புது தில்லி : கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் தீவிரமாக இருக்கும் சூழலில் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு சர்வதேச அறிவு ஜீவிகள் மத்தியில் ஆதரவு குவிந்து வருகிறது.
சர்வதேச கல்வியாளரும் அரசியல் விமர்சகருமான அமெரிக்காவை சார்ந்த நோம் சோம்ஸ்கி கூடங்குள அணு உலையை எதிர்த்து போராடும் மக்களுக்கு அனுப்பியுள்ள மடலில் கூடங்குளம் என்பது காத்திருப்பில் உள்ள போபால் பேரழிவு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அம்மடலில் அணு சக்தி என்பது ஆபத்தான முன்னுதாரணம் என்றும் போபால் போன்ற தொழிற்சாலை பேரழிவுகள் நடந்துள்ள நாடான இந்தியாவில் மேலும் ஆபத்தானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடும் மக்களின் தைரியத்துக்கு தான் தலைவணங்குவதாகவும் சோம்ஸ்கி கூறியுள்ளார். தன் கருத்தை பட்டவர்த்தனமாக கூறும் இயல்புடைய சோம்ஸ்கி சிறந்த மொழியியலாளர், தத்துவவாதி, விஞ்ஞானி, தர்க்கவியலாளர், வரலாற்று மற்றும் அரசியல் விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.
சோம்ஸ்கியின் ஆதரவு கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கையில் உள்ள மீனவர்களுக்கு மனவலிமையை அளித்துள்ளதாக கூறுகிறார் தேசிய மீனவர் அமைப்பின் செயலர் பீட்டர். சர்வதேச இடதுசாரியான சோம்ஸ்கியே அணு உலையை எதிர்க்கும் போது இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் ஏன் குழம்பியுள்ளனர் என்பது தெரியவில்லை என்று எழுத்தாளர் சிவிக் சந்திரனும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தம் வாழ்வை பணயம் வைத்து அணு உலையை எதிர்த்து போராடும் கூடங்குளம் மக்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்று 1976ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மைரேட் மகுயிர் பாராட்டியுள்ளார். கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனும் அணு குண்டு தேவையில்லை என்று கூறியுள்ளார்.
டென்மார்க்கின் சிவப்பு-பச்சை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் ஜுஹ்லும் கூடங்குள மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜெயசூரியா “கூடங்குளம் அணு உலை என்பது இன்னொரு புகுஷிமாவை உருவாக்குவதாகும். தமிழர்கள், சிங்களர்கள், இந்தியர்கள் மேல் நடத்தப்படும் கூட்டு இன சுத்திகரிப்பு” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"அணு மின் திட்டத்தை நிறுத்த மக்கள் இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும் " என்று கூறியுள்ள அயர்லாந்து சோசலிச கட்சியின் உறுப்பினர் பவுல் முர்பி, "பேராசை பிடித்த அணு உலை லாபியை குறித்து ஐரோப்பா முழுதும் பிரசாரம் செய்வேன்" என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஜெர்மனியின் சோசலிச மாற்று கட்சியின் செய்தி தொடர்பாளர் லூஸி ரெட்லர், இந்திய பாரம்பரிய நடன கலைஞரும் சமூக சேவகருமான மல்லிகா சாராபாய், மருத்துவர் பினாயக் சென், எழுத்தாளர் அருந்ததி ராய், அணு விஞ்ஞானி பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கூடங்குள மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
source: inneram.com
0 கருத்துரைகள்:
Post a Comment