Saturday, November 10, 2012

ஜோடிக்கப்பட்ட தீவிரவாத வழக்குகளை வாபஸ் பெறுகிறது உ.பி. அரசு!

Akhilesh's move to withdraw cases against 'falsely implicated' terror accused, challenged
புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலத்தில் அப்பாவி முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட ஜோடிக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதுக் குறித்து அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அரசு ஆலோசித்து வருகிறது.
நான்கு குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளைத்தான் உ.பி அரசு வாபஸ் பெறவிருக்கிறது.

2006-ஆம் ஆண்டு வாரணாசியில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு, 2007-ஆம் ஆண்டு மூன்று நீதிமன்றங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள், 2007-ஆம் ஆண்டு கோரக்பூர் குண்டுவெடிப்பு, 2008 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் கோரக்பூர் சி.ஆர்.பி.எஃப் முகாமில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஆகிய வழக்குகளில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் விடுதலை நிதர்சனமாகும் சூழல் உருவாகியுள்ளது.
இதில் வாரணாசி குண்டுவெடிப்பைத் தவிர இதர குண்டுவெடிப்புகளைக் குறித்த மாவட்ட அதிகாரிகளின் அறிக்கை மாநில சட்டத்துறைக்கு கிடைத்துள்ளது. வாரணாசி அறிக்கையும் உடனடியாக கிடைக்கும். கோரக்பூர் வழக்கைத் தவிர இதர வழக்குகளின் விசாரணை தற்போதும் தொடருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு பிறகு வழக்குகளை வாபஸ் பெறும் விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும். இதற்காக தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகள், சட்டத்துறை, உள்துறை, மாநில போலீஸ் துறை தலைவர்கள் ஆகியோரின் கூட்டத்திற்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.
வாராணாசி குண்டுவெடிப்பில் ஏழுபேரும், ராம்பூர் தாக்குதலில் ஏழு சி.ஆர்.பி.எஃப் வீரர்களும், ஒரு ரிக்ஷா ஓட்டுநரும் பலியானார்கள். லக்னோ, பராபங்கி, ஃபைசாபாத் நீதிமன்றங்களில் 2007-ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்புகளில் எல்லாம் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் அநியாயமாக கைதுச் செய்து சிறையில் அடைத்துள்ளது.
அகிலேஷ் யாதவ் ஆட்சிக்கு வந்த 6 மாதத்திற்குள் உ.பி மாநிலத்தில் ஏராளமான தாக்குதல்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்துள்ளது. இதனை ஆயுதமாக்கி மாயாவதி அகிலேஷ் அரசுக்கு எதிராக பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
இந்த சூழலில் தேர்தல் அறிக்கையில் வாக்களித்தபடி முஸ்லிம்களுக்கு எதிராக பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்குகளை
வாபஸ் பெற அகிலேஷ் யாதவ் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza