அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தை நிராகரிக்கும் இஸ்ரேலை பாதுகாத்து ஒப்பந்தத்துக்கு எதிராக செயல்படும் அமெரிக்கா மறுபுறம் ஈரான் மீது அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம் சாட்டி பன்னாட்டு பொருளாதார தடைகளை சுமத்தியிருக்கிறது.
இஸ்ரேல் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் சேர வேண்டும்’ என்று கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை டிசம்பர் 5-ம் தேதி நிறைவேற்றியது. அணுஆயுதங்கள் இல்லாத மத்திய கிழக்கு பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கமுள்ளதாக கூறிக்கொள்ளும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 173 உறுப்பினர்களும் எதிராக 6 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
எதிர்பார்த்தபடியே இஸ்ரேல் இந்த தீர்மானத்தை நிராகரித்திருக்கிறது. ‘இஸ்ரேலைப் பொறுத்த வரை ஐக்கிய நாடுகள் சபை தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டது’ என்று செல்லமாக கடிந்திருக்கிறார் இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சர் இகால் பால்மர்.
நவம்பர் 29-ம் தேதி ஐநா பொதுச் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பாலஸ்தீன அரசுக்கு பார்வையாளர் அந்தஸ்து அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தனர்.
அமெரிக்கா இந்த இரண்டு தீர்மானங்களையும் எதிர்த்து, இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தது. கூடவே, தனக்கு இருக்கும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி பாதுகாப்புக் குழுவில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றுவதை தடுத்து வருகிறது.
அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் சேராத இஸ்ரேல் 1958-ம் ஆண்டு முதலே நெகேவ் என்ற இடத்தில் உள்ள டிமோனா அணு உலையில் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான புளூட்டோனியம் செறிவூட்டலை செய்து வருகிறது. இஸ்ரேலிடம் சுமார் 400 அணு ஆயுதங்களும் அவற்றை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் சாதனங்களும் இருப்பதாக டேவிட் ஆல்ப்ரைட் போன்ற ஆயுத பரவல் தடை நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். ஆனால் இஸ்ரேலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு பன்னாட்டு குழுக்களில் இஸ்ரேலை பாதுகாத்து நிற்கிறது அமெரிக்கா.
கூடவே, அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தை மீறி நேட்டோ நட்பு நாடுகளான பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து, துருக்கி போன்ற நாடுகளுக்கு 180 பி51 அணுகுண்டுகளை வழங்கியிருக்கிறது. இதுதான் அமெரிக்காவின் அணு எதிர்ப்பு காந்திய வேடத்தின் இலட்சியம்.
அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தை நிராகரிக்கும் இஸ்ரேலை பாதுகாத்து ஒப்பந்தத்துக்கு எதிராக செயல்படும் அமெரிக்கா மறுபுறம் ஈரான் மீது அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம் சாட்டி பன்னாட்டு பொருளாதார தடைகளை சுமத்தியிருக்கிறது. ‘ஈரான் அணுஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தை மீறி விட்டதாகவும் அதன் புளூட்டோனியம் செறிவூட்டும் திட்டம் ஆயுதம் தயாரிப்பதற்கானது’ என்றும் உலகிலேயே அதிக அணுஆயுதங்களை குவித்திருக்கும் அமெரிக்கா வாதிடுகிறது.
ஆனால் ஈரான் அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் சேர்ந்து தனது அணுஉலைகளை பன்னாட்டு அணுஆயுதக் கழகத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்தியிருக்கிறது. ‘அணு சக்தியை ஆக்க பூர்வமாக பயன்படுத்துவதற்கு தனக்கு உரிமை உள்ளது’ என்றும் ‘அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தம் மற்றும் பன்னாட்டு அணு சக்தி கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டே தான் தொடர்ந்து செயல்படுவதாகவும்’ விளக்கமளிக்கிறது.
ஆனால், தனக்கு ஏற்பு இல்லாத ஆட்சியாளர்கள் ஈரானில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மூலம் ஈரானுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி, கடுமையான பொருளாதார தடைகளை விதித்து ஒடுக்க நினைக்கிறது அமெரிக்கா.
அமெரிக்க அதிபர் ஒபாமா, “அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்றாத ஈரான் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றும், “அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கைகளை சகித்துக் கொள்ள மாட்டோம்” என்றும் அவ்வப்போது மிரட்டி பேசுகிறார். இஸ்ரேலின் ஆயுதக் குவிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அமெரிக்க அதிபர் “முக்கியமான மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆயுதப் போட்டியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றும் “ஈரான் பன்னாட்டு சமூக அமைப்புகளின் நம்பகத்தன்மையை உடைத்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதை சகித்துக் கொள்ள மாட்டோம்” என்றும் கூறுகிறார். இதன் மூலம் ஆப்கான், ஈராக்கிற்கு பிறகு ஈரானை ஆக்கிரமிக்க நினைக்கும் அமெரிக்கா அதற்காக வெறிபிடித்து அலைகிறது.
ஐக்கிய நாடுகள் சபை, அணு ஆயுத ஒழிப்புச் சட்டம் முதலான பன்னாட்டு அமைப்புகள் மூலம் உலகில் அமைதியும், நீதியும் நிலைநாட்டப்படுவதாக சொல்லப்படுவதெல்லாம் வெறும் மாயைதான். உண்மையில் பன்னாட்டு அரசியலில் அமெரிக்காவின் ராணுவ பலம்தான் சட்டங்களை தீர்மானித்து அமல்படுத்துகிறது. எந்த வகையான பன்னாட்டு சட்டங்களும் அமெரிக்கா சுமத்தும் நிபந்தனைகளுக்குட்பட்டே செல்லுபடியாகின்றன.
அமெரிக்கா தனக்கு சாதகமான சூழலில், பிற நாடுகளை இணங்க வைக்க முடிந்தால் பன்னாட்டு அமைப்புகளை பயன்படுத்தி தனது ஆதிக்கப் போர்களுக்கும் பொருளாதார சர்வாதிகாரத்துக்கும் சட்ட அங்கீகாரத்தை பெற்றுக் கொள்கிறது. தேவைப்படும் போது தனது எதிரிகளுக்கு எதிராக அந்த சட்டங்களை செயல்படுத்துகிறது.
பெரும்பான்மையான பிற நாடுகள் தனது நடவடிக்கைகளுக்கு எதிராக இருக்கும் போது இராணுவ பலத்தைப் பயன்படுத்தி சட்ட விரோதமான நடைமுறைகளில் தனது நோக்கங்களை சாதித்துக் கொள்கிறது. சட்டப்படியோ சட்டத்துக்கு வெளியிலோ தனது ஏகாதிபத்திய ஆதிக்கத்தை பரப்புவதுதான் அமெரிக்கா நிறுவியுள்ள ஒற்றைத் துருவ பன்னாட்டு நீதியின் அடிப்படை.
source: vinavu
source: vinavu
0 கருத்துரைகள்:
Post a Comment