புதுடெல்லி:அணுக் கழிவுப் பொருள்களைக் கோலார் தங்க வயல் சுரங்கத்தில் கொட்டும் நோக்கம் இல்லை என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையின்போது, கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அணுக் கழிவுகள் எவ்வாறு அகற்றப்படும்? என்பதை விளக்குமாறும் உத்தரவிட்டனர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அணு சக்தி கார்ப்பரேஷன் (என்.பி.சி.ஐ.எல்) நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது. அதில், அணுக்கழிவுகளைக் கொட்டுவதற்கான இடம் குறிப்பிடப்படவில்லை. “கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில் உள்ள கைவிடப்பட்ட ஒரு சுரங்கத்தில் தரைக்கு அடியிலான ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கூடங்குளம் அணு உலைக் கழிவுகளைக் கோலார் சுரங்கத்தில் கொட்டப் போவதாக ஊடகங்களில் பரபரப்புத் தகவல்கள் வெளிவந்தன.இதை எதிர்த்து கோலார் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், என்.பி.சி.ஐ.எல். நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை துணைப் பிரமாணப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்தது. அதில், “நாங்கள் ஏற்கெனவே சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்ட கருத்துகளைச் சில ஊடகங்கள் தவறாக வெளியிட்டு விட்டன. இந்த விவகாரத்தின் தீவிரத்தையும் மக்கள் நலனையும் மனதில் கொண்டு, விளக்கம் தருகிறோம்.
அணுக் கழிவுகளைக் கொட்டுவதற்கான இடமாக கோலார் தங்க வயலின் எந்தச் சுரங்கமும் தேர்வு செய்யப்படவில்லை என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்துகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக அதன் சுற்றுவட்டார மக்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் அடக்குமுறைகளை மத்திய-மாநில அரசுகள் கையாண்டு வருகின்றன.
இந்நிலையில் அணுக்கழிவுகளை கர்நாடகா மாநில கோலார் தங்க வயலில் மூடப்பட்ட சுரங்கத்தில் தேக்கி வைக்க போவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த உடனேயே கோலார் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்தே அத்திட்டத்தை கைவிட்டுள்ளது மத்திய அரசு. அதைப்போலவே கூடங்குளம் சுற்றுவட்டார மக்களின் நலன்களை குறித்து கவலைப் படாமல் அணு உலையை ஆதரிக்கும் பா.ஜ.க கர்நாடகாவில் கோலாரில் அணுக்கழிவுகளை தேக்கி வைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதிலிருந்தே காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவின் இரட்டை வேடத்தைப் புரிந்துகொள்ளலாம்
0 கருத்துரைகள்:
Post a Comment