டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதற்கும், தமிழகத்தில் 7-ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று இயக்குனர் அமீர் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு வைத்துள்ள கோரிக்கை அறிக்கையில்:
“நம் தலைநகர் டில்லியில் கடந்த 16-ஆம் தேதி மருத்துவ கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஒவ்வொரு இந்தியனின் இதயத்தையும் உலுக்கி உறைய வைத்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் ஆறு பேருக்கும் உடனடியாக விசாரணை முடித்து இம்மாத இறுதிக்குள் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். அந்த குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனையை அனைத்து மீடியா மற்றும் தொலைக்காட்சிகளில் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும். இதன் மூலம் இனி வரும் காலங்களில் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவருக்கு இது ஒரு அபாய எச்சரிக்கையாக இருக்கும்.
இந்திய நாட்டின் தலைநகர் டில்லி தான் இக்கேவலமான செயலில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது என புள்ளி விபரங்கள் உறுதி செய்யும் போது உலக அரங்கில் 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு மரியாதை குறைவு மட்டுமல்ல அவமானத்தையும் ஏற்படுத்துகிறது என்பது தான் நிதர்சன உண்மை. சமீபத்தில் நடந்த இக்கொடிய சம்பவம் நம் மனதை விட்டு மறைவதற்குள் நேற்று முன்தினம் (20.12.12) தமிழகத்தில் நெல்லை அருகே கிளாக்குளம் என்னும் கிராமத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி புனிதாவும் இக்கொடுஞ் செயலால் பாதிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது மேலும் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டு இக்கொடிய செயலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து, தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். இதன் மூலம் மருத்துவ கல்லூரி மாணவி சம்பவத்தில் என்ன செய்வது என தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கும் டில்லி அரசுக்கு தண்டனை எப்படி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தும் விதமாகவும், நாட்டுக்கு முன்னுதாரணமாகவும் விளங்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
source: inneram
0 கருத்துரைகள்:
Post a Comment