சென்னை:என்.சி.ஹெச்.ஆர்.ஒ நடத்திய சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் பற்றிய கலந்தாயவுக் கூட்டத்தில் யு.ஏ.பி.ஏ எதிர்ப்பு கூட்டியக்கம் ஒன்றை உருவாக்கி பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) சார்பாக ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை (20/12/2012) சென்னையில் நடைபெற்றது.
என்.சி.ஹெச்.ஆர்.ஓ-வின் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுஃப் கலந்தாய்வு கூட்டத்தில் துவக்க உரையை நிகழ்த்தினார். மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் (PUHR) தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கொடூரத்தன்மைக் குறித்து அறிமுக உரையாற்றி துவக்கி வைத்தார்.
வழக்கறிஞர் சத்ய சந்திரன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மனித உரிமை வழக்கறிஞர்கள், சிவில் உரிமைகளுக்கான மக்கள் கழகம், அரசியல் கைதிகள் விடுதலைக்கான கூட்டமைப்பு(CRPP)உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளை சார்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை:
மனித உரிமைகளுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்(Un lawful Activitiess (Prevention) Act, 1967) 3-வது முறையாக திருத்தப்பட்டுள்ளது. நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி அன்று மத்திய அரசு விரிவான விவாதங்களை அனுமதிக்காமல் இச்சட்டத்தை திருத்தியுள்ளது.
1967-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்த சட்டத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு ’பொடா சட்டம்’ ரத்து செய்யப்பட்டவுடன் அதில் இருந்த கொடும் பிரிவுகள் சட்டத்திருத்தம் என்ற பெயரால் யு.ஏ.பி.ஏ சட்டத்தில் சேர்க்கப்பட்டன. அதன் பிறகு 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தின் போது தேசத்தில் நிலவிய தீவிரவாத பீதியை சாதகமாக்கிக்கொண்டு மத்திய அரசு 2-வது முறையாக இச்சட்டத்தை திருத்தி அதன் கடுமையை அதிகரித்தது. இப்போது 3-வது முறையாக மீண்டும் திருத்தப்பட்டு இன்னும் பல கொடும் பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
தடா, பொடா போன்ற கருப்புச் சட்டங்களைப் பற்றி மக்களிடையே இருந்த விழிப்புணர்வு போன்று இந்த யு.ஏ.பி.ஏ சட்டத்தைப் பற்றி விழிப்புணர்வு இல்லை. தீவிரவாதம் என்ற பெயரால் முஸ்லிம் இளைஞர்களும், மாவோயிசம், நக்சலிசம் என்ற பெயரால் தலித் மற்றும் பழங்குடியின மக்களும் இந்த சட்டத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர்.
கருத்துரிமை (Freedom of Expression), அமைப்பாக ஒன்று சேர்ந்து செயல்படும் உரிமை (Freedom of Association) போன்ற அரசியலமைப்புச் சட்ட உரிமைகளும், அரசியல் உரிமைகளும் (Political Rights), ஜனநாயக உரிமைகளும் (Democratic Rights) இச்சட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்படுகின்றன.
இச்சட்டம் பற்றி மக்களிடையே நிலவும் விழிப்புணர்வின்மை, இச்சட்டத்தை எதிர்த்து எதுவும் பேசாமல் அமைதி காக்கும் மவுனமான நிலை அல்லது இந்தக் கருப்புச் சட்டத்திற்கு எதிரான போராட்டக் களத்தில் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்கும் நிலை ஆகியவை ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் ஆபத்தாகும். அதுமட்டுமல்ல, ஜனநாயகத்தை பின்பற்றும் மக்களுக்கும் இது ஆபத்தான அறிகுறியாகும்.
எனவே, இந்த யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கொடூரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இச்சட்டத்திற்கு எதிராக வீரியமிக்க மக்கள் திரள் போராட்டத்தை பொதுத்தளங்களில் எடுத்துச் செல்லவும், இச்சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தொடர் பிரச்சார இயக்கத்தை துவக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
”யு.ஏ.பி.ஏ எதிர்ப்பு கூட்டியக்கம்” என்ற பெயரில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் எடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை அமைப்புகள், சமூக இயக்கங்கள், தலித் அமைப்புகள், ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர் பிரச்சாரம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இப்பிரச்சாரத்தில் யு.ஏ.பி.ஏவைப் போன்ற மற்றொரு கருப்புச் சட்டமான ’ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தையும்’ (AFPSA) ரத்து செய்ய இந்த இயக்கம் மத்திய அரசை வலியுறுத்தும்.
இந்தப் போராட்டத்தில் பொது மக்கள் அனைவரும் தங்களை இணைத்துக் கொண்டு யு.ஏ.பி.ஏ என்ற கருப்புச் சட்டத்திற்கு எதிரான வலுவான போராட்டத்தை எடுத்துச் செல்லுமாறு ’யு.ஏ.பி.ஏ. எதிர்ப்பு கூட்டியக்கம்’ கேட்டுக் கொள்கிறது.
இக்கூட்டத்தில் NCHRO, PUHR, PUCL, CRP மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment