Friday, January 25, 2013

"ஒன்றுபட்டால்(தான்) உண்டு வாழ்வு"


இஸ்லாமிய இயக்கங்களின் ஒன்றுபட்ட போராட்ட வியூகத்தால் கமலஹாசன் இயற்றி நடித்த "விஸ்வரூபம்" திரைப்படத்திற்கு தமிழக அரசு இடைக்கால தடைவிதித்திருக்கிறது. இது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்பதை பதிவு செய்வதோடு ஒரு சில கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.


இஸ்லாத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் சித்திரிக்கும் திரைப்படங்கள் இன்று நேற்றல்ல மாறாக பல ஆண்டுகளாக தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அன்றைய காலங்களில் அதனை எதிர்ப்பதற்கான வழி தெரியாமல் முஸ்லிம்கள் சகித்துக்கொண்டு இருந்த நிலை மாறி தற்போது முஸ்லிம்களுக்கான உரிமை மீட்பு போராட்டத்தில் இறையருளால் பலமான சமூக இயக்கங்கள் இன்று தமிழகத்தில் காலூன்றி நியாயத்திற்காகவும், நீதிக்காகவும் உரிமைக்காகவும் போராடி வருகிறது. சமிபத்தில் வெளியான "துப்பாக்கி" படமாகட்டும் இன்னும் திரையிடப்படாத விஸ்வரூபம் திரைப்படமாகட்டும் முஸ்லிம்களின் ஒன்றுபட்ட முயற்ச்சியால் ஓரளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய திரைப்படத்திற்கு எதிரான போராட்டகளத்தில் ஈடுபடும் போது சில மாற்று மத அன்பர்கள் பெரும்பாலும் " ஒரு சாதாரண திரைப்படம் தானே! இதற்கு போய் ஏன் இவ்வளவு ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும்....? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

மீடியாக்களிலேயே "சினிமா" என்பது பவர்ஃபுல் மீடியாவாக இருந்து கொண்டிருக்கிறது. ஒரு செய்தியை மக்களிடம் ஆழமாக பதியவைக்க இந்த சினிமா என்ற மீடியா பெரிதும் பயன்பட்டு வருகிறது. இந்த சினிமாக்களில் வரும் கதைகளை உண்மை என்றும் அதில் வரும் கதாநாயர்கள் செய்யும் வித்தைகள் அனைத்தும் உண்மை என்று நம்பி ஏமாறும் மக்கள் மிக அதிகம். இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் அவர் இறந்து போவதுபோல காட்சி வந்தால் அதனை பார்த்து கண்ணீர் சிந்தக்கூடிய நிலை தான் இருந்தது. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வில்லனாக நடித்த நம்பியார் அவர்களை நிஜ வாழ்க்கையிலும் பல பேர் வில்லனாக பார்த்ததை யாரும் மறந்துவிடமாட்டார்கள். அத்தகைய அளவிற்கு சினிமா ஒரு அன்றாட மனிதனின் வாழ்வோடு பின்னி பினைந்திருக்கிறது.

இன்று இந்தியாவில் ஏற்படும் கலாச்சார சீரழிவிற்கும், பாலியல் வன்முறைகளுக்கும் சினிமாவே காரணம் என்ற குற்றச்சாட்டு இன்று பெரியளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்க முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு தொடர்ந்தால் முஸ்லிம்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சானாக, அண்டை வீட்டுக்காரராக இருக்கும் மக்கள் மத்தியில் வீண் சந்தேகம் ஏற்படுவதற்கு அதிக அளவில் வாய்ப்பு உள்ளதை யாராலும் மறுத்துவிடமுடியாது. எனவே சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற சினிமாக்களை தடை செய்வதே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்ததாகும்.

விஷயத்திற்கு வருவோம்,

ஆக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்த விஸ்வரூபம் திரைப்படம் தற்போது ஒரு சிறிய முயற்ச்சியால் தடுத்து நிறுத்தியுள்ளோம்.  கமலஹாசன் திரைப்படத்தை வெளியிடவேண்டும் என்பதற்காக உயர் நீதிமன்றத்தின் வாசல்களை நாடியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. எனினும் விஸ்வரூபத்திற்கு எதிரான போராட்டம் இத்தோடு ஒய்ந்துவிடவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழிலே ஓர் சோல் உண்டு "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு". ஒன்றுபட்டு இருக்கும் சமுதாயத்தை யாராலும் வீழ்த்திவிட முடியாது. இறைவனின் உதவியால் விஸ்வரூபத்திற்கு எதிராக ஒன்று திரண்ட சமூகம் வெற்றியடைந்துள்ளது. இது இனியும் தொடரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

"உம்மத்தன் வசத்தன்"னாக இருக்கும் முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக வாழவேண்டும். இங்கே ஒற்றுமை பற்றி சில விஷயங்கள் பதிவு செய்ய வேண்டியுள்ளது. "ஒற்றுமை" என்றால அனைத்து இயக்கங்களையும் கலைத்துவிட்டு ஒரே இயக்கமாக செயல்படுவதுதான் ஒற்றுமை என்று சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஒரே இயக்கமாக இருந்து தங்களுக்குள் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக பல இயக்கங்களாக சிதறிய வரலாறு தமிழகத்தில் உண்டு. கருத்து வேற்றுமை என்பது மனிதனின் இயல்பாகும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கருத்துக்கள் உதிக்கும். அனைவரும் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்க வேண்டும் என்றில்லை. அப்படி சிந்தித்தால் அது மனித சமூகமாக இருக்க முடியாது.

தன்னுடைய கருத்தை முன் வைப்பது என்பது ஒவ்வொருவரின் உரிமையாகும். ஆனால் தன்னுடைய கருத்துதான் சரியானது என்று கூறி சமூகத்திலிருந்து பிரிந்துவிடக்கூடாது என்பதே வாதமாகும். 

தமிழக வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக பெரும்பாலான இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றினைந்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி பொதுவான சமூகத்திற்கு பயன் தரக்கூடிய போராட்டங்களை இன்றைய காலகட்டத்தில் நடத்திக்கொண்டிருக்கிறடு. இது சமூக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவி வரவேற்பை பெற்றுள்ளது. தங்களுக்குள் இருக்கும் கருத்து வேற்றுமையை மறந்து அதனை ஒதுக்கிவைத்துவிட்டு சமூகத்தின் நலனுக்காக ஒன்றினைவதையே "ஓற்றுமை" யாகும்.

சில மாதங்களுக்கு முன்னால் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி இயக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒன்றினைந்து மிகப்பெரிய அளவில் சென்னையில் போராட்டங்களை நடத்தியது. இதனை விமர்சிக்கும் வகையில் சில முஸ்லிம்கள் கடுமையாக சாடுவதும், கேலிக்குள்ளாக்கியதை பார்க்கும்போது வேதனையாக இருக்கின்றது. அத்தகையவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். சமூகத்தின் நலனை நாடி இதுவரைக்கும் இக்கூட்டணியில் சேராதிருக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் இதில் பங்கெடுக்க வேண்டும், அதே போன்று ஏற்கனவே இணைந்திருக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் உறுதியுடனும், இறுதிவரை கூட்டமைப்பில் நிலைத்திருக்க வேண்டும்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறும்போது

"இன்னும் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள் (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகிவிடுவீர்கள், உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களை சகிதுக்கொண்டு) பொறுமையாக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொருமையாளர்களுடன் இருக்கின்றான்"  (8:46)

ஒன்றுபடுவோம் சக்திபெறுவோம்!

அல்லாஹ் நம்மையும் நம் சமூகத்தையும் எல்லாவிதமான தீங்குகளை விட்டும் பாதுகாப்பானாக. ஆமீன்!

- முத்து

source: chennai popular front

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza