Saturday, February 9, 2013

தமிழீழ இனப்படுகொலையும்,தமிழ் சமுகத்தின் கடமையும் - கருத்தரங்கம்

மேடையில் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவி,மதிமுக  பொது செயலாளர் வைகோ,வேல் முருகன் மற்றும் பல கட்சிகளின் நிர்வாகிகள் 


சென்னையில் தமிழீழ இனப்படுகொலையும்,தமிழ் சமுகத்தின் கடமையும் என்னும் தலைப்பில் ஈழ தமிழர்களின் மறுவாழ்வு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது இதில் திரு. புகழேந்தி தங்கராஜ் (திரைப்பட இயக்குநர்)தலைமை வகித்தார்,திரு. கண.குறிஞ்சி (ஒருங்கிணைப்பாளர், மக்கள் நல்வாழ்வு இயக்கம்) தொடக்க உரை ஆற்றினார் சிறப்புரை விருந்தினாராக எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, மதிமுக பொது செயலாளர் வை.கோ ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுச்செயலாளர் வேல்முருகன், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன்,திரு. புலமைப்பித்தன் (கவிஞர்),
ஆதித் தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் திரு. இரா.அதியமான் தந்தைபெரியார் திராவிடர் கழகம் தலைமை நிலையச் செயலாளர் குமாரதேவன் போன்றோர் கருத்துரை ஆற்றினர் 
எதற்காக இந்தக் கருத்தரங்கு?

• இருபத்தொன்றாம் நூற்றாண்டிலேயே மிகக் கொடூரமான இனப்படுகொலையை மே 2009 ஆம் ஆண்டில் கட்டவிழ்த்து விட்டது, இலங்கை இனவெறி அரசு. இலங்கை அரசின் ஆவணங்களிலிருந்தே 1,46,679 தமிழீழ மக்கள் முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்டனர் என்ற உண்மை அம்பலமானது.

• 2012 நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்குழுவின் அனைத்துலகக் காலமுறை மீளாய்வு (Universal Periodic Review) கூட்டத்தில் 99 நாடுகள், 210 பரிந்துரைகளைச் சமர்ப்பித்தன. அவற்றில் 100 பரிந்துரைகளை ஏற்க மறுத்து விட்டது இலங்கை அரசு. ஊடக சுதந்திரம், போர்க்குற்ற விசாரணை, மக்கள் காணாமல் போதல், பாலியல் வல்லுறவு, சிங்களமயமாக்கல், இராணுவமயமாக்கல், தமிழ் மக்களின் பண்பாட்டினை அழித்தொழித்தல் போன்ற பரிந்துரைகளை ஏற்க இலங்கை அரசு மறுத்து வருகிறது.

• ஐக்கிய நாடுகள் அவை, சர்வதேச சமூகம் மற்றும் உலகெங்குமுள்ள மனித உரிமை அமைப்புகள், இலங்கை இனப்படுகொலை குறித்துச் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை தேவை எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இலங்கை அரசு இதைப் பிடிவாதமாக மறுத்து வருகிறது.

• சிங்களமயமாக்கல், இராணுவமயமக்கல், பொருளாளதாரப் புறக்கணிப்பு, தமிழ்ப் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை இன்றும் தமிழீழத்தில் தொடர்ந்து வருகிறது.

• இலங்கை அரசே உருவாக்கிய ‘கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையக்குழு' (LLRC) அளித்த பரிந்துரைகளை இலங்கை அரசு முறைப்படி நிறைவேற்றவில்லை என 2012 மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள்குழுவின் பத்தொன்பதாவது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இன்றுவரை இனச்சிக்கல் குறித்து இலங்கை அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதால், 2013 பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக்குழுகூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக மற்றொரு கடுமையான தீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளது.

• ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்களவெறி இலங்கை அரசுக்கு எப்பொழுதும் பக்கபலமாக இருந்து தொடர்ந்து ஆதரவளித்து வரும் இந்தியா, தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களின் அழுத்தங்காரணமாகக் கடந்த ஐ.நா மனித உரிமைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க நேர்ந்தது. இருப்பினும், அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் சதியையும் கூடவே செய்தது.

• எதிர்வரும் 22 ஆவது மனித உரிமைக்குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்குமளவு, தமிழக மற்றும் இந்திய அரசுக்கு அரசியல் அழுத்தங்கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு எதிராகவே எவ்பொழுதும் செயல்பட்டு வரும் இந்தியா, தமிழர்களின் விருப்பத்திற்கு எதிராக இனியும் தொடர்ந்து செயல்படத் தமிழ்நாடு அனுமதிக்கக் கூடாது.

 -இத்தகைய பின்னணியில்தான் இக்கருத்தரங்கு கூட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஈழச்சிக்கல் குறித்துத் தொய்வுறாமல் தொடர் பணி ஆற்றி வந்த பல்வேறு அமைப்புகளும் இதில் பங்கேற்கின்றன. நடைமுறைச் சிரமம் காரணமாக இதில் கலந்து கொள்ள இயலாத அமைப்புக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

 கூடிக்கலையும் அடையாளச் சடங்காக இல்லாமல், தமிழக மக்கள் சக்தியை உருத்திரட்டும் ஆழ்ந்த நோக்கத்தோடு இக்கருத்தரங்கு கூடவுள்ளது. நியாய உணர்வும், மனித உரிமைகள்பால் மாளா ஈர்ப்பும் கொண்ட சனநாயக சக்திகள், ஊடகத்துறையினர், வழக்குரைஞர்கள், மாணவர்கள், தமிழ்ஆர்வலர்கள், முற்போக்கு இயக்கத்தினர், பகுத்தறிவு அமைப்பினர், படைப்பாளிகள், கலைஞர்கள் எனச் சமுகத்தின் அனைத்துப் பிரிவினரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தீபச்சுடரை மங்கி விடாமல் காக்க வேண்டிய கட்டாயத்தை வரலாறு நமக்கு முன்னால் உருவாக்கியிருக்கிறது.
 உணர்ச்சிமிக்க போராட்டங்களோடு அறிவார்ந்த விவரங்களை இணைக்க வேண்டிய தருணம் இது. 

எனவே தமிழீழத்தில் இப்பொழுது நடப்பது என்ன? கடந்த காலகட்டத்தில் சர்வதேச சமூகம் ஏன், எப்படி நம்மைக் கைவிட்டது? அதன் கொடூரமான பின்னணி என்ன? ஈழப் போரட்டம் குறித்து மாறிவரும் புவிசார் அரசியல் அணுகுமுறையில் எத்தகைய இராஜதந்திரத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்? இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள பல்வேறு தேசியஇன மக்களின் ஆதரவைப் பெற நாம் எப்படிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்? என்பன போன்ற அடிப்படையான, ஆழமான கேள்விகளுக்குத் தீர்வைத் தேடி இக்கருத்தரங்கு கூட்டப்பட்டுள்ளது.

 எனவே, வேற்றுமைகளை மறந்து தமிழ்மக்கள் சார்பாக நாம் ஒன்று கூடுவோம். தனிமரம் தோப்பாகாது; ஒரு கை ஓசை எழுப்பாது; கூடி வாழ்ந்தால் கோடி நன்மை; ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு என்பதை மனதில் கொள்வோம். நம்மை பிரிக்கும் புள்ளிகளை விட, நம்மை இணைக்கும் கோடுகள் அதிகம் என்பதையும் புரிந்து கொள்வோம்.இறுதியில்  மக்கள் நல்வாழ்வு இயக்கம் நிர்வாகி  பிரமீதியஸ் நன்றியுரை ஆற்றினா

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza