Monday, February 4, 2013

நாள் ஒன்றுக்கு சராசரியாக தற்கொலைச் செய்யும் அமெரிக்க முன்னாள் ராணுவத்தினரின் எண்ணிக்கை 22! – ஆய்வில் தகவல்

'22 US veterans commit suicide daily'
வாஷிங்டன்:அமெரிக்க முன்னாள் ராணுவத்தினரில் 22 பேர் சராசரியாக தினமும் தற்கொலைச் செய்துகொள்வதாக அமெரிக்க அரசு நடத்திய முக்கிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு சராசரியாக 18 பேர் இவ்வாறு இறக்கிறார்கள் என்று முன்னர் கூறப்பட்டதைவிட இது சற்று அதிகமாகும். சுமார் 60 வயதைச் சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாய்களே இவ்வாறு அதிகமாக தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதுவரையிலான  ஆய்வுகளின்படி, இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் 50 வயதுக்குமேற்பட்டவர்களாவர்.

1990 முதல் 2010 ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதியை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், தற்கொலை செய்துகொள்ளும் அமெரிக்க முன்னாள் இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று கூறும், இருவாரங்களுக்கு முன்னர் வெளியான தகவல்களை உறுதி செய்கின்றன. இதனை தடுப்பதற்கு வியட்நாம் போரில் கலந்துகொண்டவர்கள் மற்றும் பெண் இராணுவ வீராங்கனைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சிலர் இராணுவத்தில் இருந்து விலகி முதல் சுமார் 4 வாரங்களில் தற்கொலை செய்வதற்கான சாத்தியம் அதிகம் என்றும், அந்தக் காலப்பகுதியில், பலமான கண்காணிப்பும், சிறப்பு முகாமைத்துவமும் தேவை என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் அளவுக்கு அதிகமாக போதை மருந்தை உட்கொள்ளல் அல்லது விசம் அருந்துதல் ஆகியவை மூலமே தற்கொலைசெய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு உதவுவதற்கான ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அதேவேளை இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்து 26,000 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அது கூறுகிறது.
இந்த தகவல்களை தற்கொலைகளை தடுப்பதற்கான தமது நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக தாம் பயன்படுத்துவோம் என்று ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான அமைப்பு கூறியுள்ளது.
source: thoothu online

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza