின் வாழ்வில் பனைமரம் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது.பனைமரத்தில் மனித வாழ்வுக்கு தேவையான பதனீர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கின்றன.எனவே பதனீர் தொழிலுக்கு மானியம் வழங்கி,அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.மேலும் பதனீர் தொழிலை மேம்படுத்த தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசினை கேட்டுக்கொள்கிறது. மேலும் பதனீர் இறக்கும் பனைத்தொழிலாளர்கள் மீது கள் இறக்கியதாக பொய்குற்றம் சுமத்தி காவல்துறை கைது செய்வதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம்:8
தமிழகத்தில் பிற்பட்ட மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டம் ஒன்று.இங்கு எந்தவிதமான தொழில் வளமும் இல்லை.மேலும் கடல் பகுதிகளை அதிகமாக கொண்டுள்ள இம்மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லும் அளவில் கடல் சார்ந்த தொழிற்சாலைகள் இல்லை. இதனால் இம்மாவட்டத்தை சார்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளை நம்பி வாழும் சூழல் உள்ளது.எனவே தமிழகமுதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள கடல் சார்ந்த தொழிற்சாலைகளை இம்மாவட்டத்தில் ஏற்படுத்தி பின்தங்கிய இம்மாவட்டத்தினை தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 9
இராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் காட்டுநாயக்கர்களை பழங்குடியினமாக அங்கீகரித்து சாதிச் சான்றிதழ் வழங்க ஆவண செய்ய வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது
மேலும் பல்வேறு சமூகங்களில் இருந்து இஸ்லாத்தை தழுவும் மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்குவதில் இழுத்தடிப்பு தொடர்கிறது.குறிப்பாக இஸ்லாத்தினை தழுவும் தலித் சமூக மக்கள் பட்டியல் இன மக்களுக்கான இடஒதுக்கீடு சலுகையை இழக்கும் சூழல் தொடர்கிறது.எனவே அவர்களை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பட்டியலில் இணைத்து சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :10
தமிழக சிறைகளில் 7 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறை கைதிகளை அவர்களின் வாழ்நிலை கருதி, ஒரு குற்றவாளி திருந்த 7 வருட சிறை தண்டனை போதுமானது என்ற காந்தியடிகளின் வாக்குக்கு இணங்க 7 வருடம் சிறையில் கழித்த முஸ்லிம் சிறை கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 11
கீழக்கரையை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகாவை உருவாக்கும் கடந்த கால அரசின் ஆணை வெறும் அறிக்கை நிலையிலே உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பலவித சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.எனவே தமிழக அரசு உடனடியாக இவ்விசயத்தில் கவனம் செலுத்தி கீழக்கரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் புதிய தாலுகாவை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது .
தீர்மானம்:12
இராமநாதபுரம் மாவட்டத்தில் கழிவுநீரானது திறந்த வெளி சாக்கடை மூலம் வெளியேற்றப்படுவதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் தேங்கி நிற்கும் கழிவு நீரே காட்சி தருகிறது.இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்தொற்று ஏற்படுகிறது.எனவே பரமக்குடி, இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மேற்கண்ட நகராட்சிகளை தூய்மையாக்க பாதாளச்சாக்கடை திட்டத்தை உடனே நிறைவேற்றவேண்டும்.மேலும் இராமநாதபுரம் நகரில் பாதாளச்சாக்கடை திட்டத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டும் இன்னும் மக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை.இதனால் இராமநாதபுரம் நகர் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே தமிழக அரசு பாதாளச்சாக்கடை திட்டத்தினை துரிதப்படுத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் :13
மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையான இராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்தப்படுத்தப்பட்டு நவீன சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற அரசு ஆணை விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும்.கிடப்பில் உள்ள இராமேஸ்வரம் அரசு மருத்துவமனை கட்டுமானப்பணிவிரைந்து முடிக்கப்பட வேண்டும்.மேலும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம்:14
மத்திய அரசும், இரயில்வே துறையும் தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு குறைவான இரயில்களே இயக்கப்படுகின்றன.தமிழகத்திற்கு கடந்த பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் ஆமைவேகத்தில் நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஓடும் இரயில்களில் 75 சதவீத இரயில் பெட்டிகள் தரமானதாக இல்லை.எனவே இதனை மாற்றி தரமான பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.தமிழகம் இரயில்வே துறையில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நேற்று சென்னை மற்றும் நெல்லையில் இரயில் மறியல் போராட்டம் நடத்தியது.
மேலும் இம்மாவட்டத்தில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு வருவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னைக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் பகலில் இரு மார்க்கங்களிலும் அதிவிரைவு ரயில் விடப்பட வேண்டும் எனவும் இராமநாதபுரத்திற்கு அதிகாலை 2.55 மணிக்கு சேது விரைவு வண்டி வருவதனால் அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் பேருந்திற்காக காலை 5 மணி வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.எனவே இந்த நேரத்தினை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் உச்சிப்புளி இரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து வரும் இரண்டு விரைவு வண்டிகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக இரயில்வே நிர்வாகத்தினை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்:15
ஏர்வாடி தர்ஹாவில் கடந்த 2002 ல் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து அரசே மனநலகாப்பகம் அமைக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்தனர். அப்போது அமைக்கப்பட்ட ராமதாஸ் கமிஷனின் பரிந்துரையின் படி, மாவட்ட மருத்துவமனையில் மனநலபிரிவு தொடங்க, கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி மனநலபிரிவும் ஏற்படுத்தப்பட்டும், அரசு காப்பகம் இல்லாததால் அது பயனின்றி இன்றி உள்ளது. இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 10 ஆயிரம் மனநோயாளிகளுக்கு ஒருவர், என்ற விகிதத்தில்தான் மனநல மருத்துவர் எண்ணிக்கை உள்ளது. இந்நிலையில் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பது கடினமான விசயம். மனநோயாளிகளை காப்பகம் மூலம் பராமரிப்பதை தவிர, பெரிய அளவில் தீர்வு காணமுடியாது. அரசு மனநலக்காப்பகம் அமைக்க ஆணையிட்ட பிறகும்,தர்ஹா சார்பில் நிலம் அளித்து காப்பகம் நடத்த முன்வந்த நிலையில், இதுவரை அதற்கான எந்த பணியும் நடக்கவில்லை.எனவே ஏர்வாடியில் அரசு மனநலக்காப்பகம் அமைப்பதற்கான திட்டத்தினை விரைந்து செயல்படுத்த வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
இறுதியாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொருளாளர் சோமு நன்றி கூறினார்.
இம்மாநாட்டில் கட்சியின் செயல்வீரர்கள், நிர்வாகிகள், பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல்:
B.S.I.கனி
எஸ்.டி.பி.ஐ கட்சி-தமிழ்நாடு.
0 கருத்துரைகள்:
Post a Comment