ஷார்ஜாவில் பாகிஸ்தானியர் ஒருவரை கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்திய கைதிகள் விடுவிக்கப்பட்டு, நேற்று இந்தியா வந்து சேர்ந்தனர். இவர்களால் கொல்லப்பட்ட பாகிஸ்தானியருக்கு ‘ரத்த பணம்’ 3.43 மில்லியன் திர்ஹாம் வழங்கப்பட்டதை அடுத்து, இவர்களது குற்றம் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் ஷார்ஜாவில் கடந்த 2009-ம் ஆண்டு பஞ்சாபை சேர்ந்த 16 பேரும் அரியானாவை சேர்ந்த ஒருவரும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தனர். அப்போது இவர்களுக்கும் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் இடையே ஷார்ஜா பகுதியில் சாராயம் விற்பது தொடர்பாக சண்டை ஏற்பட்டது.
இதில் பாகிஸ்தானை சேர்ந்த மிஸ்ரி கான் என்பவர் கொல்லப்பட்டார். மூவர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கில் ஷரியா சட்டப்படி 17 இந்தியர்களும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு 2010-ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தவர்கள் இவர்களை மன்னித்து ரத்த பணத்தை பெற்று கொள்ள ஒத்துகொண்டதால் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். பிரபல ஹோட்டல் அதிபர் எஸ்.பி.சிங் ஓபராய், 17 இந்தியர்களுக்கும் ரத்தப் பணம் கொடுக்க முன்வந்தார்.
சார்ஜா கோர்ட்டில், ரத்த பணம் பாகிஸ்தானை சேர்ந்த மிஸ்ரி கான் குடும்பத்தின் பிரதிநிதி ஜபார் இக்பால் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து, 17 இந்தியர்களும் விடுவிக்கப்பட்டு, நேற்று இந்தியா வந்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment