Thursday, November 1, 2012

மோடியின் குற்றத்தை மறைக்கும் ஒளிரும் குஜராத்!-ஆனந்த் தெல்டும்டே!!

குஜராத்தில் முஸ்லிம் மக்கள் எவ்வாறு இந்துத்துவ சக்திகளால் தேர்ந்த திட்டமிடலுடன் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வண்ணம் 2002 -ஆம் ஆண்டு கொன்றழிக்கப்பட்டார்கள் என்பதை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு.


சற்று அதனை நினைத்துப் பார்க்கும் போதே எனக்கு முதுகுத்தண்டு சில்லிடுகின்றது. குஜராத்தில் முசுலிம் மக்கள் எவ்வாறு இந்துத்துவ சக்திகளால் தேர்ந்த திட்டமிடலுடன் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வண்ணம் 2002 -ஆம் ஆண்டு கொன்றழிக்கப்பட்டார்கள் என்பதை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. அது 2002 -ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 4 -ஆம் தேதி. இனப்படுகொலைகள் தொடங்கி 5 நாட்கள் ஆகியிருந்தது. குஜராத்திலிருந்து வந்து கொண்டிருந்த ரத்தம் தோய்ந்த கதைகள் எவர் ஒருவரையும் போலவே என்னையும் கலக்கமுறச் செய்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் ஒரு மனித உரிமைச் செயல்பாட்டாளனுக்கு  இருக்க வேண்டிய துணிச்சலுடன் நான் அகமதாபாத் விரைந்தேன். அகமதாபாத், நான்  ‘ இந்திய மேலாண்மைக் கழகத்தில்’ படித்த காலத்தில் என் நேசத்துக்குரிய நகரமாக இருந்தது.

அகமதாபாத்திற்கு நான் பயணித்த விமானத்தின் இருக்கைகள் பத்து சதவீதம் மட்டுமே நிரம்பியிருந்தது. விமான நிலையத்தில் இறங்கிய போது எவ்வித மோசமான அறிகுறிகளும் தென்படவில்லை. நகருக்குள் காரில் சென்ற போது எங்கும் கடந்த மூன்று நாட்களின் கொடூரத் தழும்புகள் அதன் தீவிரத்துடன் என் முன் எழுந்து நின்றது. என்னுடன் காரில் உயர்வர்க்கத்தைச் சேர்ந்த  முசுலிம் நண்பர் ஒருவர் உடன் வந்தார். வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவருடன் செல்லத் திட்டமிட்டேன். கார் ஓட்டுநர் எனது நோக்கம் பற்றி எதுவும் புரியாமல் சற்று கலக்கத்துடன் இருந்தார். எனினும் அதனை வெளிக்காட்டாதவராக ஒரு செயற்கையான அமைதியை முகத்தில் தவழ விட்டுக் கொண்டிருந்தா ர்.
எங்களுடைய முதல் சுற்றிலேயே 20 பேர் கொண்ட கும்பல் ஒன்றால் வழிமறிக்கப்பட்டோம். அடுக்கடுக்காகக் கேள்விகளை எம் முன் வீசினார்கள். பயத்தை எந்தச் சூழ்நிலையிலும் வெளிப்படுத்தக் கூடாது என்ற முடிவில், தைரியத்தை சற்று வரவழைத்துக் கொண்டு, நான் ஒரு இசுலாமியராக இருந்தால் என்னை என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். எனது கேள்வி அந்த கூட்டத்துக்குள் சிறு சலசலப்பை உண்டாக்கியது. உடனே கார் ஓட்டுநர் குறுக்கிட்டு அவர்களுடன் குஜராத்தி மொழியில் பேசலானார். நான் மும்பையிலிருந்து வந்திருக்கும் ஒரு பெரிய அதிகாரி என்று தெரிவித்தார். எதற்கும் தயாரான கூட்டம் அது. எங்கள் காரை சேதப்படுத்தவும் செய்யலாம்; எங்களைத் தாக்கவோ, ஏன் உயிரைப் பறிக்கவோ கூட செய்திருப்பர். ஆனால், சந்தர்ப்பவசமாக எங்களை எச்சரித்து மட்டுமே அனுப்பினர்.
தற்காலிமாக உருவெடுத்த கல்லறைகளில் அப்பாவி மனிதர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கொடுங்கனவில் இருந்து மீள முடியாமல் தப்பிப் பிழைத்தவர்களின் வெறுமை சூழ்ந்த கண்கள்; முகாம்களில் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து, ஈக்கள் மொய்க்க அரைப் பட்டினியோடு சில குடும்பத்தினர் இருந்தார்கள். இன்னொரு பக்கம் தன்னார்வத் தொண்டர்கள் முகாமில் முடக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உழைத்துக் கொண்டிருந்ததோடு, ஊடகங்களுக்கு நிலைமைகளை விளக்கிக் கொண்டும் இருந்தார்கள். கண்ணுக்கு எட்டும் தூரத்தில் பாதி எரிந்து சாம்பலான வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் இழந்த வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளை எழுப்பிக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு முகாமிலும் சோகம் மற்றவற்றை விஞ்சிய வண்ணம் ஒரு காப்பியத் துயரமாக விரிந்து எங்கள் உணர்ச்சிகளைக் கொன்று தின்றது. மதியம் IIM  மாணவர்களைச் சந்தித்தேன். அதன் பிறகு ‘பிரஷாந்த்’ மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என்னிடம் காண்பித்த படுகொலை காட்சிகளில் இருந்த பாதி எரிக்கப்பட்ட குழந்தைகளின் படங்கள் என்னைக் கதறியழச் செய்தது. அன்று மாலை ‘நடத்தை அறிவியல் மையத்தில்’ நடைபெற்ற கூட்டம் என் உணர்ச்சிகளுக்குச் சற்று உயிர் கொடுத்தது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது பாதிப்புகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு, மறுநிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், நரேந்திர மோடி மிகக் குரூரமாக தனது அரசாங்கத்தை முற்றிலுமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விலக்கிக் கொண்டார். இதன் மூலம், நாம் ஒவ்வொருவரும் நம்புவது போல இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் முதல்வர் நரேந்திர மோடி இருப்பதற்கான திட்டவட்ட ஆதாரத்தை அவரே அளித்துக் கொண்டிருந்தார். மனித குலம் மோடியின் நடத்தையைக் கடுமையாக கண்டித்த பிறகே லேசாக சில ஒட்டு வேலைகளை அவர் செய்தார்.

வெட்கமில்லை, வேதனையுமில்லை

எண்ணிறந்த உண்மையறியும் குழுக்கள் குஜராத்தைப் பார்வையிட்டு, துயரத்தின் ரத்தம் தோய்ந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்கள். அனைத்து அறிக்கைகளும் இந்த மனிதப் பேரழிவுக்குப் பின்னால் மாநில அரசும், மோடியின் தனிப்பட்ட பங்கும் இருப்பதைச் சுட்டிக் காட்டுவதில் தமக்குள் ஒத்திருந்தன. 2005 மே மாதம் ராஜ்யசபாவில் 254 இந்துக்களும், 790 முசுலிம்களும் கோத்ரா சம்பவத்திற்கு பிந்தைய வன்முறையில் கொல்லப்பட்டதாக அரசு ஒரு கணக்கை முன்வைத்தது. 223 மக்கள் காணாமல் போனவர்களாகவும், 258 பேர் காயம்பட்டவர்களாகவும், 919 பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டதாகவும் மற்றும் 606 குழந்தைகள் அநாதைகள் ஆனதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தப் புள்ளி விபரங்களின் மோசடியை மனித உரிமை ஆர்வலர்கள் கேள்விக்குள்ளாக்கினர்.  இந்துக்கள் படுகொலையில் சேர்க்கப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்கள். முசுலிம் மக்கள் படுகொலையில் இவர்கள் காலாட்படையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். சேதப்படுத்தப்பட்ட சொத்துக்கள் அனைத்துமே இசுலாமிய மக்களுடையவை.
அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது போல மோடி அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சராக இரூந்திருந்தால் மக்களின் வாழ்க்கை மீதும், உடைமை மீதும் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக நேர்மையான முறையில் வருத்தத்தைத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் மோடியும், அவருடைய சீடர்களும் திரும்பத் திரும்ப முசுலிம் மக்கள் படுகொலைக்கும், சந்தேகமான முறையில் 2002 பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி சபர்மதி ரயிலின் ஒரு பெட்டி எரிக்கப்பட்டதற்கும் குமட்டலூட்டும் முடிச்சினைப் போட்டு பேசி வந்தார்கள். இந்த வக்கிரம் மோடி மற்றும் பி.ஜே.பியை இன்னும் அதிகமாக அம்பலப்படுத்தியது. அவர்கள் நினைப்பது போல அவர்கள் குற்றத்தை மறைக்கவில்லை.
அரசு சார் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் விசாரணை முடிவுகள், நீதிமன்றங்கள் மற்றும் உலகெங்கிலுமிருந்து வந்த கண்டனங்களால் ஏற்பட்ட அவமானங்கள் எதனையும் பொருட்படுத்தாமல் மோடி தனது வில்லங்க செயல்பாடுகள் மூலம் இந்த இனப்படுகொலையை நியாயப்படுத்தி வருகின்றார். கோத்ரா சம்பவத்தின் எதிர்விளைவே இந்த இனப்படுகொலைகள் என்றும் பேசி வருகிறார். மைய அரசு அமைத்த பானர்ஜி கமிஷன் கோத்ரா ஒரு எதிர்பாராத சோக சம்பவம் என்று கூறியது. இந்த அறிக்கையை மாநில அரசு உடனடியாக எதிர்த்தது. கோத்ரா ரயில் எரிப்பின் பயனாளிகள் யாரென்பதை வைத்துப் பார்த்தால், அந்த ரயில் எரிப்புக்குக் காரணமானவர்கள் இந்துத்துவ சக்திகளாகக் கூட இருக்கக் கூடும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. மோடி பெற்ற மாபெரும் வெற்றிகளுக்கும் இன்று பிரதமர் வேட்பாளராக மோடி முன்தள்ளப்படுவதற்கும் அடிப்படை கோத்ரா சம்பவத்திற்கு பிந்தைய முசுலிம் படுகொலைகள் என்பதை ஒருவர் மறந்து விட முடியாது.

ஒளிரும் குஜராத்தின் பொய்கள்

2002 படுகொலைகளுடன் தொடர்பற்றது எனினும் மோடியின் பிம்பத்தைக் கடந்த பத்தாண்டுகளாகக் கட்டமைக்க பயன்பட்ட பொய் எதுவென்றால், குஜராத் முன்னேறுகிறது; ஒளிர்கிறது என்பதாகும்.  இது 2002 இல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்று கோருபவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகிறது. இந்த கோரிக்கையை எழுப்பும் மனித உரிமை ஆர்வலர்கள் குஜராத் மக்களனைவருக்கும் எதிராக இருப்பதாக அவர்களை பழித்துப் பேச பயன்படுத்துகிறார்கள்.. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் கோரிக்கையை திசைதிருப்பும் விதமாக ‘மறப்போம் , அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்’ என்றும் பேசி வருகிறார்கள். முகாம்களை திடீரென மூடிய மோடி, ‘அனைத்தும் சரியாகி விட்டது’ என்று அறிவித்தார். அதன் பிறகு 2003 இல் ‘ஒளிரும் குஜராத் சம்மேளனம்’ எனும் கொண்டாட்டம் ஒன்றை அறிவித்தார். முதலீட்டாளர் அனைவருக்கும் பண்டைய நவாப் பாணியில் மானியங்களை வாரி வழங்கினார். இது முதலாளிகளின் பாராட்டைப் பெற வைத்ததோடு, பிரதமர் வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்தவும் பயன்பட்டது. குஜராத்தின் வளர்ச்சிக்குப் பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பெரியளவுக்கு விளம்பரப்படுத்தப்பட்டது.
ஆனால் தகவல் பெறும் உரிமையின் கீழ் அதனை விசாரித்ததில், விளம்பரப்படுத்தப்பட்ட தொகையில் 25 % மட்டுமே, அதாவது மகாராஷ்டிரா, தமிழகம் அளவுக்கு மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2003 -இல் திட்டக்குழு எடுத்த கணக்கெடுப்பின்படி குஜராத்தின் 25 மாவட்டங்களில் 20 பின்தங்கிய மாவட்டங்கள் பட்டியலில் இருந்தது. அவற்றில் 6 மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் இருந்தது. சமூக வளர்ச்சிப் புள்ளி விகிதத்தில் பின்தங்கியிருப்பதோடு, சமூகத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில், 18 பெரிய  மாநிலங்களில்  17வது இடத்தில் இருக்கிறது.
தன்னை நவீன குஜராத்தின் சிற்பி என்று கட்டமைத்துக் கொள்ள மோடி, மிகப்பெரிய அளவுக்கு மக்கள் தொடர்புப் பணிகளைக் கட்டவிழ்த்து விட்டார். உண்மை என்னவென்றால், குஜராத் ஏற்கெனவே தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தின் வளர்ச்சி விகிதம் 12 சதவிகிதத்திலிருந்து 13 சதவிகிதமாக இருந்தது. இன்று அது 11 சதவிகிதமாக, தேசிய வளர்ச்சி விகிதத்தில் சற்றே மேம்பட்ட நிலையில் இருக்கிறது.
மாநிலத்தின் கஜானாவை பெருமுதலாளிகளுக்குக் கொள்ளையடிக்கத் திறந்து விட்டதன் மூலம் குஜராத்திலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாக துணை புரிந்தார் மோடி. அதே நேரத்தில் சாதாரண மக்கள் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பபட்டனர். சர்வதேச உணவுக்கொள்கை ஆய்வு நிறுவனத்தின் ’2008 இந்திய மாநிலங்களின் வறுமை நிலவரம்’ பற்றிய அறிக்கையில் குஜராத், ஒரிசாவை விடக் கீழாக உள்ளது. 17 பெரிய மாநிலகளில் 13 வது இடத்தில், அதாவது சட்டிஸ்கார், ஜார்கண்ட், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்துக்குக் கொஞ்சம் மேலே இருக்கிறது.
ரத்த சோகையால் பாதிக்கப்படும் பெண்களின் சதவிகிதம் 1999 இல் 46 .3 % இருந்து 2004 இல் 55 .5 ஆக உயர்ந்துள்ளது. குழந்தைகளில் 74 .5 ஆக இருந்த ரத்தசோகை சதவிகிதம் 80 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2006 இல் எடுத்த மூன்றாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பில் இந்த உண்மைகள் காணக் கிடைக்கின்றது. மாநில காங்கிரசு கட்சியின் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா கூற்றுப்படி  16000 குஜராத்திகள் மோடியின் ஆட்சிக் காலத்தில் தற்கொலை செய்துள்ளனர் .  அவர்களில் 9 ,829 பேர் தொழிலாளர்கள், 5 ,447 பேர் விவசாயிகள், 919 பேர் பண்ணை தொழிலாளர்கள்.

சத்பவனா நாடகம்

ஒரு சிறு குற்றவுணர்ச்சி கூட இல்லாமல், இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர் ஒருவரைக் கூட நேரில் சென்று பார்க்காமல் அதன் 10 வது ஆண்டு நினைவு தினத்தில் சத்பாவனா நாடகத்தை நிகழ்த்தினார் மோடி. தனிச்சிறை போன்ற சேரியில் அடைத்து, வகுப்புவாதத் தீ படரும் ஆபத்தை எண்ணி இப்போதும் பயத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள், அகமதாபாத்தின் முசுலிம் மக்கள். ஆனால் மோடியோ முசுலிம்கள், தலித்துகள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களில் சிலரை மட்டும் பொறுக்கி எடுத்து ‘வகுப்பு ஒற்றுமை’ என்று விளம்பரப்படுத்துகிறார். நீதியை எதிர்பார்த்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் காயங்களில் உப்பைத் தேய்ப்பதற்கு சற்றும் குறைவில்லாத மோசடி இது. தனது பாவங்களுக்கு மோடி தண்டிக்கப்படுவார் என்பது நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று.
பணம் படைத்தவர்களையும், செல்வாக்கு மிக்கவர்களையும் காப்பாற்றும் அதே வேளையில், சாதாரண மக்களை வெறும் கற்பனாவாத நம்பிக்கையில் ஆழ்த்தும் ஒரு அரசமைப்பு நம்முடையது என்பது நிரூபணம் ஆன ஒன்று. பத்து ஆண்டுகளாக நடந்து வரும் சட்டப் போராட்டங்கள் சில நீதித் துணுக்குகளை, அதுவும் மோடிக்கு ஆதரவான முறையிலே வழங்கியுள்ளது. கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி எஹ்சான் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கு தனது கணவருடன் 66 பேர் குல்பெர்க் சொசைட்டியில் கொல்லப்பட்டது சம்பந்தமானது. 62 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழு [SIT ] அவர்கள் 62 பேர் மீதோ அல்லது இந்தப் படுகொலைக்கு மூளையாகச் செயல்பட்ட மோடி மீதோ எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை. ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் சாட்சியம் கண்டுகொள்ளப்படவில்லை. மோடியின் குற்ற நடவடிக்கைகளின் எல்லை 2002 இனப்படுகொலையோடு முடிந்து விடக் கூடிய ஒன்றுமல்ல. ஹரேன் பாண்டியா வழக்கில், அவர் குடும்பத்தினர் போலீசின் விசாரணை நடவடிக்கையில் திருப்தியில்லாமல் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி போலி மோதல் முறையில் கொல்லப்பட்டவர்களின் வழக்குகள் நிறைய நிலுவையில் நிற்கின்றன. அவற்றில் ஒன்றின் நீதிக்காக நான் போராடி வருகிறேன்.  19 வயது மாணவி, இஷ்ரத் ஜகான் போலி மோதல் முறையில் கொல்லப்பட்ட  இந்த வழக்கு பலராலும் போலியானது என்று கூறப்படும் ஒன்று. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் இருக்கும் இந்த வழக்கில் நீதி கிடைக்குமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இந்த சம்பவமும், வழக்கின் போக்கும் மற்ற ‘பயங்கரவாதத் தாக்குதல்களின்’ உண்மைத் தன்மையை ஒருவர் ஊகித்தறியப் போதுமானதாக உள்ளது. இது போன்ற கட்டுக்கதைகள் மோடி போன்ற மக்கள் விரோத அரசியல்வாதிகளின் நலனைக் காப்பாற்ற தயாரிக்கப்பட்டதேயன்றி வேறென்ன?
இப்போது நம்முன் இருக்கும் கேள்வி இது தான்.  இங்கிருந்து நாம் எத்திசையில் பயணிக்க இருக்கிறோம்?
-ஆனந்த் தெல்டும்டே [எழுத்தாளர் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர், மும்பை]
தமிழில் – சம்புகன்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza