ஹைதராபாத்:வரலாற்றுச் சிறப்பு மிக்க சார்மினாரின் அருகே கோயில் கட்டுவதை நிறுத்திவைக்க கோரி போராட்டம் நடத்திய மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீனின்(எம்.ஐ.எம்) 5 எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர். அப்பகுதியில் கடந்த சில தினங்களாக மோதல் சூழல் நீடித்து வருகிறது. எம்.ஐ.எம் தலைவர் அக்பருத்தீன் உவைஸியும் கைது செய்யப்பட்டவர்கள் அடங்குவார்.
சார்மினாரின் சுற்றுவட்டாரப் பகுதியில் கோயில் கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்கக் கோரி எம்.ஐ.எம் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கட்சி அளித்த புகாரை தொடர்ந்து சார்மினார் அருகே பழையை நிலை நீடிக்கவேண்டும் என்றும், கட்டுமானப் பணிகள் கூடாது என்றும் ஆந்திரமாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகும் அதனை மீறும் செயல்கள் நடைபெறுவதாக எம்.ஐ.எம் குற்றம் சாட்டுகிறது. சார்மினார் பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சார்மினார் வளாகத்தில் கோவில் பணிகள் நடத்தக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறியது, மிகவும் மோசமானது, என்று விமர்சித்துள்ளார் "தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி" (TRS) கட்சியின் தலைவர், சந்திர சேகர் ராவ்.
கடைகளை மூடச்செய்து விட்டு, கண்ணீர் புகை குண்டுகளை வீசி - தடியடி பிரயோகம் செய்து மக்களை கலைத்துவிட்டு, சங்கபரிவாரங்களை சந்தோஷப்படுத்த "காட்டு தர்பார்" நடத்தியுள்ளது, நகரின் அமைதியை சீர்குலைக்கும் செயல் என்றார்.
மேலும், இந்த இழிசெயலுக்கு துணைபுரிந்த போலீஸ் கமிஷனரை கண்டித்த அவர், இதற்க்கான முழு பொறுப்பும் மாநில முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர்களே, என கடுமையாக சாடினார்,ராவ்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் சமூக இளைஞர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவும் வலியுறுத்தினார், டி.ஆர்.எஸ். தலைவர்,சந்திர சேகர் ராவ்.
0 கருத்துரைகள்:
Post a Comment