Saturday, February 16, 2013

“இந்தியாவில் யாருக்கு லஞ்சம் குடுத்திங்க?” இத்தாலியிடம் விளக்கம் கேட்கிறது டில்லி


2 அதிநவீன ஹெலிகாப்டர்களை மத்திய அரசு வாங்கிய விவகாரத்தில் 362 கோடி கமிஷன் இந்தியாவில் ‘யாருக்கோ’ கைமாறியதாக இத்தாலிய விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அது தொடர்பான விபரங்கள் இத்தாலியிடம் கேட்டுள்ளது மத்திய அரசு.

இந்த ஊழல் தொடர்பாக பின்மெக்கானிக்கா கம்பெனியின் துணை நிறுவனமான அகஸ்ட்டா வெஸ்ட்லேண்டிடம் இந்தியா நேற்று முறைப்படி விளக்கம் கேட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.


உயர்ந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, இத்தாலி நாட்டை சேர்ந்த பின்மெக்கானிக்கா (Finmeccanica) நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் (Agusta Westland) நிறுவனத்துடன் மத்திய அரசு ரூ.3,546 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செய்து கொண்டது.

இதில், 362 கோடி கமிஷன் இந்தியாவில் ‘யாருக்கோ’ கைமாறியதாக இத்தாலிய விசாரணையில் தெரியவந்தது.

பாதுகாப்பு அமைச்சகம் இத்தாலிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ஹெலிகாப்டர் பேரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் லஞ்சம் கொடுப்பதற்கும், இடைத்தரகர்களின் தொடர்புக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் எந்தவொரு நிறுவனத்துக்கோ, தனி நபருக்கோ பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதா?
அப்படி பணப்பரிமாற்றம் செய்திருந்தால் அது ஏற்கனவே செய்துகொண்ட உடன்படிக்கையை, ஒப்பந்த விதிமுறைகளை, நிபந்தனைகளை மீறிய செயலாக அமையும். எனவே தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, அதுபற்றிய விவரங்களை தெரிவித்து உங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
லஞ்சம் கொடுத்திருந்தால், ஒப்பந்தத்தை ரத்து செய்வது, செலுத்திய பணத்தை திரும்பப் பெறுவது, உங்கள் கம்பெனியை கறுப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது அனைத்து விதமான சட்டப்பூர்வமான, நிர்வாக ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் உறுதியாக உள்ளோம். இது தொடர்பாக சி.பி.ஐ. விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza