Tuesday, December 18, 2012

நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது-மௌலானா அபுல் கலாம் ஆசாத்


கல்வி என்பது அவரவர் திறமையைக் கண்டறியும் சாதனாமாக இருக்க வேண்டுமேயொழிய, நினைவுத்திறனை மட்டும் சோதிக்கும் முயற்சியாக இருக்கலாகாது என்பதையே பல அறிஞர்களும் கூறுகின்றனர். இந்த கணினி யுகத்தில் அனைத்து விதமான செய்திக்ளும் தடையற இணையத்தில் கிடைக்கப்பெறும்பட்சத்தில் வெறும் மனப்பாடம் செய்து எழுதி தன்னை நிரூபிப்பதால் மட்டுமே ஒரு மாணவன் தம் வாழ்க்கையில் வெற்றியடைய முடியாது. அதை விடுத்து படித்த அந்த விசயங்களை வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தும் விதம் மற்றும் அதுகுறித்த தெளிவும் அவசியம் தேவை.


அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்ட்டீன் சொல்வது போல அறிவுத்திறனைக் காட்டிலும் கற்பனைத்திறன் முக்கியமானது. கற்பனைத்திறன் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடக்கூடியது. அதனைக் கண்டறிந்து அதற்குத் தகுந்தாற்போல, அதாவது அந்தக் குழந்தையின் எண்ணம்போல தம் எதிர்காலத்திற்கான தொழிலைக் கண்டறிய உதவுவதாக இருக்க வேண்டும். யதார்த்த வாழ்க்கைக்கு ஏற்புடையதாக இருப்பதே சிறந்த கல்வி முறை.குழந்தை தன்னைப் பற்றியும், தன்னைச் சுற்றியுள்ள உலகம் பற்றியும் அறிந்து கொள்வதோடு, தன்னுடைய தனித்திறமை மற்றும் அடையாளத்தையும் உணரச் செய்வதுதான் ஒரு பள்ளியின் முக்கிய கடமை, ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் வித்தியாசமான திறமை விதையாக புதைந்து கிடக்கும். அதை விருட்சமாக வளரச் செய்ய வேண்டியதுதான் ஆசிரியரின் கடமை. நாடு முழுமையான பொருளாதாரச் சுதந்திரம் பெற வேண்டுமானால் அந்நாட்டில் நல்ல கல்வித்திட்டம் அடிப்படையாக அமைய வேண்டும். மேற்ச்சொன்ன அனைத்தும் இந்தியாவில் உள்ளதா என்றால், இல்லை என்ற ஏமாற்றம் தான் பதிலாக மிஞ்சும்.

ஏன் இந்த அவல நிலை? அரசு கல்வி நிலையங்களில் போதிய கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் பற்றாக் குறையால் வழங்கப்படும் குறைந்த தரமுடையக் கல்வி ஒரு புறம் , அண்ணாமலை பல்கலைகழகம் போன்று இரு மாணவர்களுக்கு ஒரு ஊழியர் நியமனம் என்ற ரீதியில் கல்வியின் பெயரால் நடத்தப்படும் கொள்ளைகள் மறுபுறம். ஏன் இந்த இரட்டை நிலை? எங்கு உள்ளது குறை? என்பதை கண்டறியவும் எல்லோருக்கும் தரமான இலவசக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்துடனும், வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே இக்கட்டுரை.

கொள்ளைக்கு வழிவகுத்த கல்விக் கொள்கைகள்:

ஆங்கிலேயர் நம் நாட்டை கொள்ளையடிக்க பயன்படுத்திய மிகமுக்கியமான வழிமுறை சமூகத்தில் ஏற்றத்தாழ்வை அதிகரிக்கச் செய்த அவர்களின் கல்விக்கொள்கையாகும். நம்மை தொடர்ந்து அடிமைப்படுத்துவதற்கும் , அவர்களை எதிர்த்து புரட்சிகள் தோன்றிடாமல் தடுப்பதற்குமென புகுத்தியதே மெக்காலே கல்விமுறை .அவர்களின் கல்விமுறையால் எல்லா சமூகத்திலும் இருந்த ஒரு சில குழுக்கள் மட்டுமே கல்வி பெற்றனர்,அதன் மூலம் அரசு பதவிகள் பெற்றனர்.பெரும்பாலானோர் ஆங்கிலேயர்களுக்கு சேவகம் செய்தனர்,வெகுசிலரே வெகுண்டெழுந்து விடுதலை போராட்டத்தில் களம் கண்டனர் என்பது நாம் அறிந்த வரலாறு. நாடு விடுதலை அடைந்து 65 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்றாலும் ஆங்கிலேயர் விட்டுச்சென்ற எச்சமாக சமுக நீதியற்ற ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த கல்விக்கொள்கைகள் இன்றும் இங்கு தொடர்வதென்பது நம் நாட்டிற்கு அவமானமாகும்.

புதிய இந்தியாவின் சிற்பி என்று புகழப்படும் நேருவின் ஆட்சிக் காலத்திலேயே கல்வி புகட்டுவதில் பாகுபாடு வெள்ளிடை மலையாக வெட்ட வெளிச்சமாக இருந்தது. அவர் காலத்தில் ஐ.ஐ.டி போன்ற உயர்ந்த கல்வியைத் தரக்கூடிய கல்விநிலையங்கள் மிகச் சிலவே திறக்கப்பட்டன. ஒருசாராருக்கு மட்டுமே இதில் இடங்கள் கிடைக்கின்ற வகையில் அவை இருந்தன, இன்றும் அதே நிலைதான் தொடர்கின்றது என்பது தனிக்கதை, அந்த ஒருசாரார் பார்ப்பன-பனியாக்கள் உள்ளிட்ட உயர்சாதியினர் என்பது சொல்லித்தெரிய வேண்டிய இரகசியமில்லை.இன்னொரு பக்கம் ஐ.டி.ஐ (ITI),பாலிடெக்னிக்குகள் நிறைய திறக்கப்பட்டன.பார்ப்பன-பனியாக்கள் துவங்கிய கனரகத் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் தொழிலாளர்கள் ஐடிஐ, பாலிடெக்னிக்குகளில் உருவாக்கப்பட்டார்கள். இவர்கள் தலித்துகள் ஆதிவாசிகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்களாகவே இருந்தனர் ,இருந்தும் வருகின்றனர்.அதாவது அன்று(நேரு காலத்தில்) நிறுவனங்களை துவங்குவதற்கு,அதனை திறமையாக நடத்திச் செல்வதற்கு வசதியான கல்வியை உயர் சாதி சமூகங்களும் அவர்களுக்கு தொண்டூழியம் செய்வதற்கான கல்வியை கீழ் சாதி சமூகங்களும் கற்கும் படியான ஏற்பாடாகவே அது அமைந்தது எனவேதான் கல்வியாளர்கள் அன்றைய கல்விக்கொள்கை அறிவிக்கப்படாத வருணாசிரமக் கொள்கையாகவே கருதினர்.

சுதந்திரப் போராட்டக் காலக்கட்டத்தில் பல்வேறு இந்தியத் தலைவர்களின் கோரிக்கையாக,முழக்கமாக இருந்தது அரசு பணிகள் ,அரசியல் அதிகார மையங்கள்,கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் தத்தமது சமூகங்களுக்கு உரிய பங்கீடு மேலும் கட்டாயக்கல்வி, இலவசக் கல்வி, பொதுப்பள்ளி மூலமான கல்வி ஆகியனவாகும். சுதந்திர போராட்டக் காலகட்டத்தில் முதன் முதலாக, கல்வி என்பது உரிமை என்று 1882 ஆம் ஆண்டு ஹன்டர் கமிஷனிடம் உரிமை குரல் எழுப்பினார் அடித்தட்டு மக்களின் உரிமை குரலாக விளங்கிய ஜோதிபா புலே அவர்கள், அவரைத் தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1911 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் சட்டப் பேரவையில் கல்வி உரிமை சட்ட மசோதாவை முன் மொழிந்தார் காந்தியின் அரசியல் ஆசான் கோபால கிருஷ்ண கோகலே,எல்லோரும் பள்ளிக்குப் போய்விட்டால் வயலில் யார் வேலைப் பார்ப்பது, கல்வி உரிமை ஆவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்று கூறி இந்துக்களின் பெரும் பகுதியினருக்கு (தலித்துகள், பழங்குடியினர், ஆதிவாசிகள்) எதிராக செயல்பட்ட அன்றைய சட்டப்பேரவையை அலங்கரித்த இந்து மன்னர்களால் கல்வி உரிமை மறுக்கப்பட்டது.

1937 ஆம் ஆண்டு ஏழு மாகாணங்களில் ஆட்சியை பிடித்தக் காங்கிரசை கல்விக்குக் கூடுதல் நிதியை ஒதுக்கவும்,முழுமையான தனது கனவு கல்வித் திட்டத்தையும் செயல்படுத்தவும் காந்தி வலியுறுத்தினார்,உயர் ஜாதியினரின் உறைவிடமாக விளங்கிய காங்கிரஸ் நிதிப் பற்றாக்குறையை நொண்டிச் சாக்காக கூறி அதனை கிடப்பில் போட்டது.

ஆங்கிலேயர் காலத்தில் வெறும் கனவாக இருந்த இக்கோரிக்கைகள் அரசியல் அமைப்புச் சட்டம் எழுதபடும் பொழுது கூட அதில் இருந்த ஆதிக்கச் சக்திகளால் அடிப்படை உரிமையாக ஆகாமல் தடுக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அம்பேத்கர் அவர்களின் கடும் முயற்சியால் உலகின் எந்த நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்திலும் இல்லாத வகையில் "அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் என்ற 45வது பிரிவை நமது அரசியலமைப்பில் கொண்டுவந்தார். இதன்படி "பத்து ஆண்டுகளுக்குள் இந்திய அரசு, 14 வயதிற் குட்பட்ட அத்தனைப்பேருக்கும் கட்டாயமாக இலவசக் கல்வி “ யை கொடுக்கவேண்டும். இதனை சிரமேற் கொண்டு இந்திய அரசு நடைமுறைபடுத்தும் பொழுது தானாகவே குறுப்பிட்ட காலங்களுக்குப் பிறகு அரசு கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த வழிகாட்டும் நெறிமுறைகள் 45வது பிரிவை அம்பேத்கர் சேர்த்தார்.

பத்தாண்டுகளுக்குள் என்று சொல்லும்போது 1950- 1960 வரைக்குமான பத்தாண்டுகளுக்குள் தொடக்கக்கல்வி கட்டாயமாக, இலவசமாகக் கிடைத்திருக்க வேண்டும்.அடுத்த ஒரு சில ஆண்டுகளில் உயர்கல்வி வரையில் அத்தனை கல்வியும் கட்டாயமாக, இலவசமாக எல்லாருக்கும் கிடைத்துவிடும், இதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் எதிர்பார்ப்பு.

சட்டத்தின் ஓட்டைகளை நன்றாக அறிந்திருந்த ஆட்சியாளர்களும் அவர்களை இயக்கிய ஆதிக்க சக்திகளும் அரசியல் அமைப்பு சட்டத்தையே கேலிக்குரியதாக்கி வேடிக்கைப் பார்த்தனர்.பல்வேறு கமிஷன்களை போட்டு கல்வி அடிப்படை உரிமை ஆகிவிடாமல் தடுத்தனர்.அனைவருக்கும் கல்வி கிடைத்தால் தமது ஆட்சி அஸ்தமித்துவிடும் என்று பயந்தது ஆங்கிலேய ஏகாதிபத்தியம், அதே எண்ணத்துடன் செயல்பட்டது சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், அதனால் தான் அவர்களால் 55 ஆண்டுகள் இந்நாட்டை ஏகபோகமாக ஆள முடிந்தது.சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸை கலைத்துவிட காந்தி விரும்பினார், அக்கட்சியை கரைதித்ருந்தால் குறுக்கு வழியில் பணத்தை கொள்ளையடிக்கும் மார்க்கமாக கல்வி கொள்கைகள் மாற்றபட்டிருப்பது ஒரு வேளை தடுக்கப்பட்டிருக்கும். இன்று ஊழல்,பொருளாதார முறைகேடுகள் புரையோடும் முக்கிய துறையாக கல்வித்துறை மாற்றப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை ......

சுதந்திரத்திற்கு முன் வெறும் கனாவாக இருந்த அனைவருக்குமான கட்டாய மற்றும் இலவசக் கல்வி சுதந்திரத்திற்குப் பிறகு நினைவாகும் என்று எதிர்ப்பார்த்துதான் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி 14வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவசமாக வழங்கும் வண்ணம் அரசியல் அமைப்பு சாசனத்தின் மூலம் அரசிற்கு வழிகாட்டும் நெறிமுறையாக ஆக்கப்பட்டது. 1965 வரை கண்பொத்தி வேடிக்கை பார்த்த காங்கிரஸ் வேறு வழியில்லாமல் கண்துடைபிற்காக 1964-1966 இல் கோத்தாரி குழுவை அமைத்தது.அக்காலகட்டத்தில் பொதுப்பள்ளி முறை பெரும்ப்பாலும் பின்பிற்ற வந்த காரணத்தால் இக்குழுவும் பொதுப் பள்ளிமுறையையும்,அருகாமைப்பள்ளி முறையையும் அரசிற்கு பரிந்துரைத்தது.அறிக்கையை வழக்கம் போல் கிடப்பில் போட்டது காங்கிரஸ்.சுதந்திரத்திற்குப் பிறகு போர்கால அடிப்படையில் ஆரம்பக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு அடிப்படைக் கடமையைச் செய்யாமல் கோட்டை விட்டு விட்டு 15 ஆண்டுகள் தூங்கியதால் கல்வியின் மூலம் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய விலைமதிப்பில்லா செல்வம் இன்று வரை கிடைக்காமல் போய்க் கொண்டிருகின்றது.
ஆரம்பக் கல்வியின் நிலை எதுவென்றால் உயர்கல்வியின் நிலையோ இதைவிடப் பரிதாபமாகும்.இன்று உயர்க்கல்வியில் பெயரளவில் இயங்கும், ஊழல் தலைவிரித்தாடும் பல்கலை கழக மானியக் குழு(UGC),அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் (AITCE), ஒருக் குறுப்பிட்டச் சமூகத்தினர் மட்டுமே கல்விப் பெற என வடிவமைக்கப் பட்ட ஐஐடி க்கள் ஆகியன உருவாக்கப்பட்டன.

தரமான கல்வி மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே என்ற நிலை 1986 ஆம் ஆண்டு உருவானது. அவ்வாண்டு வெளியான தேசியக் கல்விக்கொள்கை ஏழைகளுக்கு தரம் குறைந்த இணைக் கல்வி முறைகள் (paralell streams) பற்றிக்கூறியது.இக்காலக்கட்டத்தில் தான் இந்தியாவில் தனியார் ,தாராளமயமாக்கல் கொள்கைகள் மெல்லத் தலை எடுக்க ஆரம்பித்தது. சாதி ஒடுக்குமுறைகளால் இந்தியர்கள் பிரித்து வைக்கப்பட்டு அவர்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பு உரிமையும் காலங்காலமாக மறுக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என மத்திய அரசுக்கு பி.பி.மண்டல் கமிஷன் பரிந்துரை செய்திருந்தது. இந்த அறிக்கை 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது,சமூக நீதியின் முழக்கமான இட ஒதுக்கீட்டு கோரிக்கை வலுப்பெற ஆரம்பித்தது, தேர்தல் அறிக்கையிலேயே மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி மண்டல் கமிஷன் அறிக்கை அமல்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தில் 1990ஆம் ஆண்டு அறிவித்த வி.பி.சிங், இதன் மூலமாகப் அம்பேத்கரின் கனவு நனவாகிறது எனக் குறிப்பிட்டார். அம்பேத்கர்,கோகலே,காந்தி போன்றோரின் கல்வியுடைய சம நீதி மிக்க சமூக உருவாக்கக் கண்டக் கனவை மெய்படாமல் சமுக நீதியை,சமய ஒற்றுமையை, நாட்டின் கல்விக் கனவை அழித்திடும் தேச விரோத சங்கபரிவார பாசிஸ சக்திகள் கலவரத்தின் மூலம் தடுத்தனர். 80 ஆண்டுகளுக்கு முன்பு உயர் சாதியினரின் கைப்பாவையாக செயல்பட்ட இந்து மன்னர்கள் செய்த வேலையை இந்துத்துவ சக்தியான பாஸிசம் மீண்டும் செய்துள்ளது.

1952 முதல் இடைநிலைக் கல்விக்குழு பரிந்துரை, 1964-66 வரை கோத்தாரி கமிஷன், ராமமூர்த்தி கமிஷன் (1991), யஷ்பால் கமிஷன் (1993) இதுபோல பல்வேறு கமிஷன்கள் மத்திய அளவிலும் அந்தந்த மாநில அளவிலும் அருகமைப்பள்ளி அமைப்பைக் கொண்ட,பொதுப்பள்ளிகள் கல்வி என்ற பரிந்துரையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.கல்வியில் பின்தங்கிய மக்களின் கோரிக்கை,சுதந்திரப் போராட்ட தலைவர்களின் கனவு எதுவாக இருந்ததோ (சமுக நீதிமிக்க,எல்லோருக்கும் சமமான,எல்லா சமூகங்களும் இணைந்து கற்கும் கல்விமுறை) அதனைத்தான் அனைத்துக் கமிசன்களும் திரும்ப திரும்பப் பரிந்துரை செய்தன,ஆனால் தொடந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸும்,இடையில் ஆட்சியில் அமர்ந்த பாரதீய ஜனதாவும் இப்பரிந்துரைகளை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.அதோடு மட்டும் நில்லாமல் இப்பரிந்துரைகளுக்கு நேர் எதிரான கல்விமுறைகளையும் சமூக அநீதி கொள்கைகளையும் புகுத்தின.

1993-ஆம் ஆண்டின் உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசியலைப்பின் 45வது பிரிவை 'Fundamental duty of Governance' என்றும் அதில் அடிப்படை உரிமைக்குரிய ஒரு தீவிரம் இருப்பதாக தெளிவாக சொன்னது.இவ்வழக்கை தான் 2010 செப்டம்பரில் சமச்சீர்க்கல்வி வழக்கிலும் உச்ச நீதிமன்றம் மேற்கோள் காட்டியது.

90 களில் இந்தியாவில் எல்லாதுறைகளிலும் தனியார் மயம் புகுத்தப்பட்டது. ஏற்கனவே சுதந்திரத்திற்குப் தொழில்துறையை ஏகபோகமாக கட்டுப்படுத்தி வந்த பார்ப்பன- பனியாக் கும்பல்களுக்கு தனியார்மயம், தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கட்டாய,இலவச பொதுக் கல்வியை கிடைக்கச் செய்யாமல் செய்ய கூடுதல் வாய்ப்பாய் போனது என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். எல்லோருக்கும் கட்டாய,இலவச பொதுக் கல்வி வழங்காமல் தனது பொறுப்பை தட்டிக்கழித்து வந்த மத்திய -மாநில அரசுகளுக்கு தனியார் மயம், கல்விக் கடமையை கை கழுவிட கைக் கொடுத்தது,சமூக நீதிக்கு சமாதி கட்டவும் காரணமாய் அமைந்தது. 1997இல் இந்திய அரசின் நிதித்துறை வெளியிட்ட”"இந்தியாவில் அரசு மானியங்கள்” என்ற அறிக்கை உயர்கல்வியின் எதிர்காலத்தைக் கோடிட்டுக் காட்டியது. உயர்கல்வி சமூக நன்மை தராத சேவை என்பதாலும், அதற்கான மானியங்களின் சமூகப் பலனை விடவும், தனிநபர் பலன்களே அதிகமிருப்பதாலும் உயர்கல்விக்கு மானியங்கள் அளிக்கப்படக்கூடாது என வாதிட்டது. “நன்மை தரக் கூடிய சமூகநலப் பட்டியலிலிருந்து’ உயர்கல்வி நீக்கப்பட்டது.

2001ல் உயர்கல்வி சீர்திருத்தங்களை ஆய்வு செய்ய முகேஷ் அம்பானி மற்றும் குமாரமங்கலம் பிர்லா ஆகிய கல்வியாளர்களை (!) உள்ளடக்கிய கமிட்டியை BJP அரசு அமைத்தது. அக்கமிட்டி உலக வங்கியின் கல்வி மூலமான கொள்ளைக்கு கால்கோள் இட்டது. மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வரவை அதிகரிக்க அரசும், பல்கலைக் கழக மானியக் குழுவும் உருவாக்கிய நீதிபதி புன்னையா கமிட்டி, சுவாமிநாதன் கமிட்டி, பைலி கமிட்டி, அனந்த கிருஷ்ணன் கமிட்டி, என அனைத்துக் கமிட்டிகளும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்துவதையே முக்கிய நடவடிக்கையாக வழிகாட்டின. கல்விக் கடன் வழங்குவதன் மூலமும், கல்விக் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமும்தான் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கான செலவை நிறுவனங்கள் திருப்பி எடுக்க முடியும் என கொள்கை வகுப்பாளர்களால் வழிகாட்டப்பட்டது.

இதன் மூலம் அரசு உயர் கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து நழுவிக் கொண்டு கல்வி வியாபாரிகள் கடை பரப்ப வழி வகுத்தது. 90களுக்குப் பிறகான உயர்கல்விக் கொள்கைச் சீர்திருத்தங்களின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று உயர் கல்வி வழங்கும் பொறுப்பை அரசு கைவிட்டு, அதை தனியாரிடம் ஒப்படைப்பது, இந்தச் “சீர்திருத்தத்தின்’ விளைவுதான் கல்விக்கடன். கல்விக் கடன் மூலமாக சுமையை வங்கிகளுக்கும், வங்கிகள் மூலமாக தனிநபர்களுக்கும் மாற்றி விட்டது. உலகளாவிய அனுபவத்தின் அடிப்படையில் கல்விக் கடன்கள் சரியாகத் திருப்பியளிக்கப்படுவதில்லையென காலப் போக்கில் கைவிடப்பட்டது. நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் கல்விக் கடன் என்பது தொடராது. மாறாக சிறிது சிறிதாக நிறுத்தப்பட்டு விடும், அதன் மூலம் உயர்க்கல்வி இப்போது கிடைக்கும் 8 சதம் மாணவர்களுக்கும் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.


தனியார் பள்ளிகள் தமது உரிமைக்காக தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் கல்வி அரசின் பொறுப்பில், செலவில்தான் இருக்கவேண்டும் என்பதையும், இந்தக் கல்வி உரிமையைத் தனியாரால் கொடுக்கமுடியாது என்பதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டியது. இவை எல்லாவற்றுக்கும் பிறகு மதவாத பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணி அரசு 2002-இல் 86-வது சட்டத்திருத்தம் கொண்டு வந்தது.2000-வது ஆண்டில் ஐ.நா.சபை வெளியிட்ட புத்தாயிரமாவது ஆண்டு சாசனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டது. அதன்படி குழந்தைகள் உரிமை என்பதுவும் மனித உரிமைதான், அவற்றுள் மிக முக்கிய உரிமையாக தொடக்கக்கல்வியை அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாகத் தரவேண்டும் என்கிறது அந்த சாசனம். மிகமிகப் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளைக் கருத்திற்கொண்டு தொடக்கக் கல்வி என்கிறது அந்த சாசனம்.. ஆனால் அது இந்தியா போன்ற நாட்டிற்கு கட்டாயக்கல்வி என்றால் குறைந்த பட்சம் முழுமையான பள்ளிக்கல்வி என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.

ஆனால் 2000-த்தில் ஐ.நா.சாசனத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு அதை நடைமுறைப்படுத்த அரசியல் சாசனத்தைத் திருத்தி சட்டம் இயற்றுவதற்குப் பதிலாக, 86-வது சட்டத்திருத்தம் மூலம் ஒரே கல்லில் 3 வேலைகளைச் செய்தது பி.ஜே.பி அரசு . 51A பிரிவைத் திருத்தியது. 51A என்பது அடிப்படைக் கடமை. இந்த 51Aல் K என்ற பிரிவைச் சேர்த்தார்கள். அந்தப்பிரிவு "பிள்ளைக்குக் கல்வி தருவது பெற்றோர் அல்லது பாதுகாவலருடைய கடமை என்று மாற்றியது. இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் கல்வி வழங்குவது அரசின் வேலை கிடையாது,பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கல்விக் கொடுக்க வக்கிருதால் கொடுக்கட்டும் இல்லையல் வேலைக்கு அனுப்பட்டும்.வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி என்பது கனவு மட்டுமே.வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பெரும்பான்மை சமூகம் தலித்துகள்,ஆதிவாசிகள் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்கள் ஆகும்.

21A பிரிவை நுழைத்தது. “சுதந்திரமாக வாழும் உரிமை” என்ற பிரிவில் A சேர்த்து 21A கொண்டு வந்தார்கள். "எந்த முறையில் கல்வியை இலவசமாகக் கொடுக்கமுடியுமோ அந்த வகையில் கல்வியை, தான் இயற்றும் சட்டத்தின் மூலமாக அரசு கொடுக்கலாம் என்று 21ஏ பிரிவு சொன்னது. இதன் மற்றொரு பொருள் ஒன்று கல்வியை பள்ளிகூடங்கள் கட்டி அரசின் நேரடி கட்டுப்பாட்டிலோ அல்லது தனியார்களை இலவசக் கல்வி வழங்கச் சொல்லி அவர்களுக்கு அதற்கானச் செலவை அரசு மானியமாகவோ அல்லது நேரடியாக பணமாகவோ வழங்கலாம், இல்லை தொண்டு நிறுவனங்களின் மூலம் அவர்கள் வழங்கலாம்.இரண்டாவது முறையில் வழங்கினால் அது தனியார் கல்வி நிறுவனங்கள் லாபம் ஈட்ட மட்டுமே பயன்படும் .இம்முறை விவசாயத்திற்கும் உரத்திற்கும் மானியம் வழங்குவதை ஒத்தது, பல லட்சம் கோடிகளை கொட்டிக் கொடுத்தப் பிறகும் விவசாயம் இன்று எந்த அளவு கவலைக்குரிய நிலையில் இருக்கின்றது,விவசாயின் வாழ்வு எந்த அளவு கீழாக உள்ளது நாம் அறிந்ததே உள்ளோம்.இம்முறையில் கல்வி வழங்கினால் நிச்சயமாக கல்வி உரியவர்களுக்கு கிடைக்காது என்பது மட்டும் உறுதி.மூன்றாவது முறையில் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் கல்வியை வழங்க முயன்றாலும் கல்வி உரியவர்களுக்கு கிடைக்காது என்பதற்கு உதாரணம் வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய தோல்வி அடைந்த சர்வ சிக்க்ஷ அபியான் திட்டமே ஆகும். இந்த 21ஏ பிரிவை நடைமுறைப்படுத்த காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ(2) அரசு கொண்டு வந்ததுதான் கல்வி உரிமைச் சட்டம்-2009.

45-வது பிரிவுக்கு வேறு மாற்று தருகிறது. பிரிவு 45-இல்'State shall Endeavour' என்றிருந்தது. அடுத்து' "சர்வ சிக்க்ஷ அபியான் (SSA) என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இது ஒரு திட்டம் (Project) மட்டுமே, சட்டம் கிடையாது. "சர்வ சிக்க்ஷ அபியான் "அனைவருக்கும் கல்வி' மூலம் முதல் நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை, அதன் தொடர்ச்சியாக 9,10ஆம் வகுப்பு என்றால் கூட, அது கல்வியை அடிப்படை உரிமையாக்கவில்லை. எல்லோருக்கும் தரமான இலவசக்கல்வி என்று பேசவில்லை. இத்திட்டத்திற்கு ஒவ்வொரு மாநிலமும் கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுக்கும். மாநில அரசு அந்த நிதியை செலவு செய்யும். முதலில் 75 சதவீதம் மத்திய அரசு, 25 சதவீதம் மாநில அரசு என்றிருந்தது. அது படிப்படியாக குறைந்து மத்திய அரசு 25 சதவீதம், மாநில அரசு 75 சதவீதம் என்று தலைகீழாக மாறியது. இந்தத் திட்டத்தை பொறுத்தவரை, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய தோல்வி. ஏனென்றால் அது ஒரு கோர்ஸ் மாதிரிதான். சர்வ சிக்க்ஷ அபியானில் அரசு சாரா நிறுவனங்கள், பொறுப்பெடுத்து செயல்பட்டார்கள்.

அவர்களும் பலக் காரணங்களைக் கூறி 2010-க்கு பிறகு நாங்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கிறோம் என்று விலகிக் கொண்டார்கள். ஏற்கனவே மத்திய அரசின் பாராமுகத்தினாலும்,போதிய தொழில் வளர்ச்சி இன்மையாலும் எல்லா ரீதியிலும் பின்தங்கியுள்ளது இம்மாநிலங்கள் என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.

கல்வி உரிமைச் சட்டம்-2009. கூடுமானவரையில் தாய்மொழியில் கல்வி என்கிறது. ஏற்கனவே யுபிஏ(1) அரசின் தேசிய கல்வித் திட்டம்- 2005-இல் தாய்மொழி வழியில்தான் கல்வி என்று சொல்லியிருந்ததைக்கூட நடைமுறைப்படுத்த முயலாமல் "கூடுமான வரையில் தாய்மொழியில் என்கிறார்கள். பள்ளி என்ற ஒன்று இருந்தால் போதும் என்றுதான் சொல்லப்படுகிறதே தவிர அது பொதுப்பள்ளியாக, அரசு பள்ளியாக, தரம்மிக்க கல்வியைக் கொடுக்கிற பள்ளியாக இருக்க வேண்டும் என்று எதுவுமே சொல்லப்படவில்லை. அடுத்து, 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக்கல்வியில் 150 மாணவர்கள் சேருகிறவரை தலைமை ஆசிரியர் என்று ஒருவர் இருக்கமாட்டார். அதாவது மேல்முறையீட்டுக்கு பொறுப்பாக யாருமே கிடையாது. அங்கே ஒரு ஆசிரியர் தவறு செய்தால் யாரிடம் போய் குழந்தை முறையிடும்?

250 பேர் வரை 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர், 60க்கு 2, 90க்கு 3, 120க்கு 4. 1 முதல் 5 வரையான வெவ்வேறு வகுப்புகளையும் சேர்த்த 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் என்ன தரமான கல்வியைக் கொடுக்கமுடியும்? ஆக, மீண்டும் 90 சதவீதம் மக்களுக்கு இப்படிப்பட்ட கல்வி உரிமைதான் கிடைக்கும்.
இதிலிருந்து தப்பிக்கும் வழியாக தனியார் பள்ளிகள் 25 சதவீத மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறது திட்டம். அதாவது, தனியார் பள்ளி,அங்கு வேறு மாதிரியான கல்விமுறை இருக்கும். வகுப்புக்கு ஓர் ஆசிரியர் இருப்பார். வேண்டுமென்றால் அங்கே 25 சதவீதம் பேரைச் சேர்த்துக் கொள்வார்கள் என்கிறது. இந்த ஒதுக்கீட்டின் நோக்கம் வருடத்திற்கு 25 சதவீத குழந்தைகளைக் கொண்டு போய் சேர்ப்பதுதான். இத்தகைய கூறுகளை கொண்ட கல்வி உரிமைச்சட்டம் கல்வி உரிமையை வழங்கவில்லை. மாறாக, குழந்தைகளுக்கு முழுமையான கல்வியை மறுக்கவே செய்கிறது. அது அரசு பள்ளிகளை புறக்கணித்து தனியார் பள்ளிகளை ஊக்குவித்து, கல்வி வழங்கும் தன் பொறுப்பிலிருந்து அரசு படிப்படியாக விலகிக் கொள்ளும் செயலாகும். அதிகம் போனால் 10 ஆண்டு காலத்திற்குள் பொதுப் பள்ளிக்கு மாணவர்களே இருக்க மாட்டார்கள். இப்பொழுதே ஒரு பொதுப்பள்ளியைச் சுற்றி 4 தனியார் பள்ளிகள். அந்தப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பொதுப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டேவரும். பொதுப்பள்ளிகள் மூடப்படும் நிலைவரும்.

காசு உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி :

கல்வி என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை,அதனை செய்ய வேண்டியது அரசின் தலையாயக் கடமை,அதனை அரசு தட்டிக் கழித்ததை பார்த்தோம். கடமையாக தான் செய்யவில்லை. அதனை சமூக மேம்பாட்டிற்கான லாப நோக்கமற்ற சேவை என்ற அடிப்படையிலும் செய்ய 1992 உலமயமாக்கலுக்கு பின் வந்த அரசுகள் தயாராகவில்லை.காசு இருந்தால் கல்வி,அதுவும் அரசிடமிருந்து இல்லை,தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்,பல்கலைகழகங்களிடமிருந்து தான் கிடைக்கும்.

அதன் விளைவாக 1992 க்கு பிறகு புற்றீசல் போல் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்,பல்கலை கழகங்கள் பெருகின..தற்பொழுது 20%(2.6 இலட்சம்) பள்ளிகள்,76% (25,023) கல்லூரிகள்,20%(112) பல்கலை கழகங்கள் தனியார் வசம் உள்ளது.கணக்கு வழக்கில்லாமல் பெருகிப் போன தனியார் கல்லூரிகள்,பல்கலை கழகங்கள் இந்தியாவில் தகுதி வாய்ந்த,நாட்டின் எதிர்காலத்தை வளமிக்கதாக உருவாக்கக் கூடிய அறிவியல்,தொழில் நுட்ப மனித வளத்தை உருவாக்கவில்லை.மாறாக உள்நாட்டு பன்னாட்டு பாரசுர நிருவனகளுக்குத் தேவையான ஹைடெக் ஐடி கூலித் தொழிலாளர்களை தான் உருவாக்கி உள்ளது.ஒரு புறம் நாட்டின் நீண்ட கால மற்றும் எதிர் கால வளர்ச்சிக்கு உதவக் கூடிய கல்வி தனியார் கல்வி வியாபாரிகளால் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளது.மறுபுறம் கல்வி முறை காசு உள்ளவர்களுக்கு மட்டும் என்று ஆக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி அதுவும் கட்டாய இலவச பொதுக் கல்வி இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் பாடத்திட்டம், LKG க்கே லட்சங்களை நன்கொடையாக நிர்ணையத்து பள்ளி கல்வியை வியாபராமாக்கி கொள்ளை லாபம் ஈட்டி வந்த தனியார் பள்ளி முதலாளிகளின் முதலுக்கே வேட்டு வைப்பதாக இருந்தது.அத்திட்டத்தை முடக்கிட அரசியல்,சட்ட பலத்தை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை தமிழகம் கண்டது. தற்பொழுதுள்ள கொண்டு வரப்பட்டுள்ள கல்வி உரிமைச் சட்டம்-2009 அரசு வசம் உள்ள 80% பள்ளிகளை மெல்ல மெல்ல தனியார் கபளீகரம் செய்ய மேற்கொள்ள உதவும் முயற்சியாகும்,ஏனெனில் ஏற்கனவே பெரும் பகுதி உயர்க் கல்வி சந்தை பங்குகள் தனியார் வசமே உள்ளது.உயர்கல்வியில் கொள்ளை இலாபம் ஈட்டியவர்கள் அடுத்து பள்ளிக் கல்வியை விட்டுவிடுவார்களா ? சுய நிதி உயர் கல்வி நிறுவனங்கள் சேவை நிறுவனமாகக் கருதப்பட்டு அவர்களின் சேவையை பாராட்டி வரி விலக்கு பெற்று வருகின்றார்கள்.கோடிகளை குவித்தவர்களுக்கு அடுத்த முதலீட்டு வாய்ப்பு தான் இனி வரும் காலங்களில் பள்ளிக் கல்வி சந்தை.

தனியார் கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கும், நிதி வழங்குவதற்கும், அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்குமான அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் கீழ் இருக்கும் அமைப்புகளிடமே உள்ளன. இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகம் , பல்கலைக் கழக மானியக் குழு, இந்திய மருத்துவக்கல்விக் கழகம் , தேசிய ஆசிரியர் கல்விக்குழு முதலான 13 மத்திய அரசு அமைப்புகள் உள்ளன. ஆனால் இவற்றில் முறைகேடுகளும், ஊழலும் பெருக்கெடுத்தோடுகின்றன.

கல்வியை வியாபாரமாக்கியதன் அபாயகரமான வெளிப்பாடுகளில் சில தான் . 2009இல் மத்திய அரசு அமைத்த தாண்டன்குழு, ‘மொத்தமுள்ள 126 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 38 நிறுவனங்கள் மட்டுமே உரிய கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளன. 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், சீர்படுத்தவே முடியாத நிலையில் இருப்பதால் அவற்றுக்கு வழங்கியுள்ள நிகர்நிலைத் தகுதியை இரத்து செய்ய வேண்டும், மேலும் 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் பல குறைபாடுகள் உள்ளன; இக்குறைபாடுகளை மூன்று ஆண்டுக் காலத்திற்குள் சரி செய்யாவிட்டால் அவற்றின் நிகர்நிலைத் தகுதியை நீக்க வேண்டும்’ என்று அறிக்கை அளித்துள்ள நிலையிலும் அவை இன்று வரை செயல்படுவது கேவலமான போக்கு.

2010 ஏப்ரல் மாதம் இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவராக இருந்த கேதன் தேசாயிடமிருந்து பணமாக 1800 கோடியும் தங்கமாக 1500 கிலோவும் கைப்பற்றப்பட்ட சம்பவம்,இவருடைய பதவிக் காலத்தில் தான் தற்பொழுது உள்ள பல்வேறு தனியார் மருத்தவப் பல்கலை கழகங்கள் துவங்கப்பட்டன.2000 ஆம் ஆண்டு முதலே பல்வேறு நிதி மோசடிப் புகாரில் சிக்கிய இவரை பதவியில் அமர்த்தியது அன்றைய பாஜக அரசு.
அதேப் போக்கை இப்பொழுது பள்ளிக் கல்வியிலும் சட்டத்தின் உதவியுடன் கொண்டு வந்துள்ளது. எதிர்கால பள்ளிக் கல்வியை அபாயத்திற்குள் தள்ளிவிடும் என கல்வியாளர்கள் கவலை கொள்கின்றனர்.அண்ணாமலை பல்கலை கழக மோசடி தமிழத்தில் மீண்டும் ஓர் அபாய சங்கை ஊதி உள்ளது.

செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று நாம் சும்மா இருந்திடாமல் கல்வியை உள்நாட்டு-பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்க முயலும் அரசின் அனைத்து செயல்களை தடுத்து நிறுத்த களம் காணவேண்டும்.அனைவருக்கும் கட்டாய இலவச பொதுக் கல்வி வழங்கும் அரசின் கடமையை மீண்டும் நியாபகம் ஊட்ட மக்கள் திரள் போராட்டத்தை முன் எடுத்து வேண்டும். நூற்றாண்டு கால கல்விக் கனவை அடைய தேசத் தலைவர்கள் அன்று ஆங்கிலேயரை எதிர்த்து போராடினர்.அதே பாதையில் பயணிக்க நாமும் தயாராக வேண்டும். கல்விச் சுதந்திரம்,சமூக நீதி,வாழ்க்கைப் பாதுகாப்பு கிடைக்கும் வரை போராடுவோம்

source: popularfronttn.org

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza