Tuesday, January 22, 2013

இலங்கையில் தமிழர்களின் கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம் - பாப்புலர் ஃப்ரண்ட்

இலங்கையில் தமிழர்களின் கலாச்சார அடையாளங்களை படிப்படியாக இலங்கை அரசு அழித்து வருவதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆ ஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது .

தமிழர்கள் அதிகம் வசிக்கும் 89 கிராமங்கள் தமிழ் பெயரிலிருந்து சிங்கள பெயராக மாற்றப்பட்டுள்ளது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 367 ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது. 

ஒரு மசூதி இடிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பகுதியில் அதிகமான ராணுவ சோதனை சாவடிகளை நிறுவி ராணுவ ஆட்சியைப் போல் பீதியை சிங்கள அரசு ஏற்படுத்தியுள்ளது . நாட்டை ஆளும் அரசு சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட்டு விட்டு அந்த சிறுபான்மையினரை வதை செய்யும் செயலை இலங்கை அரசு தொடர்ந்து செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது .


உலகில் அமைதியை நிலைநாட்டுகிறோம் என்று உலகின் பல நாடுகளின் விவகாரங்களில் தலையிடும் ஐ.நா சபை இலங்கையில் தமிழர்கள் , மியான்மரில் ரோஹின்யா முஸ்லிம்கள் படும் அவலங்களை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஐ.நா சபையை கேட்டுக் கொள்கிறது .

உலகிலேயே மாபெரும் ஜனநாயக நாடாக திகழும் நமது இந்திய நாடு அண்டை நாடான இலங்கையில் மொழி சிறுபான்மையினர் படும் அவலங்களை தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான முயற்சிகள் எடுப்பது தார்மீக கடமையாகும். அது மட்டுமல்லாது இலங்கை தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளதை மத்திய அரசு கருத்தில் கொண்டு இலங்கையில் நடைபெறும் இனஅழிப்பு முயற்சிக்கு நிரந்தர தீர்வு காண முன்வர வேண்டும் , இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆ ஃப் இந்தியா மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு 
A.காலித் முஹம்மது 
மாநில பொதுச்செயலாளர் 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆ ஃப் இந்தியா 
தமிழ்நாடு


0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza