Wednesday, November 14, 2012

இன்று "பழனி பாபா" பிறந்த நாள்!


1950 நவம்பர் 14 ஆம் நாள், என்.வி.முஹம்மது அலி - கதீஜா பீவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், "பழனிபாபா". இயற்பெயர் அஹமது அலி.

ஒடுக்கப்பட்டோர் அரசியல் விடுதலை; இஸ்லாமிய கருத்தியல்; சிறுபான்மையினர் பாதுகாப்பு; உழைக்கும் வர்க்கச் சார்பு; முஸ்லிம் சமுதாய விழிப்புணர்வு; என, தனது கொள்கைகளை வரையறுத்துக் கொண்ட அவர், அக்கொள்கைகளின் அடிப்படையில் மிகத் தீவிரமாக களமிறங்கினார்.

தமிழகத்தில் அவர் பயணிக்காத கிராமங்களே இல்லை.1980 களில் நிகழ்ந்த மீனாட்சிபுரம் மதமாற்றத்தை தொடர்ந்து, குமரிமாவட்டம் மண்டைக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். கலவரம் செய்தது.

'இந்து முன்னணி' என்ற பெயரில் களமிறங்கிய இந்துத்துவ சக்திகள், அமைதிப்பூங்காவான தமிழகத்தை அமளிக்காடாக்கினர். விநாயகர் ஊர்வலத்தை அறிமுகப்படுத்தி, முஸ்லிம்களை வம்புக்கு இழுத்தனர்.

'காமவெறியில் விஞ்சி நிற்பவள் கதீஜாவா? அன்னை மேரியா? மணியம்மையா?' என்ற தலைப்பில் பட்டிமன்றங்களை நடத்தினர்.

முஸ்லிம்களின் உயிருக்கு உயிரான நபிகளாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்தனர். ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இத்தகைய அராஜகச் செயல்களால் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்தது.

இந்துத்துவ வெறியர்களின் கோரத்தாக்குதலுக்கு இலக்காகிய முஸ்லிம்கள், பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். பேசவே பயந்து, வாய் பொத்தி ஊமையாய்க் கிடந்த சமூகத்திற்கு, கேள்வி கேட்க கற்றுத் தந்தார்.

இந்து முன்னணியின் மதவெறிக் கூட்டங்களுக்கு எதிர் கூட்டம் போட்டு, தமது அபாரமான பேச்சுத் திறனால் தக்க பதிலடி கொடுத்தார். அவர் கலவரத்தை விதைத்தவர் இல்லை; கலவரத்தை விதைத்தவர்களுக்கு எதிரான கருத்தை விதைத்தவர்.

பாபாவின் தனித் திறமைகளினாலும், நாவண்மையினாலும் ஈர்க்கப்பட்ட அரசியல் தலைவர்களும், சமூக சிந்தனையாளர்களும் அவருக்கு நெருக்கமானார்கள். பழனிபாபா, தனது பொதுவாழ்க்கைப் பயணத்தில், முதலில் எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்தார்.

பின்னர் கலைஞருடன் இருந்தார்.ஒரு கட்டத்தில் கலைஞருடனும் முரண்பட்டார் பாபா. இறுதியில், டாக்டர் ராமதாசோடு நெருங்கிய பாபா, அவரோடும் முரண்பட்டு விலகினார்.

பழனிபாபா, எம்ஜிஆரையும் - கலைஞரையும் - ராமதாசையும், சமுதாயத்திற்காகவே ஆதரித்தார்; சமுதாயத்திற்காகவே எதிர்த்தார்.

சுயநல அரசியலையோ, அல்லது பிழைப்புவாத அரசியலையோ அவர் முன்னெடுத்திருந்தால் எந்தத் தலைவரோடும் அவருக்கு முரண்பாடுகள் ஏற்பட்டிருக்காது.

1997, ஜனவரி 28 ஆம் நாள் பழனிபாபா படுகொலை செய்யப்பட்டார்.

'நான் வாழ வந்தவனல்ல; மாள வந்தவன்' என்று செல்லுமிடமெல்லாம் முழங்கிய அவர் சொன்னது போலவே மாண்டுபோனார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza