புதுடெல்லி:ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் அப்பாவி மக்களை கொன்றுக் குவிக்கும் இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலை கண்டித்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி மனித உரிமை ஆர்வலர்களும், மாணவர்களும் கண்டனப் பேரணி நடத்தினர். என்.சி.ஹெச்.ஆர்.ஓ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஐஸா, ஜெ.என்.யூ ஸ்டுடண்ட்ஸ் யூனியன், எ.ஐ.பி.டபிள்யூ.எ, எ.ஐ.சி.சி.டி.யூ, எல்.டி.டி.எஃப் உள்ளிட்ட அமைப்புகளின் தலைமையில் இந்த கண்டனப்பேரணி நடைபெற்றது.
அவரங்கசீப்-ஜன்பத் சாலை சந்திப்பில் இருந்து துவங்கிய பேரணி, இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி செல்லும் வழியில் போலீஸ் தடுப்புகளை ஏற்படுத்தி தடைசெய்தது. இஸ்ரேல் மீதான கடும் எதிர்ப்பால் கொந்தளித்த மக்கள் போலீசின் தடுப்புகளை மீற முயன்ற போது தலைவர்கள் தலையிட்டு தடுத்தனர். நிரபராதிகளின் இரத்தத்தை உறியும் புற்றுநோய்தான் இஸ்ரேல் என்றுஎன்.சி.ஹெச்.ஆர்.ஓ தேசிய செயலாளர் வழக்கறிஞர் எ.முஹம்மது யூசுஃப் கூறினார்.
இந்த போராட்டம் அடையாளம் மட்டுமே. இஸ்ரேல் கூட்டுப்படுகொலையை தொடர்ந்தால், கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாணவர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜெ.என்.யு) மாணவர் யூனியன் தலைவர் லெனின் கூறினார். நிரபராதிகளான ஃபலஸ்தீன் மக்களை கொலை செய்வதை நிறுத்தும் வரை இத்தகைய போராட்டங்கள் உலகமெங்கும் தொடரும் என்று ஜெ.என்.யு பேராசிரியர் கமால் மித்தர் கூறினார்.
இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும் என்றும், சுதந்திர ஃபலஸ்தீனை உருவாக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment