Sunday, January 20, 2013

பாபர் மசூதி வழக்கு - கி.வீரமணி கண்டனம்!

வெள்ளி விழாவுக்கு காத்திருக்கும் பாபர் மசூதி வழக்கு - கி.வீரமணி கண்டனம்!

சென்னை: பாபர் மசூதி வழக்கை ஜவ்வு மிட்டாய் போல் இழுப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தி.க. தலைவர் கி.வீரமணி, மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்களான ஜோஷி, லோகேஷ் சர்மா ஆகியோர்  அதில் மட்டுமல்லாமல், அய்தரா பாத்தின் மெக்கா மஜிஸ்த் ஆஜ்மீர்தர்கா குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டு, அதற்கு மேலும் குஜராத் கலவரத்தை  திட்டமிட்டே அங்கே  நிகழ்த்திவிட்டு, முஸ்லீம்கள்மீது  பழியைப் போட்டு விட்டு செயலை மிகவும் பக்குவமாகச் செய்துள்ளார்கள்!
2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ்  கோத்ரா ரயில் எரிப்பில் 50 கரசேவகர்களைக் கொன்ற சதி நிகழ்விலும் இதே லோகேஷ் சர்மா, ஆர்.எஸ்.எஸ். முக்கியப் புள்ளியான ஜோஷியின் ஆணைப்படி அதிலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பைச் செலுத்திடத் தவறவில்லை என்ற திடுக்கிடும் தகவல் நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (NIA) மூலம் கிடைத்துள்ளதாக 13.1.2013 டைமஸ் ஆஃப் இந்தியா நாளேடு தெளிவாக வெளியிட்டுள்ளது.

மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள், நாடாளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்ட வழக்கில் பிடிபட்டவர்கள் போன்றவர்களுக்கு உடனே தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று துள்ளிக் குதிக்கும் பா.ஜ.க., மற்றும் வலது சாரி தீவிரவாதிகள், இதேபோல குண்டு வெடிப்பு வழக்குகளில் சிக்கியுள்ள இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். படைகள்  மீது  நீதி விசாரண என்ற பெயரில் இந்த வழக்குகளை ஏன் நத்தை வேகத்தில் நகர்த்த வேண்டும்?

பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான குற்றவாளிகளான பிரபல ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., முன்னணித் தலைவர்கள் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்று வழக்கு - விசாரணை ஜவ்வு மிட்டாய் மாதிரி ஏன் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆக வேண்டும்? வெள்ளி விழா வரட்டும் என்று மத்திய அரசு காத்திருக்கிறதோ என்ற கேள்வி பொதுநல ஆர்வலர்களிடமிருந்து நீண்ட காலமாகவே கிளம்பி நிலை கொண்டு, இன்னமும் விடை கிடைக்காதவைகளாக இருக்கிறது.

தீவிரவாதம் என்றாலே இஸ்லாமி யர்கள்தான் என்பது போன்ற ஒரு படத்தை நாடு முழுவதும் ஊடகங்களும், இத்தகைய மதவெறி அரசியல்வாதிகளும் வரைந்து காட்டுவதில் பெரு வெற்றி அடைந் துள்ளார்கள்.

மத்தியில் உள்ள அதிகார வர்க்கம் முழுக்க இதில் காவி உணர்வு கொண்ட உயர் ஜாதியினராகவே உள்ளதால், காவல்துறை, விசாரணைத் துறையில் முன்பிருந்த பா.ஜ.க. ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட தங்கள் ஆதரவு, அனுதாபங் கொண்ட பலரும், அதே போல நீதித்துறையில் அந்த ஆட்சி பருவத்தில் இடம் பெற்றவர்களும், தற்போதுள்ள ஆட்சியின் கீழ் பணிபுரியும் பல உயர் அதிகாரிகள் நீதித்துறையில் உள்ளோரும், ஒரு வேளை அடுத்து அவர்கள் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது என்று மனதிற்குள் கணக்குப் போட்டு,  செயலை மந்தப்படுத்துவதும் தான் இந்த மெத்தனத்திற்கு முக்கியக் காரணங் களாக இருக்க வேண்டும்!

நீதி வழங்குவதில், குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்குவதில் ஏன் இரட்டை மனப்பான்மையான ஜாதிய மனுதர்மப் பார்வை இருக்க வேண்டும்?

தாங்களே முன்னின்று கலவரங்கள், தீ வைப்புகள், மக்களை அழிக்க வெடிகுண்டு களை  நட்டு வைத்து வெடிக்கச் செய்து, பழியை பிற மக்கள்மீது போட்டு, மதக் கலவரங்களைத் தூண்டுவதில் மிகப் பெரிய தேசியக் குற்றம் - சமூக விரோத நடவடிக்கை வேறு உண்டா?

எனவே மத்திய அரசின் உள்துறை இந்த வழக்குகளை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க ஆவன செய்ய உடனே முன்வர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza