புது டெல்லி: "நாட்டில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுமே தீவிரவாதத்தை வளர்த்துகின்றன என்ற உள்துறை அமைச்சர் ஷிண்டேயின் கருத்துக்குக் காங்கிரஸ் தலைவர் சோனியா மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையேல் பயங்கர பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என பாஜக பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
"ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக நடத்தும் பயிற்சி முகாம்கள் நாட்டில் இந்து தீவிரவாதத்தை வளர்த்துகின்றன. அவற்றின் பயிற்சி முகாம்களில் தீவிரவாத பயிற்சியளிக்கப்படுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு போன்ற நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டுள்ளது. அவற்றை நடத்தியபின்னர், சிறுபான்மையினர் அக்குண்டுவெடிப்புகளை நடத்தியது போன்று போலி தடயங்களை விட்டுச் செல்கின்றனர்" என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியிருந்தார்.
அவரின் இக்கருத்துக்குப் பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா மன்னிப்பு கேட்கவில்லையேல் பயங்கர பின்விளைவுகளைச் சந்திக்க நேரும் என பகிரங்கமாக மிரட்டலும் விடுத்துள்ளது.
இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் பேசும்போது,
"உள்துறை அமைச்சரின் கருத்தில், காங்கிரஸ் கட்சியின் கேடுவிளைவிக்கும் மனப்பாங்கு பிரதிபலிக்கிறது. அவரின் கருத்து கடும் ஆட்சேபத்துக்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து மட்டுமல்ல, அபாயகரமானதும் கூட. நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைக்கத்தக்க வகையிலான உள்துறை அமைச்சரின் இக்கருத்தைவிட வேறு மோசமான ஒன்று இருக்க முடியாது. இக்கருத்துக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா மன்னிப்புக் கேட்க வேண்டும். ராகுல்காந்தியும், உள்துறை அமைச்சரும் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் பயங்கர பின்விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும்." என்று கூறியுள்ளார்.
source: inneram
0 கருத்துரைகள்:
Post a Comment